Skip to main content

அன்றே அப்போதே வீடு

 வீடென்று எதனைச் சொல்வீர்?

அது இல்லை என் வீடு

ஜன்னல் போல் வாசல் உண்டு

எட்டடிச் சதுரம் உள்ளே

பொங்கிட மூலை  ஒன்று

புணர்வது மற்றொன்றில்

நண்பர்கள் வந்தால்

நடுவிலே குந்திக் கொள்வர்

தலை மேலே  கொடிகள் ஆடும்

கால்புறம் பாண்டம் முட்டும்

கவி எழுதி விட்டு செல்ல

கால் சட்டை மடித்து வைக்க

வாய் பிளந்து வயிற்றை எக்கிச்

சுவரோரம் சாய்ந்த பீரோ


அது மாலன் எழுதிய கவிதை. எண்பதுகளில் வாசித்திருக்கிறேன். அது மாலன் சாவி பத்திரிக்கையில் எழுதிய சிறுகதையின் துவக்க வரி. சிறுகதையின் தலைப்பு " கல்லுக்குக் கீழும் பூக்கள்".  எந்திரமாகிப் போன மனித வாழ்க்கை. அதில் கொஞ்சம் போல கவிதை.   சுமைகள் வந்து அழுத்தும் நடுத்தர வர்க்க வாழ்க்கை. அதில் துளியூண்டு ரசனை. கதையைச் சொல்லும் "இவன்" காலைப் பனியில் ரயில்வே ஸ்டேஷனுக்குப் போகிறான். தண்டவாள இரும்புக்கும் குவிந்திருக்கும் சரளைக் கற்களுக்கும் இடையே நீல மலர்கள் மலர்ந்து கிடப்பதைப் பார்க்கிறான். இது தான் கதை. 





"மனே" என்று ஒரு கன்னடத் திரைப்படம். மனே என்றால் வீடு. கிரீஷ் காசரவல்லி இயக்கம். நசிருதீன் ஷா மற்றும் தீப்தி நாவல் நடித்திருந்தனர்.  தேசிய விருது பெற்ற படம். சிறந்த மாநிலத் திரைப்படம் என்ற பிரிவில். இந்தப் படத்தை தூர்தர்ஷனில் ஒரு ஞாயிறு மதியம் ஒளிபரப்பினார்கள். பார்த்து இருக்கிறேன். கிராமத்திலிருந்து நகரத்திற்கு இடம் பெயரும் புது மணத் தம்பதியர். அவனுக்கு புல்டோசர் தயாரிக்கும கம்பனியில் வேலை.  மிகுந்த பிரயாசைக்கு பிறகு வீடு கிடைக்கிறது. வீட்டுக்கு எதிரே ஒரு தகர ஷெட். அங்கேயிருந்து எப்போதும் சத்தம். தட்டும் சத்தம். வெல்டிங் சத்தம். உருட்டும் சத்தம்.நிம்மதியாக இரவில் தூங்க முடிவதில்லை. பக்கத்தில் இருக்கும் மற்ற எவரும் இதைக் கண்டு கொள்வதே இல்லை. சத்தத்திற்கு பழகி விட்டார்கள் போல. நாட்பட நாட்பட எரிச்சலும் கசப்பும் அதிகமாகிறது. அவனுடைய உறவுக்காரப் பெண்மணிக்கு போலீஸ் அதிகாரி நல்ல பழக்கம். அவளிடம் சொல்கிறான். மறு தினமே போலீஸ் வந்து தகரஷெட் காரர்களை அடித்து விரட்டுகிறது. சிறிது காலம் சத்தம் இல்லை. ஆனால  அந்த சத்தமின்மை உறுத்துகிறது. ஷெட்காரர்கள் விஷயத்தில் தவறு செய்து விட்டோமோ என்று மனச்சாட்சியும். சில நாட்கள் சென்ற பின்பு தகர ஷெட் இருந்த இடத்தில் ஒரு வீடியோ கேம் பார்லர் வருகிறது. அது போலீஸ் அதிகாரிக்கு வேண்டப்பட்டலருக்குச் சொந்தமானது. இப்போதெல்லாம் வேறு விதமான ஓசைகள். மீண்டும் நிம்மதியின்மை. வீடு என்பது உடலுக்கும் மனதுக்கும் அமைதி தர வேண்டும். இதம் தரு மனை என்பார் பாரதி. அவனுக்கு அப்படி வாய்க்கவில்லை. ஒரு நாள் ஏதோ தூண்டப்பட்டவனாய் அண்டை வீட்டாரிடம் ஷெட்காரர்களின் தற்போதைய விலாசத்தைக் கேட்டுப் பெறுகிறான். அவர்களைத் தேடிப் போகிறான். இப்போது அவர்கள் இருப்பது குடிசைப் பகுதி. பழைய பிழைப்பு போயிற்று. அவன் கண்ட காட்சி பதைக்க வைக்கிறது. எல்லோரும் கையில் கிடைத்ததை எடுத்துக் கொண்டு ஓடுகிறார்கள். ஒரு புல்டோஸர் அந்தக் குடிசைகளை சரித்து தரைமட்டம் ஆக்கிக் கொண்டிருக்கிறது. அந்த புல்டோஸரில் அவனுடைய கம்பெனியின் பெயர் பொறிக்கப் பட்டிருக்கிறது.  படம் முடிகிறது.


வீடு என்றால் விடுதலை. அது ஒரு பெரும் பேறு. அதனால் தான் அதை வீடுபேறு என்கிறார்கள். ஈறு இல்லாத இன்ப வெள்ளம் அது. அதை அடைவது எப்படி?

நம்மாழ்வார் இப்படிச் சொல்கிறார்.


நன்றாய் ஞானம் கடந்து போய்

நல்இந்திரியம் எல்லாம் ஈர்த்து

ஒன்றாய்க் கிடந்த வரும் பெரும் பாழ்

உலப்பில் அதனை யுணர்ந்து உணர்ந்து

சென்று ஆங்கு இன்ப துன்பங்கள்

செற்றுக் களைந்து பசை யற்றால்

அன்றே அப்போதே வீடு

அதுவே வீடு வீடாமே


இந்திரியங்களைக் கடக்க வேண்டும். விருப்பு வெறுப்பைக் கடக்க வேண்டும். இன்ப துன்பங்களைக் களைய வேண்டும். பற்று அறுக்க வேண்டும். இப்படிச் செய்தால் அப்போதே வீடு.


எத்தனை சுலபம் என்று தோன்றுகிறது. ஆனால் அத்தனை சுலபம் இல்லை.

Comments

  1. Wonderful 💐 ..

    ReplyDelete
  2. Wonderful

    ReplyDelete
  3. நூறாவது பதிவு அருமை

    ReplyDelete
  4. Yet another wonderful post. I felt as if I have seen the film Mane.

    You have a distinct style . ...

    ReplyDelete
  5. அருமையான கதை படித்தேன். வாழ்க்கை அவ்வளவு சுலபமில்லை. நுறாவது பதிவுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  6. நன்றி ராம் தொடர்ந்து படித்து ஊக்கப்படுத்துவதற்கு

    ReplyDelete
  7. parpaan ahathule paalpasu aindhundu
    meyparumindri verithu thirivana

    meyparum vandu veryium adanginsl
    parpan pasuaindhum paalay soriyume

    said by Thirumoolar

    adhudhsn. mane

    narasimhan

    ReplyDelete
  8. பார்ப்பான் அகத்துள்ளே பால்பசு ஐந்துண்டு// மேய்ப்பாரின்றி வெறித்துத் திரிவன// மேய்ப்பாரும் வந்து வெறியும் அடங்கினால்// பார்ப்பான் பசுஐந்தும் பாலாய்ச் சொரியுமே

    திருமூலர்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...