Skip to main content

என் ரோஜாப் பதியன்கள்

 தமிழ் திரைப்படங்களில் பெரும்பாலும் பெண்கள் தான் தற்கொலை செய்து கொள்வார்கள் கயிற்றில தொங்குவார்கள். அல்லது விஷம் என்று ஒரு குப்பியில்  எழுதியிருக்கும். அதிலிருந்து எதையோ எடுத்துச் சாப்பிட்டு விட்டு உயிரை விடுவார்கள். காலம்  செல்லச் செல்ல  தூக்க மாத்திரைகளை அதிகமான எண்ணிக்கையில் விழுங்கி விட்டு உயிர் துறப்பார்கள். ஆற்றில் விழும் கதாநாயகிகளும் உண்டு. டால்ஸ்டாய் எழுதிய முக்கியமான கதை அன்னா கரனினா. அன்னா என்ற அந்த பரிதாபத்திற்குரிய பெண் ரயிலின் குறுக்கே பாய்ந்து விடுவாள்.  தற்கொலை என்பது கண நேரத்தில் எடுக்கப் படும் முடிவு. அந்தக் கணத்தைக் கடந்து விட்டால் எண்ணம் மாறிவிடும். ஆழமான உளவியல் காரணங்களும் அதீதமான மன அழுத்தமும் தற்கொலைக்குக் காரணமாகிறது. பெரும்பாலும் அது ஒரு கவன ஈர்ப்பு.


ஆத்மாநாம் அற்புதமான கவிஞர்.  கவிதைக்காகவே "ழ" என்று ஒர் பத்திரிக்கை நடத்தி வந்தார்.  இந்த உலகத்தில் அவர் எதிர்பார்த்தது கொஞ்சம் அன்பும்  சிறிது கவனமும் தான். நிராகரிக்கப் படுவது பெரிய கொடுமை. கவிதை ததும்பும் உள்ளம் அதிக மனவெழுச்சிக்கு உள்ளாவது இயல்பு. துள்ளுவதும் அடங்குவதும் அதன் இயற்கை. மிகுந்த எதிர்பார்ப்பும் அதன் விளைவாக ஏக்கமும் அது செய்கின்ற வேலை. ஆத்மாநாம் "Affective disorder" என்ற நோயால் பாதிக்கப்பட்டார். அதற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை கடுமையாக இருந்தது. பெங்களூரில் அவருடைய அண்ணன் வீட்டில  இருந்தார். ஒரு நாள் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.




ஆத்மாநாம் எழுதிய கவிதைகளில் இருந்து

எனது தேர்வாக இரண்டு கவிதைகள்


என் ரோஜாப் பதியன்கள்


என்னுடைய இரண்டு ரோஜாப் பதியன்களை

இன்று மாலை சந்திக்கப் போகிறேன்

நான் வருவது அதற்குத் தெரியும்

மெலிதாய்க் காற்றில் அசையும் கிளைகள்

பரபரத்து என்னை வரவேற்கத் தயாராவது

எனக்குப் புரிகிறது

நான் மெல்லப் படியேறி வருகிறேன்

தோழமையுடன் அவை என்னைப் பார்க்கின்றன

புன்னகைத்து அறைக்குள் நுழைகிறேன்

செருப்பைக் கழற்றி முகம் கழுவி

பூத்துவாலையால் துடைத்துக்கொண்டு

கண்ணாடியால் எனைப் பார்த்து

வெளி வருகிறேன்

ஒரு குவளைத் தண்ணீரைக் கையிலேந்தி

என் ரோஜாப் பதியன்களுக்கு ஊற்றுகிறேன்

நான் ஊற்றும் நீரைவிட

நான்தான் முக்கியமதற்கு

மெல்ல என்னைக் கேட்கின்றன

என்ன செய்தாய் இன்று என

உன்னைத்தான் நினைத்துக்கொண்டிருந்தேன் என

பொய் சொல்ல மனமின்றி

செய்த காரியங்களைச் சொன்னேன்

அதனை நினைத்துக் கொண்ட கணத்தைச் சொன்னேன்

சிரித்தபடி காலை பார்ப்போம்

போய்த் தூங்கு என்றன

மீண்டும் ஒரு முறை அவற்றைப் பார்த்தேன்

கதவைச் சாற்றி படுக்கையில் சாய்ந்தேன்

காலை வருவதை எண்ணியபடி


கேட்கப்படுவதும்  கேட்கப்படாததும்


உலகத்திடமிருந்து நான் எதிர்பார்ப்பது

அன்பை

கருணையை

மனிதாபிமானத்தை

புரிந்துகொள்ளுதலை

உண்மை வெளிப்பாட்டை

இன்னும் பிற

நீ உலகத்திடமிருந்து மிகவும் எதிர்பார்க்கிறாய்

என்கிறது மனித இனம்

நான்

வேலையைக் கேட்கவில்லை

உணவைக் கேட்கவில்லை

குடியிருப்பைக் கேட்கவில்லை

கேட்பதெல்லாம் ஒன்றுதான்

நான் வேறு நீ வேறு

என்பது பொய்

நானும் நீயும் ஒன்றுதான்

என்பதை உணர்

என்றுதான்

Comments

  1. "தனிமைபடுத்தப்பட்டவனுக்கு
    ஆபத்தான சொல் அன்பு" Existensiia வரிகள்

    ReplyDelete
    Replies
    1. திருச்சியில் இருந்து ஓரு சிற்றிதழ் அப்போது வந்தது. பெயரை மறந்து போனேன்

      Delete
  2. திரையில் மட்டுமில்லை நிஜத்தில் தற்கொலை செய்து கொண்ட கதாநாயகியர் பலர்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். ஒரு பட்டியல் உண்டு

      Delete
  3. அருமையான கவிதைகள். ரசித்தேன். வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. This article kindles my interest to read more of admanam. Thank you for sharing

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...