Skip to main content

சைக்கிள் திருடர்கள்

 சைக்கிள் என்று ஒரு வாகனம் வெகுவாகப் புழக்கத்தில் இருந்த காலம் ஒன்று இருந்தது. பலருக்கு அது உற்ற துணைவன். தொழிலாளிகளின் வாகனம். ஆலைச் சங்கொலி ஒலித்து முடிந்ததும் அணி அணியாக சைக்கிள்கள் வருவது என் கண்கள் நிறைந்த சிறு வயதுக் காட்சி. அப்படி ஒரு வாகனம் எனக்குச் சொந்தமாக இருபத்தைந்து வயது முடிய வேண்டியிருந்தது. அதில் வியப்பு இல்லை. ஆனால் அதை வசப்படுத்த எனக்கு அத்தனை ஆண்டு பிடித்தது. சைக்கிள் பழகும் முயற்சி வெவ்வேறு வயதில் தோல்வியிலேயே முடிந்தது. முதன் முதலில் ஒரு கோடை விடுமுறையில் ராமநாதபுரத்தில் பழக முயன்றேன். ஊரணிக் கரையில் சுவரோடு சுவராக வாலும் உயர்த்திய கையும்  வாயுமாக இருந்த ஆஞ்சனேயர் மேலேயே மோதி சைக்கிளோடு கீழே விழுந்தேன். பிரேக் என்ற ஒன்று இருப்பதையே அறியவில்லை.  அடுத்த கோடையில் அரை மணிக் கூறுக்கு வாடகை  சைக்கிள் எடுத்தும் எனக்குப் பத்து நிமிடமே ஓட்டக் கிடைத்தது. ஓட்டுவது  என்பது இருபுறமும் நண்பர்கள் சைக்கிளைத் தாங்கிப் பிடித்திருக்க பெடலை மட்டும்  நாம் சுற்றுவது.  திடீரென்று இருபுறமும் தாங்கிப் பிடிப்பவர்கள் இல்லை என்ற உணர்வு வரும். காற்றில் மிதப்பது போல இருக்கும். இப்போது பிரேக்கின் உபயோகம் தெரியும். அதனால் விழாமல் தப்பிக்க முடிந்தது. தொடர்ந்து பயிற்சி செய்ய சொந்தமாக வீட்டில் சைக்கிள் இல்லை. எனவே அரைகுறையான பழக்கம் தான் வாய்த்தது.  பின்னிட்டு வேலைக்குச் சேர்ந்த சில மாதங்களில் விவசாயிகள் போராடினார்கள். பஸ் ஓடவில்லை. நாங்கள் தங்கியிருந்த பாளையத்தில் (பாளையம் என்றால் உத்தம பாளையம்) இருந்து கோம்பைக்குச் செல்ல வேண்டும். எல்லா அலுவலக நண்பர்களும் வாடகைக்கு சைக்கிள் எடுத்தார்கள். நானும் துணிந்து எடுத்து ஓட்டினேன். சாதாரணமாக பஸ்ஸில் சன்னல் வழியே மலைகளையும் மரங்களையும் ரசித்தபடி சுகமான பதினைந்து நிமிடப் பயணமாக இருக்கும்.  அன்று சாலை மேடு பள்ளங்களில் ஏறி இறங்கி வியர்த்து விறுவிறுத்துப் போயிற்று. பள்ளச் சரிவில் இறங்கும் போது பெடலில் இருந்து கால்கள் நழுவிப் போனது. ஒருவாறு சமாளித்தேன்.  நாலைந்து வருடம் கழித்து முதலில் வாங்கியது பழைய சைக்கிள். அதை ஓட்ட ஓட்ட பழகிவிட்டது.  எங்கும் சென்று வருவது சுலபமாகி விட்டது.  ஒரு சுதந்திரம் வந்து வாய்த்தது. ஏழு வருடங்கள் என்னோடு இருந்தது. கால மாற்றத்தில் கை நழுவிப் போனது.


Bicycle thieves ( சைக்கிள் திருடர்கள்) என்று ஒரு திரைப்படம். இத்தாலியத் திரைப்படம். 1948ம் வருடம் வெளிவந்தது. இணையத்தில் முடிவற்ற தேடல்களில் இயல்பாக வந்து சேர்ந்தது. யதார்த்தமான படம். இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய வாழ்க்கை. குண்டு வீச்சில் பொடியான கட்டிடங்கள். வாழ்விடங்கள் உருவாகிக் கொண்டு இருக்கின்றன. சரிந்து போன பொருளாதாரம். வேலையின்மை. கசந்து போன வாழ்க்கைச் சூழல். ரிச்சி வேலைக்குப் பதிவு செய்து பல நாட்களாகக் காத்திருக்கிறான். அன்றைய தினம் அவன் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார்கள். அவனோ சற்றுத் தொலைவில் இருக்கிறான். நண்பன் ஒருவன் மூச்சிரைக்க ஓடி வந்து அவனை அழைக்கிறான். ரிச்சிக்கு வேலை கிடைக்கிறது. போஸ்டர் ஒட்டும் வேலை. ஓரே நிபந்தனை. மறுநாள் காலை 6.45 மணிக்கு சைக்கிளோடு சென்று வேலையை ஒப்புக் கொள்ள வேண்டும். ரிச்சியிடம் சைக்கிள் இருக்கிறது. ஆனால் இப்போது இல்லை. அதை அடமானம் வைக்க வேண்டியதாயிற்று. இரண்டு மூன்று நாள் கழித்து வேலையில் சேரலாமா என்று கேட்டுப் பார்க்கிறான். இல்லை. நாளை காலை 6.45 சைக்கிளோடு வந்தால் தான் வேலை. ரிச்சியின் மனைவி மரியா. அவள் தெருக்குழாயில் தண்ணீர் பிடித்துக் கொண்டிருக்கிறாள். மரியாவிடம்

இருந்து தண்ணீர் வாளியை வாங்கிக் கொண்ட ரிச்சி புலம்புகிறான். வேலை கிடைத்தது. ஆனால் சைக்கிள் இல்லை. அது இல்லை என்றால் வேலை இல்லை. பார் என்னுடைய அதிர்ஷ்டத்தை. மரியா நீ ஏன் சைக்கிளை அடகு வைத்தாய் என்கிறாள். மென்மையான பகுதியில் விழுந்த அடி. இயலாமையின் மேல் விழுந்த அடி. வலியினால் சீண்டப்பட்டு மன வருத்தம் கொள்கிறான். மரியா தீர்வை நோக்கி நகருகிறாள்.  பெண்கள் அப்படித் தானே? படுக்கை விரிப்புகளைத் துவைத்து பதிது போலச் செய்து விற்கிறாள். 7500. லிரா கிடைக்கிறது. ரிச்சி சைக்கிளை மீட்கிறான். பெருமையோடு சைக்கிளை வீட்டுச் சுவரில் மாட்டுகிறான். மறுநாள். 

வேலைக்கான பெர்மிட்டை சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் காண்பிக்கிறான். வாங்கிப் பார்த்து விட்டு ஸ்டோர் ருமுக்குப் போகச் சொல்கிறார். போஸ்டர் ஒட்டுவதற்குத் தேவையான பொருட்கள் தரப்படுகின்றன.

நாளையில்  இருந்து வேலைக்கு வரலாம். 

கீழே காத்திருக்கும் மனைவியிடம் மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொள்கிறான். சைக்கிளின் முன்புறம் அவளை ஏற்றிக் கொண்டு வீடு நோக்கிச் செல்கிறான். 


மறுநாள் காலை. உற்சாகமாக வேலைக்குக் கிளம்புகிறான். ஆணியில் மாட்டியிருக்கும் சைக்கிளை எடுத்து பத்து வயது மகன் புரூனோ  துணியால் துடைக்கிறான். ரிச்சி தொய்ந்து போன தொப்பியை தைத்து சரி செய்யச் சொல்கிறான். மரியா மகிழ்ச்சியுடன் சரி செய்கிறாள். சரி செய்யப்பட்ட தொப்பி மிடுக்காக அவன் தலையில் அமர்கிறது மகனை சைக்கிளில் ஏற்றிக் கொண்டு அவன் வேலை செய்யும் பெட்ரோல் பங்கில் விடுகிறான். மாலை ஏழு மணிக்கு வந்து அழைத்துச் செல்வதாகச் சொல்கிறான். அந்தக் காலை நம்பிக்கை ஊட்டுவதாக இருந்தது. சக ஊழியன் போஸ்டர் எப்படி ஒட்டுவது என்று செய்து காண்பிக்கிறான். பின்பு வேறு திசையில் சென்று விடுகிறான். ஏணி பசை போஸ்டர் சகிதம் ரிச்சி இன்னொரு பக்கம் செல்கிறான். ஓரிடத்தில்  சைக்கிளை நிறுத்தி  ஏணியில் ஏறி மெல்ல போஸ்டர் ஒட்ட ஆரம்பிக்கிறான். வேலையில் கவனமாக இருந்தவன் திரும்பிப் பார்க்க பார்க்க ஓருவன் சைக்கிளைத் திருடிக் கொண்டு ஓடுகிறான். கையில் இருந்த பிரஷ்ஷை போட்டு விட்டு ரிச்சி சைக்கிள் பின்னால் ஓடுகிறான். திருடன் கன வேகமாக சைக்கிளை செலுத்தி கண்ணுக்குத் தெரியாமல் மறைந்து விடுகிறான்.  ரிச்சி அருகில் வந்த வாகனத்தை நிறுத்தி திருடிச் போனவன் சென்ற திசையில் விரைகிறான். சைக்கிளோடு எங்கு மறைந்து போனானோ?  கண்டு பிடிக்க முடியவில்லை. மிகுந்த மன வேதனையோடு போஸ்டர் ஒட்டிய இடத்துக்கே திரும்ப வந்து ஏணியில் அமருகிறான். உதட்டுச் சாயம் பூசிய போஸ்டர் நங்கை இதழ் விரியச் சிரித்துக் கொண்டிருக்கிறாள். ரிச்சி போலீஸ் ஸ்டேஷன் சென்று புகார் அளிக்கிறான். மேலும் தன் நண்பன் ஒருவன் உதவியை நாடுகிறான். அவன் சொல்கிறான். இம்மாதிரி திருடப்படும் சைக்கிளை பார்ட் பார்ட் ஆக பிரித்து விற்று விடுவார்கள். நாளை காலை பஜாரில் சென்று தேடுவோம் என்று சொல்கிறான். மறுநாள் ரிச்சி சிறுவன் புரூனோ வேறு சில நண்பர்கள் தேடுதல் வேட்டையில் இறங்குகிறார்கள். சைக்கிள் பிரேம் தனியாக பெல் தனியாக டயர் தனியாக என்று தேடிப் பார்க்கிறார்கள். கண்டு பிடிக்க முயலவில்லை.  நண்பனும் மற்றவரும் விடை பெறுகிறார்கள். ரிச்சியும் புரூனோவும் மனச் சோர்வோடு நடந்து போகிறார்கள். மழைக்கு ஓரிடத்தில் ஒதுங்குகிறார்கள். மழை நிற்க நிற்க சைக்கிளில் வந்த நபர் ஒரு கிழவனோடு பேசுவதைப் பார்க்கிறான் ரிச்சி.  சட்டென அவன் தான் சைக்கிளைத் திருடியவன் என்று உணர்கிறான். துரத்திப் பிடிப்பதற்குள் ஓடி விடுகிறான். கிழவனிடம் அவனைப் பற்றி விசாரிக்கிறான். கிழவன் எதுவும் சொல்ல மறுக்கிறான். மிகுந்த முயற்சிக்குப் பிறகு சைக்கிளில் வந்தவனின் விலாசம் கிடைக்கிறது. ரிச்சி அவனைத் தேடிக் கண்டுபிடித்து உலுக்குகிறான். அவனோ நான் சைக்கிளைத் திருடவில்லை என்று சாதிக்கிறான்.  கூட்டம் கூடுகிறது. எல்லோரும் அந்த இளைஞன் பக்கமே பேசுகிறார்கள். இதற்கிடையில் சிறுவன் புரூனோ போலீஸை அழைத்து வருகிறான். வீட்டின் உள்ளே சென்று சோதனை செய்து பார்த்தால்  சைக்கிள இல்லை. சைக்கிளைத் திருடியவன் அவன் தான்

ரிச்சிக்கு நன்றாக நினைவிருக்கிறது. சாட்சியம் இல்லை. மோலீஸ்காரனும் உதவ முடிய வில்லை. நொந்து போன நிலையில் ரிச்சியும் புரூனோவும் நடந்து போகிறார்கள். ஓரு சாலைச் சந்திப்பு. எதிரே விளையாட்டு அரங்கம். உதைபந்து விளையாட்டு.  ரசிகர்கள் ஆரவாரம் கேட்கிறது. அரங்கத்துக்கு வெளியே ஒன்றாய் பலவாய் சைக்கிள்கள். சாலையின் மறுபுறம் ஓரு கட்டடச் சுவரின் மேல் சாற்றிய நிலையில் ஓரு சைக்கிள்.

ரிச்சி அதைப் பார்க்கிறான். பின்பு மகனிடம் சில்லறையைக் கொடுக்கிறான். டிராம் வண்டியைப் பிடித்து அடுத்த நிறுத்தத்தில் நிற்குமாறு கூறுகிறான்.


அடுத்து நடப்பதைக் காணொளியில் பாருங்கள்.



இந்தக் காட்சியில் தந்தை மகனாக நடித்தவர்கள் நடிப்பைப் பாருங்கள். யாரும் தொழில் முறை நடிகர்கள் அல்ல. நடிப்பில் எத்தனை யதார்த்தம். திரைப்படத்தின் கடைசிக் காட்சி மனதை விட்டு அகலவே இல்லை.



Comments

  1. என்னுடைய சைக்கிள் அனுபவம் எப்பமோ எழுதினது. மொதல்ல சைக்கிள் ஓட்டினது, நாங்க நேரு நகர்ல இருந்தப்ப. நான், ராதா, அனு மூவரணி. ஒருவர் அமர, இருவர் தள்ளனும். அதான் ரூல்.
    அப்பாலிக்கா,

    1990 புதுசா மாறின வீட்ல இருந்து பஸ் ஸ்டாண்ட் கொஞ்சம் தூரம். 15 நிமிஷம் நடக்கனம். அட, கால வேளை அவசரத்ல சான்ஸே இல்ல நம்மாளாகாது. அப்பல்லாம் ஸ்டைலா எஸ் எல் ஆர் லேடீஸ் சைக்கிள் ப்ரபலம். இந்த அண்ணன்கள் கிட்டல்லாம் சொல்லாம நாமளே வாங்கனும்னு முடிவு பண்ணியாச். ஆபிஸ்ல கலீகோட அப்பா சைக்கிள் கடை வச்சுருந்தார். அவர்ட்ட சொல்லி இப்டி இப்டி ஆயிரம் ரூவாக்கு நல்ல பெஸ்ட் சைக்கிளா வேணும். (நாள பின்ன நாம ஏமாந்துட்டோம்னு யாரும் சொல்லக் கூடாதுல்ல) நீயே பாத்து நல்லதா வீட்டுக்கு அனுப்பிடுன்னு சொல்ட்டேன். கவலையே படாதீங்கன்னு சொன்னவன் அடுத்த நாளே அனுப்பிட்டான். எஸ் எல் ஆர்லாம் இல்ல, Hercules சைக்கிள். வாடிக்கை மறந்ததும் ஏனோன்னு விவித பாரதில சிச்சுவேஷன் சாங் வேற. சரோஜா தேவி மாரி புடவைய இழுத்து சொறுகிண்டு கற்பனைல ஒரு ரவுண்டு போய்ட்டு வந்தேன்.

    அடுத்து சைக்கிள் ஓட்டனுமே. சின்ன வயசுல ரெண்டு பக்கமும் ரெண்டு பேர் பிடிச்சு தள்ளிண்டே ஓரம்போ ஓரம்போ பாடின ஞாபகம் வந்து போனது. அதுக்கப்றம் சைக்கிள் கிட்டயே போகல. சரி ராத்திரி வேளைல ஓட்டிப் பழகலாம்ன, சீட்டு செம்ம உயரத்ல இருக்கு. லேடிஸ் சைக்கிள் ல சீட்ல உக்காராம ஓட்றதெல்லாம் குரங்கு பெடல்ல சேருமா. ஒரு மாதிரி திக்கித் திணறி ஓட்டிப் பார்த்தேன்.

    அடுத்த நாள் ஆபிஸ் போய் அந்த கலீக் கிட்ட, "என்னங்க கொஞ்சம் ஸ்டைலா செலக்ட் பண்ணி இருக்கலாம்ல, ஓல்ட் மாடலா இருக்கே"

    "மேடம், அதெல்லாம் சீக்ரம் போயிடும்.
    வயர் ப்ரேக். இதான் நல்லா உழைக்கும். நீங்கதான் கொடுக்கற பணத்துக்கு வொர்த்தா இருக்கனும்னு சொன்னிங்களே"
    என் நாக்குல சனி. எதோ சொல்லிட்டேன்.

    "போகட்டும், சீட் இவ்ளவ் உயரத்ல இருக்கே. எனக்கு ஏறி உட்காரவே கஷ்டமா இருக்கு"

    "அதெல்லாம் அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம் மேடம். பக்கத்ல வாடகை சைக்கிள் கடை இருந்தா அவங்களே கம்மி பண்ணி தருவாங்க"

    உயரத்த கம்மி பண்ணி ஓட்டிப் பழகி, பஸ் ஸ்டாண்ட் பக்கத்ல ஒரு கடைல ரெகுலரா விட்டுட்டு மூணு வருஷம் வேலைக்குப் போனேன்.

    கல்யாணம் ஆனதுக்கப்றம் ஊருக்கு வந்த சகபாதி, "என்னடி சைக்கிள்னு சொன்ன ஒரு குதிரை நிக்கறது"

    "அந்த குதிரை மேல அவ கம்பீரமா வலம் வரத நீங்க பாத்ததில்லயே" _ இது பாஸ்கர். 😂😂

    ReplyDelete
  2. முழு படத்தையும் பார்க்கத்தூண்டும் பதிவும் காணொலியும். நாளைக்கு பாக்கனும்.

    ReplyDelete
    Replies
    1. பார்க்கலாம். யூடியூபில் இருக்கிறது

      Delete
    2. ஆமா ஆரமிச்சேன் அப்றம் நாளைக்கு பாத்துக்கலாம்னு விட்டேன்

      Delete
  3. முதல் பாதி பழைய நினைவுகள் நிழலாடுகின்றன. வீடியோவும் பார்த்தேன். நல்ல பதிவு.

    ReplyDelete
  4. paarthen. rasithen

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...