காலை எழுந்து கரிய குருவிக் கணங்கள்
மாலின் வரவு சொல்லி மருள் பாடுதல் மெய்ம்மை கொலோ
இது நாச்சியார் திருமொழி.
ஆண்டாளின் திருப்பாவையில் தான் எத்தனை ஓசைகள். வலம்புரிச் சங்கு அதிரும் ஓசை. கீசு கீசென்று ஆனைச்சாத்தனின் பேச்சரவம். ஆய்ச்சியர் மத்தினால் ஓசைப்படுத்தத் தயிர் அரவம். வெள்ளை விரிசங்கின் பேரரவம். மெள்ள எழும் ஹரி என்ற பேரரவம். சிங்கம் மூரி நிமிர்ந்து முழங்கும் ஓசை. மாதவிப் பந்தல் மேல் கூவும் குயில் இனங்களின் ஓசை. செந்தாமரைக் கையாளின் வளை ஓசை.
இப்படி எல்லாம்..
நண்ணி வருமணி யோசையும்,பின்னங்கு
நாய்கள் குலைப்பதுவும்,
எண்ணுமுன்னே‘அன்னக் காவடிப் பிச்சை’யென்
றேங்கிடு வான் குரலும்,
வீதிக் கதவை அடைப்பதும் கீழ்த்திசை
விம்மிடும் சங்கொலியும்,
வாதுகள் பேசிடு மாந்தர் குரலும்
மதலை யழுங் குரலும்,
ஏதெது கொண்டு வருகுது காற்றிவை
எண்ணி லகப்படுமோ?
அது பாரதி.. மணி ஒலிக்கிறது. நாய்கள் குலைக்கின்றன. அன்னக் காவடியின் பிச்சைக் குரல். வீதிக் கதவை அடைக்கும் ஓசை. கிழக்கு திசையிலிருந்து வரும் சங்கொலி. மனிதர்கள் புரணி பேசும் குரல். குழந்தை அழும் குரல். எத்தனை எத்தனை ஓலிகள். அத்தனையும் காற்று கொண்டு வந்து காதில் சேர்க்கிறது
முன்பெல்லாம் காலை கண் விழிக்கும் போது பறவைகளின் ஒலி கேட்கும். இப்போதும் கேட்கலாம். அது நாம் வசிக்கும் இடத்தைப் பொருத்தது. சிறு வயதில் காலைப் பொழுதில் நான் வசித்த வீட்டின் பின்புறம் இருந்த பிள்ளையார் கோவிலில் இருந்து மணி ஒலிக்கும். பக்திப் பாடல்களை ஒலிக்குழாய் கொண்டு வந்து காதில் சேர்க்கும். வாசல் தெளிக்கும் சப்தம் கேட்கும். சரக்கு மூட்டை ஏற்றிச் செல்லும் வண்டியை இழுக்கும் இரட்டைக் காளைகளின் குளம்பு ஓசை கேட்கும். ஆட்களின் அரவம் டைகர் லேலண்ட் டவுன் பஸ் கடந்து செல்லும் பிரத்யேக ஓலி, ரிக்க்ஷா மணி ஓசை , கீரை விற்பவள் குரல் என்று கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தடி பரவும்.
வீட்டு வாசலில் பகற் பொழுதில் பல பலவாய் குரல்கள் கேட்கும். செட்டியார் அளந்த உப்பு என்று உரக்கக் கூவியபடி ஒருவர் தள்ளு வண்டியைத் தள்ளியபடி வருவார். வளோய் வளோய் என்று வளையல் விற்பவர் வருவார். கோலப்படி…அம்மா கோலப் பொடி ..கோலப்பொடி …என்று ஒரு பெண்மணி கோலப்பொடி கொண்டு வருவார். உரலு கல்லு அடிக்கிறியா அம்மி கல்லு அடிக்கறியா.. என்று தகரக் குரலில் கூவியபடி கல் உரலும் அம்மியும் கொத்துபவர் வருவார். பழே பேப்பார் என்று குரல் எழுப்பியபடி பழைய பேப்பர் வாங்கிச் செல்ல வரும் மனிதர். கிணறுகளைத் தூர் வாரது என்று கிணறு தூர் வாருபவர் வருவார். குடை ரிப்பேர் செய்பவர். ஸ்டேட் ஐஸ்கிரீம் என்று கத்தியபடி தலையில் கோடை வெயிலுக்காகத் தொப்பி அணிந்து வருபவர். வெள்ளரிப் பிஞ்சைக் கூவி விற்கும் பெண்மணி. நெய் கொண்டு வரும் கிழவி. காசாரெட்டு மாம்பழம் என்று மாம்பழம் போலவே இனிக்கும் குரலில் சொல்லும் பெண்மணி. இப்படிப் பல மனிதர்கள். பல விதமாய் குரல்கள்.
இரவு நேரங்களில் சிறு பெட்ரோமாகஸ் ஒளியுடன் ஒரு தள்ளு வண்டி வரும். அழகான கண்ணாடிக் குடுவையில் சோன் பப்டி மஞ்சளும் வெண்மையும் கலந்த நிறத்தில் இருக்கும். வாங்கித் தின்றால் தேனாக இனிக்கும். வண்டியின் கீழே இருக்கும் மணி ஒலிக்கும். மனதுக்கு இனிமை சேர்க்கும். வண்டியைத் தள்ளி வருபவர் தேவனைப் போலத் தெரிவார்.
இளம் வயதில் இப்படி எல்லாம் வாழ்க்கைக்கு வண்ணம் சேர்த்த மனிதர்கள் நினைவிலே வந்து வந்து போகிறார்கள். கூடவே அவர்களது தனித் தன்மை வாய்ந்த குரல்களும்….
ஆனால் அம்மா.. ராப்பிச்சை தாயே என்று ஒலிக்கும் குரல் மனதைப் பதைக்க வைக்கும். என் போன்ற சிறுவர்களைப் பயப்படுத்த உதவும் குரல் அது. கந்தை மூட்டையும் கிழிந்த ஆடைய்ம் பசித்த கண்களும்….
இரந்தும் உயிர்வாழ்தல வேண்டின் பரந்து கெடுக உலகியற்றி யான்
என்ற குறளெல்லாம் அறியாத பருவம் அல்லவா அது.?
அருமை.
ReplyDeleteசிறிய இடைவெளிக்குப்பின் மீண்டும்.
வாழ்த்துக்கள்.
நன்றி மதி
Deleteஅச்சோ.. சந்தானம். நா இதே மாரி யோசிச்சு ஓசைகள வச்சு ஒரு கதை எழுதினேன். உனக்கு அனுப்பறேன். என்னுடய உலகம் ஓசை சூழ்ந்தது.
ReplyDeleteகதை படித்தேன். மிகவும் நன்றாக இருந்தது.
Deleteநன்றி சந்தானம்
Deleteஇன்னும் சில கரல்கள்
ReplyDeleteபுகை வண்டியின் " கூ கூ"
பால் காரம்மாவின்"பால் வாங்க பால் வாங்க
ஆமாம். பால் வாங்க வாங்கவை மறந்தேன். கூடவே மதுரா மில்ஸ் ஆலைச் சங்கொலி
Delete👌👍
ReplyDeleteஅப்பப்பா எத்தனை ஓசைகள் இப்போதெல்லாம் இரு சக்ரம் மற்றும் கார் /ஆட்டோ ஓசை மற்றும் தன் கேக்கிறது
ReplyDeleteஉண்மை
Deleteஅந்நாளில் வீட்டு வாசலில் கேட்டவற்றை அழகாக பதிவு பண்ணியதைப் படிக்க மிக இனிமை. இது தற்போது குறைந்து விட்டது. நல்ல பதிவு
ReplyDeleteநன்றி ராம். சரியாகச் சொன்னாய். சின்னச் சின்ன சேவைகள், சின்னச் சின்ன வியாபாரிகள், சின்னச் சின்னதாய் சந்தோஷங்கள் இப்போது குறைந்து போனது.
Deletesinthanadhiyil innoru suzhal engal la sa ra ve unafhu thondu valarha
ReplyDeleteநன்றி
Delete