தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் கயிற்றில தொங்குவார்கள். அல்லது விஷம் என்று ஒரு குப்பியில் எழுதியிருக்கும். அதிலிருந்து எதையோ எடுத்துச் சாப்பிட்டு விட்டு உயிரை விடுவார்கள். காலம் செல்லச் செல்ல தூக்க மாத்திரைகளை அதிகமான எண்ணிக்கையில் விழுங்கி விட்டு உயிர் துறப்பார்கள். ஆற்றில் விழும் கதாநாயகிகளும் உண்டு. டால்ஸ்டாய் எழுதிய முக்கியமான கதை அன்னா கரனினா. அன்னா என்ற அந்த பரிதாபத்திற்குரிய பெண் ரயிலின் குறுக்கே பாய்ந்து விடுவாள். தற்கொலை என்பது கண நேரத்தில் எடுக்கப் படும் முடிவு. அந்தக் கணத்தைக் கடந்து விட்டால் எண்ணம் மாறிவிடும். ஆழமான உளவியல் காரணங்களும் அதீதமான மன அழுத்தமும் தற்கொலைக்குக் காரணமாகிறது. பெரும்பாலும் அது ஒரு கவன ஈர்ப்பு.
ஆத்மாநாம் அற்புதமான கவிஞர். கவிதைக்காகவே "ழ" என்று ஒர் பத்திரிக்கை நடத்தி வந்தார். இந்த உலகத்தில் அவர் எதிர்பார்த்தது கொஞ்சம் அன்பும் சிறிது கவனமும் தான். நிராகரிக்கப் படுவது பெரிய கொடுமை. கவிதை ததும்பும் உள்ளம் அதிக மனவெழுச்சிக்கு உள்ளாவது இயல்பு. துள்ளுவதும் அடங்குவதும் அதன் இயற்கை. மிகுந்த எதிர்பார்ப்பும் அதன் விளைவாக ஏக்கமும் அது செய்கின்ற வேலை. ஆத்மாநாம் "Affective disorder" என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கடுமையாக இருந்தது. பெங்களூரில் அவருடைய அண்ணன் வீட்டில இருந்தார். ஒரு நாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
ஆத்மாநாம் எழுதிய கவிதைகளில் இருந்து
எனது தேர்வாக இரண்டு கவிதைகள்
என் ரோஜாப் பதியன்கள்
என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை
இன்று மாலை சந்திக்கப் போகிறேன்
நான் வருவது அதற்குத் தெரியும்
மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்
பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது
எனக்குப் புரிகிறது
நான் மெல்லப் படியேறி வருகிறேன்
தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன
புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்
செருப்பைக் கழற்றி முகம் கழுவி
பூத்துவாலையால் துடைத்துக்கொண்டு
கண்ணாடியால் எனைப் பார்த்து
வெளி வருகிறேன்
ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி
என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்
நான் ஊற்றும் நீரைவிட
நான்தான் முக்கியமதற்கு
மெல்ல என்னைக் கேட்கின்றன
என்ன செய்தாய் இன்று என
உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் என
பொய் சொல்ல மனமின்றி
செய்த காரியங்களைச் சொன்னேன்
அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்
சிரித்தபடி காலை பார்ப்போம்
போய்த் தூங்கு என்றன
மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்
கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்
காலை வருவதை எண்ணியபடி
கேட்கப்படுவதும் கேட்கப்படாததும்
உலகத்திடமிருந்து நான் எதிர்பார்ப்பது
அன்பை
கருணையை
மனிதாபிமானத்தை
புரிந்துகொள்ளுதலை
உண்மை வெளிப்பாட்டை
இன்னும் பிற
நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்
என்கிறது மனித இனம்
நான்
வேலையைக் கேட்கவில்லை
உணவைக் கேட்கவில்லை
குடியிருப்பைக் கேட்கவில்லை
கேட்பதெல்லாம் ஒன்றுதான்
நான் வேறு நீ வேறு
என்பது பொய்
நானும் நீயும் ஒன்றுதான்
என்பதை உணர்
என்றுதான்
"தனிமைபடுத்தப்பட்டவனுக்கு
ReplyDeleteஆபத்தான சொல் அன்பு" Existensiia வரிகள்
திருச்சியில் இருந்து ஓரு சிற்றிதழ் அப்போது வந்தது. பெயரை மறந்து போனேன்
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதிரையில் மட்டுமில்லை நிஜத்தில் தற்கொலை செய்து கொண்ட கதாநாயகியர் பலர்.
ReplyDeleteஆமாம். ஒரு பட்டியல் உண்டு
Deleteஅருமையான கவிதைகள். ரசித்தேன். வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி ராம்
Delete👌🏻
ReplyDeleteநன்றி மதி
ReplyDelete👌
ReplyDeleteThis article kindles my interest to read more of admanam. Thank you for sharing
ReplyDeleteThank you Ram
Delete