Skip to main content

நினைவுகள் உலர்ந்து போகும்

ஷைலஜா திடீரென்று  சொன்னாள். வெங்குலாவுக்குப் போக வேண்டும். முந்தைய தினம் தான் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாள். அவளுக்கு குடும்ப நீதிமன்றத்தில் மண விலக்குப் பிரிவில் வேலை. கணவர் தீபாங்கருக்கு ஒன்றும் புரியவில்லை.  ஏன் என்று  கேட்டதற்கு நான் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். உடனே சென்று அந்த ஊரைப் பார்க்க வேண்டும். நாளை எனது நிலைமை எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது என்கிறாள். 

மறுநாளே ரயிலைப் பிடிக்கிறார்கள். வெங்குலா ஒரு அழகிய ஊர். கொங்கன் கடற்பகுதியில் அமைந்த ஊர்.  தென்னையும் வாழையும் இன்ன பிற மரங்களும் செழித்து வளர்ந்திருக்கும் ஊர்.


ஷைலஜாவிற்கு சமீபமாக மறதி ஏற்படுகிறது. செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் மறந்து விடாமல் இருக்க டைரியில் குறித்து வைக்க வேண்டியிருக்கிறது. எப்போதும் அவள் கைப்பையில் அந்த டைரி இருக்கிறது. அது ஒரு நரம்பு சம்பந்தமான கோளாறு. Dementia. தனது நிலைமை அவளுக்குப் புரிகிறது. பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற அதுவும் ஒரு காரணம்.  நினைவுகள் உலர்ந்து மறைந்து விடுமா? வெயிலில் ஈரம் காய்ந்து மறைந்து விடுவது போல. இந்த நிலையில் பழைய நினைவுகளைத் தேடி வெங்குலாவின் சிறிய வீதிகளில் கணவரோடு அலைகிறாள்.  தான் படித்த பள்ளிக்குச் செல்கிறாள். அன்று விடுமுறை நாள். அறிவிப்புப் பலகையில் பிரதீப் காமத் என்ற பெயரை வாய் விட்டுப் படிக்கிறாள். 

அவன் பள்ளி இறுதியில் முதல் மாணவனாக வந்ததைப் பலகை சொல்கிறது.  அருகே சென்ற பள்ளிப் பணியாளரிடம்  பிரதீப் காமத்தை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கிறாள். அவர் விழிக்கிறார். இரண்டொரு நாளில் பள்ளி திறந்தபின்பு அலுவலகத்தில் விசாரியுங்கள் என்கிறார்


பள்ளியை விட்டு வெளியே வந்து பழகிய தெருவில் கணவரோடு நடக்கிறாள். கடந்த காலமும் அவளோடு நடந்து செல்கிறது. ஒரு வீட்டைத் தயங்கியபடி கடந்து செல்கிறாள். அவள் பின்னாடியே ஷைலு என்று அழைத்தபடி ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ஓடி வருகிறாள். அவள் ஷைலஜாவின் பள்ளித் தோழி கெளரி என்று தெரிகிறது. இருவரையும் தனது வீட்டுக்கு அழைக்கிறாள். வீட்டு முன்னறைச் சுவற்றில் ஒரு போட்டோ மாட்டியிருக்கிறது. அவர்களது பள்ளி நாட்களில் எடுத்த குரூப் போட்டோ. அதைப் பார்த்தபடியே ஷைலஜா நிற்கிறாள். பழைய நினைவுகளில் தோய்ந்து போகிறாள். அனேகமாக எல்லோரையும் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக பிரதீப் காமத்.  கெளரி உற்சாகமான குரலில் பிரதீப் அதே ஊரில் வங்கி மேலாளராக இருப்பதைச் சொல்கிறாள்.



ஷைலஜா கெளரி குறிப்பிட்ட வங்கிக்கு தீபாங்கருடன் செல்கிறாள். மேலாளர் பிரதீப் காமத்தைப் பார்க்க வேண்டும் என்று பணியாளர் ஒருவரிடம் சேதி சொல்லிக் காத்திருக்கிறாள். சில காகிதங்களுடன் தனது அறையிலிருந்து வெளியே வருகிறான் பிரதீப்.  இவளை வெறுமனே பார்த்தபடி இருக்கும் அவன் வினாடிகளில் அவளை இன்னார் என்று அறிந்து கொள்கிறான்.  வெளியே வந்து மூவரும் டீ குடிக்கிறார்கள். தீபாங்கர் நீங்கள் பேசிக்  கொண்டு இருங்கள். நான் ஒரிரண்டு நபருடன் பேச வேண்டியிருக்கிறது என்று கூறியபடி கைபேசியோடு நகருகிறார்.  சிறிது நேரம் பிரதீப் சங்கடமாக உணர்கிறான். கைகளைக் கோர்த்து அமர்ந்து ஷைலஜாவின் கண்களைப் பார்க்காமல் பேசுகிறான். இருபத்து எட்டு வருட இடைவெளி. எதைப் பேசுவது?  தயங்கித் தயங்கிப் பேசுகிறான். மெல்ல மெல்ல சகஜமாகிப் பழைய விஷயங்களைப் பேசிப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரதீப் தனது மனைவி இரண்டு மகள்களோடு வெங்குலாவில் வசிக்கிறான்.  ஷைலஜா மும்பையில் கணவரோடு. மகன்  I. I.T யில் படிக்கிறான். வேறு ஒரு நகரத்தில்.  ஷைலஜா பிரதீப்பிடம் நாம் படித்த பள்ளிக்குப் போகலாமா என்று கேட்கிறாள். பிரதீப் சம்மதிக்கிறான். கெளரியும் தீபாங்கரும் கூட வருகிறார்கள். தாங்கள் படித்த எட்டாம் வகுப்பறைக்குச் செல்கிறார்கள். வகுப்பறை மிகவும் சிறியதாக இருப்பது போலத் தோன்றுகிறது. சிறு வயதில்  பெரிதாக இருந்தது. பிரதீப் சிறு வயதில் மனம் பரந்து இருந்தது. இடமும் பெரிதாகத் தெரிந்தது என்கிறான்.  வகுப்பறை டெஸ்கின் மீது விளையாட்டாகத் தங்களது பெயர்கள் செதுக்கியது அப்படியே இருப்பதை ஷைலஜா தன் விரல்களால் தடவி உணருகிறாள். அருகே வந்து பிரதீப் பாரக்கும் போது அவனைப் பாரத்துப் புன்னகைக்கிறாள். ஒரு பிரத்தியேகமான புன்னகை அது. 


அன்று இரவு பிரதீப் மனைவியிடம் ஷைலஜா தன்னை வங்கியில் வந்து பாரத்துப் போனதை சொல்கிறான். ஷைலஜா அவனுடைய சிறு வயதுத் தோழி என்று அவளுக்குத் தெரியும். ஷைலஜா இன்னும் இரண்டு நாட்கள் அந்த ஊரில் தங்குகிறாள். அவனோடு சேர்ந்து பழைய இடங்களை எல்லாம் சுற்றிப் பார்க்க விரும்புகிறாள்.  என்ன செய்வது என்று மனைவியிடம் கேட்கிறான். போகத்தானே வேண்டும் என்று அவள் சொல்கிறாள்.


மறுநாள் ஷைலஜாவுடன் மகாதேவன் ஆலயத்துக்குச் செல்கிறான். ஷைலஜா குடியிருந்த வீட்டைச் சென்று பார்க்கிறார்கள். அந்த வீட்டின் பின்புறம் ஒரு கிணறு இருக்கிறது. அந்த இடத்தில் ஷைலஜா தயங்கி நிற்கிறாள். சிறு வயதில் அதே இடத்தில் அவளும் தங்கை வினுவும் கயிறு இழுத்து விளையாடுவார்கள். அப்போது வினு கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து விடுவாள். பிரதீப் அவளை நினைவுகளிலிருந்து கலைக்கிறான். இன்னொரு பள்ளித் தோழியான ரூபாலி வீட்டுக்குச் செல்கிறார்கள். ரூபாலியின் அம்மா அவர்கள் எல்லோருக்கும் பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுத்தவர். அவர் ஷைலஜாவின் கணவரிடம் சொல்கிறாள். இவளைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். பிரதீப்பும் இவளும் வகுப்பில் செய்யாத சேட்டைகளே இல்லை என்று சொல்கிறார்.


அன்று இரவு பிரதீப் கவிதை எழுதுகிறான்.

எத்தனை வருடங்கள் ஆயிற்று அவன் ஒரு கவிதையாவது எழுதி?  அவனுடைய மனைவி கேலியாகச் சொல்கிறாள். பால்ய சிநேகிதியைப் பார்த்தவுடன் கவிதை வந்து விட்டது. என்னைப் பற்றி ஒரு வரி கூட எழுதியதில்லையே என்கிறாள். பிரதீப் பதில் சொல்லவில்லை.அவளுடைய விரல்களைப் பிரிக்கிறான். பிரித்த விரல்களை முத்தமிடுகிறான். முத்தமிட்ட விரல்களை கண்களில் ஒற்றிக் கொள்கிறான். அவள் உறங்கிய பின்பு அவளுடைய புதுச் சேலை ஒன்றை எடுத்து அதில் அழகாக நூல் வேலைப்பாடு செய்கிறான். 


தீபாங்கர் ஷைலஜாவிடம் கேட்கிறார். இந்த ஊரில் படித்தது பற்றியோ பிரதீப் பற்றியோ ஏன் இத்தனை வருடம் சொல்லவில்லை என்று.. ஏனோ சொல்லத் தோன்றவில்லை என்கிறாள்.

இந்த ஷைலஜா நானே அறிந்து கொள்ளாத ஒரு பெண். அவள் எனக்குப் பிடி கொடுக்காமல் நழுவுகிறாள். முடிந்தால் அவளை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று சொல்கிறாள்.


மறுநாள். கடலோரம் ஒரு சிறு திருவிழா. தினபண்டம் விற்பவர்கள். சுழலும் ராட்டினங்கள். ஆரவாரம். எங்கும் களிப்பு.

பிரதீப்பின் இளைய மகளோடு ஷைலஜா ராட்டனத்தில் சுற்றி மகிழ்கிறாள். பெரிய ரங்க ராட்டினத்தில் ஏற பிரதீப்பின் மகள் பயப்படுகிறாள். தீபாங்கர் ஷைலஜாவிடம் 

நீங்கள் இருவரும் ஏறிச் சுற்றி வாருங்கள் என்று சொல்கிறார். ராட்டினம் உயருகிறது.  ஒரு அரைச் சுற்று ஆனபின் உயரத்தில் லேசாக அசைந்தபடி நிற்கிறது. அது ஒரு அற்புதத் தருணம். சிறு வயதில் இது போன்ற திருவிழா நாளில் தான் இவர்கள் கடைசியாகச் சந்தித்தது. பிரதீப் அவளுக்கு மலர்கள் கொண்டு வந்து தந்தான். ஷைலஜா அவனிடம் கோபம் கொள்கிறாள். ஏன் மற்ற சிநேகிதிகளுக்கும் தரவில்லை என்று. பின்பு அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே ஊரை விட்டுச் சென்று விடுகிறாள். அதற்கு இப்போது அவனிடம் மன்னிப்புக் கேட்கிறாள். நீ கொஞ்ச நாட்களில் என் நினைவிலிருந்து அகன்று விடுவாய் என்று சொல்கிறாள். அதனால் என்ன? நான் உன்னை எப்போதும் நினைத்தபடி இருப்பேன் என்று பிரதீப் சொல்கிறான்.



மேலே சொன்னது Three of Us என்ற திரைப்படத்தின் கதை. கவிதையே போன்ற தருணங்கள் இந்தத் திரைப்படத்தில் அதிகம் காண முடிந்தது.  அற்புதமான ஒளிப்பதிவு. வெங்குலாவின் சிறிய வீதிகள். சாய்ந்து இறங்கும் சூரியனின் கிரணங்கள். ஓடு வேய்ந்த வீடுகள். நுரைத்து வரும் கடல் அலைகள். கழிமுகம். கடலில் வந்து கலக்கும் தண்ணீர. இரவு. மரங்களின் ஊடே தொங்கும் நிலவு. இப்படி எல்லாம் அழகான காட்சிப் படிமங்கள்.


ஷைலஜாவாக நடித்தவர் ஷெஃபாலி ஷா.

வட்டமான விழிகள் அவருக்கு. அந்த விழிகள் நீண்டு கடந்த காலத்தைத் தீண்டுகிறது. குழந்தை போன்ற ஆர்வத்துடன் யாவற்றையும் பார்க்கிறது. பரத நாட்டியம் கற்றுக் கொண்ட இடத்தில்  இன்றைய மாணவிகளுடன் ஆடும் போது கை அசைவிற்கு ஏற்ப அந்தக் கண்களும் சுழலுகிறது. பாதியில் ஆட்டம் மறந்து தூண் மறைவில் நகர்ந்து பால்ய சிநேகிதனின் கண்களை சங்கடத்துடன் எதிர் கொள்கிறது. நான் மகிழ்ச்சியாக இருப்பதில் உங்களுக்கு என்ன சிரமம் என்று கணவரிடம் ஒரு மெல்லிய சீற்றத்தைக் காண்பிக்கிறது. எல்லாம் மறந்து விடுமே என்று ஏக்கம் ததும்பி நிற்கிறது.


பூஜா இந்தப் படத்தை Netflix ல் பார்க்கச் சொன்னாள். ரசனைகள் ஒருமித்து இருப்பது ஆனந்தம் தருவது தானே?





Comments

  1. நீ phone ல் சொல்லியும் படம் இன்னும் பார்க்கவில்லை.
    உனது கருத்துக்கு பின்னர் படம் பார்ப்பது இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும்.

    ReplyDelete
  2. கதை படித்தேன். படம் பார்க்கவில்லை. You tube இல் இருப்பதை பார்த்தேன். பின் பார்க்கிறேன். பதிவு அருமை

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். பாருங்கள்

      Delete
  3. இப்பதான் பார்த்து முடித்தேன். ஷெஃபாலி ஷா வோட விசிறி நான். அருமையான நடிகை. அந்த தீபக்காக நடித்தவர் கூட நல்ல நடிப்பு. பல பொயட்டிக் சீன்ஸ். டான்ஸ் ஸ்டெப்ஸ் மறந்து வெட்கப் புன்னகையுடன் மறைந்து கொள்வது, ஜெயண்ட் வீல் சீன், ஹெட் மஸாஜ் சீன் இப்டி பல. பரிந்துரைத்தமைக்கு பூஜாவுக்கு நன்றி. சூடாமணி எழுதிய அடையாளம் என்ற சிறுகதை நினைவுக்கு வந்தது டிமென்ஷியான்ன உடன்.

    ReplyDelete
    Replies
    1. பார்த்து விட்டாயா? மகிழ்ச்சி. சூடாமணி கதையைத் தேடுகிறேன்

      Delete
    2. Iru. Whaatsappla photo eduthu anupparen choodamani story ya

      Delete
    3. Padichen. A typical R Soodamani story

      Delete
  4. I thought it was your story and I was inspired at the wat it is writte. But later to know that it was your brief about the short film, I felt, I was stumped out due to my over-stretch. Nice...

    ReplyDelete
    Replies
    1. Thank you Venkat. Yes it was a narration of the film like one writes a short story

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...