Skip to main content

அழிவற்ற என் அன்பே

 அவன் மேகங்களை விரும்பினான். மலர்களை நேசித்தான். இயற்கையிடம் அடி பணிந்தான். மனிதர்களை விட மரங்கள் அவனுக்குப் பிடித்தது. மரங்கள் அவனோடு பேசுவதாக நம்பினான். அவை பேசும் மொழியைக் கடவுளின் மொழி என்று கருதினான். உன்னதமான இசைக் கோவைகளை இந்த உலகிற்கு வழங்கினான். அவன் பெயர் பீத்தோவன்.


பீத்தோவனின் வாழ்க்கை துயரங்கள் நிரம்பியது. குடிகாரத் தகப்பன். சம்பாதித்ததை எல்லாம் குடித்தே அழித்து விடுவான். எனவே பீத்தோவன் இளமையிலேயே குடும்பப் பொறுப்பை சுமக்க நேர்ந்தது.  தன்னுடைய பதினேழாம் வயதில் தாயை இழந்தார். சிறு வயதிலிருந்தே தந்தையால் இசைப் பயிற்சிக்காக நிர்ப்பந்திக்கப் பட்டார். இசை அவர் மீது திணிக்கப்பட்டாலும் ஓருபொழுதும் அவர் இசையை வெறுக்க வில்லை.  ஒரு கட்டத்தில் அவர் வசித்து வந்த பான் நகரிலிருந்து வியன்னாவிற்கு குடி பெயர்ந்தார். ஆனாலும் தான் வளர்ந்த, துயரச் சூழல்களைச் சந்தித்த பான் நகரம் அவர் நினைவை விட்டு அகலவே இல்லை. 

ரைன் நதி, அது தழுவிச் செல்லும் கரைகள், தேவாலயங்கள், ஏன் கல்லறைகளும் கூட அவர் நினைவில் கிடந்தன.  பான் நகரத்தில் அவரது வாழ்க்கையின் முதல் இருபது ஆண்டுகள் கழிந்தன. அவரைப் பொறுத்த வரை ரைன் நதி ஓரு பேருயிர். சிந்தனையில் ஆழ்ந்த அதன் மெளனம் மனிதர்களால் இனம் கண்டு கொள்ளக் கூடியது அல்ல. அப்படித்தான் அவருக்குத் தோன்றியது.



பீத்தோவன் அப்படி ஒன்றும்  உயரம் இல்லை. ஆனால் தோள் இரண்டும் அகலமானவை.  பெரிய முகம். உறுதியான தாடை. அழுத்தமான கீழ் உதடு.. சிறிய மூக்கு. சிங்கத்தைப் போல நாசித் துவாரங்கள். ஒளி சிந்தும் சிறிய கண்கள்.  உள்ளடங்கி இருக்கும் அதில் துயரம் எழுதி இருக்கும். உள்ளம் கனிந்து பேசும் போது கண்களில் நீர் நிற்கும்.  உணர்ச்சி பெருகும் போதும் அப்படித்தான். அவரது புன்னகை இதமானது. உரக்கச் சிரிப்பது அவர் பழக்கம். மகிழ்ச்சியே கண்டறியாதவனின் சிரிப்பு.




மோகம் பீத்தோவனைப் பற்றி இருந்திருக்கிறது. ஆனால் அது கீழான உணர்வுகளில் அவரைத் தள்ளியது இல்லை. காதல் வயப்படுவது அவரது மனம். ஆனால் அவரது எந்தக் காதலும் நிறைவேறாமல் போனது தான் துயரம். இரண்டு பெண்கள் அவரது வாழ்க்கையில் குறுக்கிடுகிறார்கள். ஒருத்தி அவரைக் காதலித்து விட்டு ஒரு வங்கியாளரை மணந்து கொள்கிறாள். இன்னொருத்தி பீத்தோவனிடம் பியானோ கற்றுக் கொள்ள வந்தவள். இவளுடனான காதலும் கைகூடவில்லை.


பீத்தோவனின் ஓரு கடிதம் இப்படித் துவங்குகிறது. "அழிவற்ற எனது அன்பே!" அவர் மேலும் எழுதுகிறார்.

"நான் படுக்கையில் இருக்கும் போதும், அழிவற்ற எனது அன்பே!, எனது எண்ணங்கள் உன்னை நோக்கியே விரைகின்றன. ஒரு கணம் மகிழ்ச்சியில், மறு கணம் துயரத்தில். விதி நமது பிரார்த்தனைகளைக் கேட்குமோ கேட்காதோ என்ற காத்திருப்பில். இந்த வாழ்க்கையை எதிர் கொள்ள நான் முற்றிலும் உன்னுடனே இருக்க வேண்டும். அல்லது ஒரு பொழுதும் உன்னைக் காணவே கூடாது.  கடவுளே!  அருமையான அவளிடமிருந்து நான் ஏன் பிரிந்து இருக்க வேண்டும்?  வியன்னாவில் எனது வாழ்க்கை பரிதாபகரமாக இருக்கிறது. உனது அன்பு , நிலையற்ற  இந்த மானுடத்துள் என்னை மகிழ்ச்சியாகவும் அதே நேரம் சோகமாகவும் வைத்திருக்கிறது.

நீ அமைதி கொள். அமைதியாக இந்த வாழ்க்கையை நோக்குவதன் மூலமே நாம் இணைந்து வாழும் லட்சியம் முழுமை பெறக் கூடும். அமைதி கொள். என்னை நேசி.  இன்றும்.. நேற்றும்..  கண்ணீருடன் உனக்கானது என் ஏக்கம். உனக்கானது,எனது வாழ்வே, எனது எல்லாமுமே, உனக்கானது.  உனக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து என்னை நேசி.  இந்தக் காதலனின் விசுவாசமான இதயத்தை தவறாகக் கணித்து விடாதே.

என்றும் உனதான

என்றும் எனதான

என்றும் நமதான 

லுட்விக் 

பீத்தோவனுக்கு 27 வயது இருக்கும் போது அவரது கேட்கும் திறன் குறைய ஆரம்பித்தது. கொஞ்சம் கொஞ்சமாக குறைந்தது. இசை நிகழ்த்தும் போது கலைஞர்கள் இசைக்கும் உச்ச ஸ்வரங்கள் கேட்பதற்கு அவர் இருக்கும் இடத்திலிருந்து வாசிப்பவர்கள் அருகே சற்று நெருங்கி வர வேண்டியிருந்தது. முப்பது வயது நெருங்கும் போது முற்றிலுமாக கேட்கும் திறன் போனது. ஒரு இசைக் கலைஞனுக்கு இது எத்தனை துயரமானது!  

என்றாலும் காதலின் பரவசக் கணங்கள், பிரிவின் ஏக்கம், நிராசை, முடிவில்லாத துயரம் எல்லாம் பீத்தோவனின் கைகளில் அற்புதமான இசைக் கோவைகளாக உருப் பெற்றது.  வாழ்க்கை எத்தனையோ துன்பங்ளைத் தந்தாலும் அவர் பிறருக்கு மகிழ்ச்சியைத் தரவே விரும்பினார். மகிழ்ச்சியின் பாடல் (Ode to joy)  என்று ஒரு  அற்புதமான இசைக் கோவையை அவர் உருவாக்கினார்.  

அவர் வியன்னாவிற்கு வந்த போது புரட்சியும் வந்து சேர்ந்தது. அவரது மனம் பிரான்ஸின் பக்கமே சாய்ந்திருந்தது. குடிமக்கள் சொன்னபடி குடிமை நீதி அவர் விருப்பமாக இருந்தது. எப்பொழுதும் அவர் மனம் சுதந்திரத்தையே நாடியது. அவர் ஒரு முறை இப்படி எழுதினார்.

"வார்த்தைகள் சங்கிலியால் பிணைக்கப்பட்டு இருக்கின்றன. ஓசைகள்  சுதந்திரமாகத் திரிகின்றன."

மகிழ்ச்சி அவருக்கு மறுக்கப்பட்டது. ஆனால் தனக்கான மகிழ்ச்சியை அவர் உருவாக்கிக் கொண்டார். துன்பம் அவரை வந்து சூழ்ந்தது. அதில் நம்பிக்கையின் கீற்றை அவர் கண்டார்.

மகிழ்ச்சியின் பாடல் (Ode to Joy)  துன்பங்களோடு அவர் செய்த சமர். உலகிற்கு அவர் தந்த இசைக் கொடை. பீத்தோவனின் Magnum Opus.




உதவிய நூல்

Beethoven by Romain Rolland








Comments

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...