அவன் மேகங்களை விரும்பினான். மலர்களை நேசித்தான். இயற்கையிடம் அடி பணிந்தான். மனிதர்களை விட மரங்கள் அவனுக்குப் பிடித்தது. மரங்கள் அவனோடு பேசுவதாக நம்பினான். அவை பேசும் மொழியைக் கடவுளின் மொழி என்று கருதினான். உன்னதமான இசைக் கோவைகளை இந்த உலகிற்கு வழங்கினான். அவன் பெயர் பீத்தோவன்.
பீத்தோவனின் வாழ்க்கை துயரங்கள் நிரம்பியது. குடிகாரத் தகப்பன். சம்பாதித்ததை எல்லாம் குடித்தே அழித்து விடுவான். எனவே பீத்தோவன் இளமையிலேயே குடும்பப் பொறுப்பை சுமக்க நேர்ந்தது. தன்னுடைய பதினேழாம் வயதில் தாயை இழந்தார். சிறு வயதிலிருந்தே தந்தையால் இசைப் பயிற்சிக்காக நிர்ப்பந்திக்கப் பட்டார். இசை அவர் மீது திணிக்கப்பட்டாலும் ஓருபொழுதும் அவர் இசையை வெறுக்க வில்லை. ஒரு கட்டத்தில் அவர் வசித்து வந்த பான் நகரிலிருந்து வியன்னாவிற்கு குடி பெயர்ந்தார். ஆனாலும் தான் வளர்ந்த, துயரச் சூழல்களைச் சந்தித்த பான் நகரம் அவர் நினைவை விட்டு அகலவே இல்லை.
ரைன் நதி, அது தழுவிச் செல்லும் கரைகள், தேவாலயங்கள், ஏன் கல்லறைகளும் கூட அவர் நினைவில் கிடந்தன. பான் நகரத்தில் அவரது வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகள் கழிந்தன. அவரைப் பொறுத்த வரை ரைன் நதி ஓரு பேருயிர். சிந்தனையில் ஆழ்ந்த அதன் மெளனம் மனிதர்களால் இனம் கண்டு கொள்ளக் கூடியது அல்ல. அப்படித்தான் அவருக்குத் தோன்றியது.
பீத்தோவன் அப்படி ஒன்றும் உயரம் இல்லை. ஆனால் தோள் இரண்டும் அகலமானவை. பெரிய முகம். உறுதியான தாடை. அழுத்தமான கீழ் உதடு.. சிறிய மூக்கு. சிங்கத்தைப் போல நாசித் துவாரங்கள். ஒளி சிந்தும் சிறிய கண்கள். உள்ளடங்கி இருக்கும் அதில் துயரம் எழுதி இருக்கும். உள்ளம் கனிந்து பேசும் போது கண்களில் நீர் நிற்கும். உணர்ச்சி பெருகும் போதும் அப்படித்தான். அவரது புன்னகை இதமானது. உரக்கச் சிரிப்பது அவர் பழக்கம். மகிழ்ச்சியே கண்டறியாதவனின் சிரிப்பு.
மோகம் பீத்தோவனைப் பற்றி இருந்திருக்கிறது. ஆனால் அது கீழான உணர்வுகளில் அவரைத் தள்ளியது இல்லை. காதல் வயப்படுவது அவரது மனம். ஆனால் அவரது எந்தக் காதலும் நிறைவேறாமல் போனது தான் துயரம். இரண்டு பெண்கள் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். ஒருத்தி அவரைக் காதலித்து விட்டு ஒரு வங்கியாளரை மணந்து கொள்கிறாள். இன்னொருத்தி பீத்தோவனிடம் பியானோ கற்றுக் கொள்ள வந்தவள். இவளுடனான காதலும் கைகூடவில்லை.
பீத்தோவனின் ஓரு கடிதம் இப்படித் துவங்குகிறது. "அழிவற்ற எனது அன்பே!" அவர் மேலும் எழுதுகிறார்.
"நான் படுக்கையில் இருக்கும் போதும், அழிவற்ற எனது அன்பே!, எனது எண்ணங்கள் உன்னை நோக்கியே விரைகின்றன. ஒரு கணம் மகிழ்ச்சியில், மறு கணம் துயரத்தில். விதி நமது பிரார்த்தனைகளைக் கேட்குமோ கேட்காதோ என்ற காத்திருப்பில். இந்த வாழ்க்கையை எதிர் கொள்ள நான் முற்றிலும் உன்னுடனே இருக்க வேண்டும். அல்லது ஒரு பொழுதும் உன்னைக் காணவே கூடாது. கடவுளே! அருமையான அவளிடமிருந்து நான் ஏன் பிரிந்து இருக்க வேண்டும்? வியன்னாவில் எனது வாழ்க்கை பரிதாபகரமாக இருக்கிறது. உனது அன்பு , நிலையற்ற இந்த மானுடத்துள் என்னை மகிழ்ச்சியாகவும் அதே நேரம் சோகமாகவும் வைத்திருக்கிறது.
நீ அமைதி கொள். அமைதியாக இந்த வாழ்க்கையை நோக்குவதன் மூலமே நாம் இணைந்து வாழும் லட்சியம் முழுமை பெறக் கூடும். அமைதி கொள். என்னை நேசி. இன்றும்.. நேற்றும்.. கண்ணீருடன் உனக்கானது என் ஏக்கம். உனக்கானது,எனது வாழ்வே, எனது எல்லாமுமே, உனக்கானது. உனக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து என்னை நேசி. இந்தக் காதலனின் விசுவாசமான இதயத்தை தவறாகக் கணித்து விடாதே.
என்றும் உனதான
என்றும் எனதான
என்றும் நமதான
லுட்விக்
பீத்தோவனுக்கு 27 வயது இருக்கும் போது அவரது கேட்கும் திறன் குறைய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இசை நிகழ்த்தும் போது கலைஞர்கள் இசைக்கும் உச்ச ஸ்வரங்கள் கேட்பதற்கு அவர் இருக்கும் இடத்திலிருந்து வாசிப்பவர்கள் அருகே சற்று நெருங்கி வர வேண்டியிருந்தது. முப்பது வயது நெருங்கும் போது முற்றிலுமாக கேட்கும் திறன் போனது. ஒரு இசைக் கலைஞனுக்கு இது எத்தனை துயரமானது!
என்றாலும் காதலின் பரவசக் கணங்கள், பிரிவின் ஏக்கம், நிராசை, முடிவில்லாத துயரம் எல்லாம் பீத்தோவனின் கைகளில் அற்புதமான இசைக் கோவைகளாக உருப் பெற்றது. வாழ்க்கை எத்தனையோ துன்பங்ளைத் தந்தாலும் அவர் பிறருக்கு மகிழ்ச்சியைத் தரவே விரும்பினார். மகிழ்ச்சியின் பாடல் (Ode to joy) என்று ஒரு அற்புதமான இசைக் கோவையை அவர் உருவாக்கினார்.
அவர் வியன்னாவிற்கு வந்த போது புரட்சியும் வந்து சேர்ந்தது. அவரது மனம் பிரான்ஸின் பக்கமே சாய்ந்திருந்தது. குடிமக்கள் சொன்னபடி குடிமை நீதி அவர் விருப்பமாக இருந்தது. எப்பொழுதும் அவர் மனம் சுதந்திரத்தையே நாடியது. அவர் ஒரு முறை இப்படி எழுதினார்.
"வார்த்தைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. ஓசைகள் சுதந்திரமாகத் திரிகின்றன."
மகிழ்ச்சி அவருக்கு மறுக்கப்பட்டது. ஆனால் தனக்கான மகிழ்ச்சியை அவர் உருவாக்கிக் கொண்டார். துன்பம் அவரை வந்து சூழ்ந்தது. அதில் நம்பிக்கையின் கீற்றை அவர் கண்டார்.
மகிழ்ச்சியின் பாடல் (Ode to Joy) துன்பங்களோடு அவர் செய்த சமர். உலகிற்கு அவர் தந்த இசைக் கொடை. பீத்தோவனின் Magnum Opus.
உதவிய நூல்
Beethoven by Romain Rolland
Thank you
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteநான் கேட்டது இல்லை
DeleteSorry, it was on a lighter note
DeleteNo problem
Delete