ஷைலஜா திடீரென்று சொன்னாள். வெங்குலாவுக்குப் போக வேண்டும். முந்தைய தினம் தான் விருப்ப ஓய்வு பெற்றிருந்தாள். அவளுக்கு குடும்ப நீதிமன்றத்தில் மண விலக்குப் பிரிவில் வேலை. கணவர் தீபாங்கருக்கு ஒன்றும் புரியவில்லை. ஏன் என்று கேட்டதற்கு நான் ஐந்தாம் வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை அங்கு படித்தேன். உடனே சென்று அந்த ஊரைப் பார்க்க வேண்டும். நாளை எனது நிலைமை எப்படி ஆகும் என்று சொல்ல முடியாது என்கிறாள்.
மறுநாளே ரயிலைப் பிடிக்கிறார்கள். வெங்குலா ஒரு அழகிய ஊர். கொங்கன் கடற்பகுதியில் அமைந்த ஊர். தென்னையும் வாழையும் இன்ன பிற மரங்களும் செழித்து வளர்ந்திருக்கும் ஊர்.
ஷைலஜாவிற்கு சமீபமாக மறதி ஏற்படுகிறது. செய்ய வேண்டிய சின்னச் சின்ன விஷயங்கள் மறந்து விடாமல் இருக்க டைரியில் குறித்து வைக்க வேண்டியிருக்கிறது. எப்போதும் அவள் கைப்பையில் அந்த டைரி இருக்கிறது. அது ஒரு நரம்பு சம்பந்தமான கோளாறு. Dementia. தனது நிலைமை அவளுக்குப் புரிகிறது. பணியிலிருந்து விருப்ப ஓய்வு பெற அதுவும் ஒரு காரணம். நினைவுகள் உலர்ந்து மறைந்து விடுமா? வெயிலில் ஈரம் காய்ந்து மறைந்து விடுவது போல. இந்த நிலையில் பழைய நினைவுகளைத் தேடி வெங்குலாவின் சிறிய வீதிகளில் கணவரோடு அலைகிறாள். தான் படித்த பள்ளிக்குச் செல்கிறாள். அன்று விடுமுறை நாள். அறிவிப்புப் பலகையில் பிரதீப் காமத் என்ற பெயரை வாய் விட்டுப் படிக்கிறாள்.
அவன் பள்ளி இறுதியில் முதல் மாணவனாக வந்ததைப் பலகை சொல்கிறது. அருகே சென்ற பள்ளிப் பணியாளரிடம் பிரதீப் காமத்தை உங்களுக்குத் தெரியுமா என்று கேட்கிறாள். அவர் விழிக்கிறார். இரண்டொரு நாளில் பள்ளி திறந்தபின்பு அலுவலகத்தில் விசாரியுங்கள் என்கிறார்
பள்ளியை விட்டு வெளியே வந்து பழகிய தெருவில் கணவரோடு நடக்கிறாள். கடந்த காலமும் அவளோடு நடந்து செல்கிறது. ஒரு வீட்டைத் தயங்கியபடி கடந்து செல்கிறாள். அவள் பின்னாடியே ஷைலு என்று அழைத்தபடி ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி ஓடி வருகிறாள். அவள் ஷைலஜாவின் பள்ளித் தோழி கெளரி என்று தெரிகிறது. இருவரையும் தனது வீட்டுக்கு அழைக்கிறாள். வீட்டு முன்னறைச் சுவற்றில் ஒரு போட்டோ மாட்டியிருக்கிறது. அவர்களது பள்ளி நாட்களில் எடுத்த குரூப் போட்டோ. அதைப் பார்த்தபடியே ஷைலஜா நிற்கிறாள். பழைய நினைவுகளில் தோய்ந்து போகிறாள். அனேகமாக எல்லோரையும் அவளுக்கு ஞாபகம் இருக்கிறது. குறிப்பாக பிரதீப் காமத். கெளரி உற்சாகமான குரலில் பிரதீப் அதே ஊரில் வங்கி மேலாளராக இருப்பதைச் சொல்கிறாள்.
ஷைலஜா கெளரி குறிப்பிட்ட வங்கிக்கு தீபாங்கருடன் செல்கிறாள். மேலாளர் பிரதீப் காமத்தைப் பார்க்க வேண்டும் என்று பணியாளர் ஒருவரிடம் சேதி சொல்லிக் காத்திருக்கிறாள். சில காகிதங்களுடன் தனது அறையிலிருந்து வெளியே வருகிறான் பிரதீப். இவளை வெறுமனே பார்த்தபடி இருக்கும் அவன் வினாடிகளில் அவளை இன்னார் என்று அறிந்து கொள்கிறான். வெளியே வந்து மூவரும் டீ குடிக்கிறார்கள். தீபாங்கர் நீங்கள் பேசிக் கொண்டு இருங்கள். நான் ஒரிரண்டு நபருடன் பேச வேண்டியிருக்கிறது என்று கூறியபடி கைபேசியோடு நகருகிறார். சிறிது நேரம் பிரதீப் சங்கடமாக உணர்கிறான். கைகளைக் கோர்த்து அமர்ந்து ஷைலஜாவின் கண்களைப் பார்க்காமல் பேசுகிறான். இருபத்து எட்டு வருட இடைவெளி. எதைப் பேசுவது? தயங்கித் தயங்கிப் பேசுகிறான். மெல்ல மெல்ல சகஜமாகிப் பழைய விஷயங்களைப் பேசிப் பகிர்ந்து கொள்கிறார்கள். பிரதீப் தனது மனைவி இரண்டு மகள்களோடு வெங்குலாவில் வசிக்கிறான். ஷைலஜா மும்பையில் கணவரோடு. மகன் I. I.T யில் படிக்கிறான். வேறு ஒரு நகரத்தில். ஷைலஜா பிரதீப்பிடம் நாம் படித்த பள்ளிக்குப் போகலாமா என்று கேட்கிறாள். பிரதீப் சம்மதிக்கிறான். கெளரியும் தீபாங்கரும் கூட வருகிறார்கள். தாங்கள் படித்த எட்டாம் வகுப்பறைக்குச் செல்கிறார்கள். வகுப்பறை மிகவும் சிறியதாக இருப்பது போலத் தோன்றுகிறது. சிறு வயதில் பெரிதாக இருந்தது. பிரதீப் சிறு வயதில் மனம் பரந்து இருந்தது. இடமும் பெரிதாகத் தெரிந்தது என்கிறான். வகுப்பறை டெஸ்கின் மீது விளையாட்டாகத் தங்களது பெயர்கள் செதுக்கியது அப்படியே இருப்பதை ஷைலஜா தன் விரல்களால் தடவி உணருகிறாள். அருகே வந்து பிரதீப் பாரக்கும் போது அவனைப் பாரத்துப் புன்னகைக்கிறாள். ஒரு பிரத்தியேகமான புன்னகை அது.
அன்று இரவு பிரதீப் மனைவியிடம் ஷைலஜா தன்னை வங்கியில் வந்து பாரத்துப் போனதை சொல்கிறான். ஷைலஜா அவனுடைய சிறு வயதுத் தோழி என்று அவளுக்குத் தெரியும். ஷைலஜா இன்னும் இரண்டு நாட்கள் அந்த ஊரில் தங்குகிறாள். அவனோடு சேர்ந்து பழைய இடங்களை எல்லாம் சுற்றிப் பார்க்க விரும்புகிறாள். என்ன செய்வது என்று மனைவியிடம் கேட்கிறான். போகத்தானே வேண்டும் என்று அவள் சொல்கிறாள்.
மறுநாள் ஷைலஜாவுடன் மகாதேவன் ஆலயத்துக்குச் செல்கிறான். ஷைலஜா குடியிருந்த வீட்டைச் சென்று பார்க்கிறார்கள். அந்த வீட்டின் பின்புறம் ஒரு கிணறு இருக்கிறது. அந்த இடத்தில் ஷைலஜா தயங்கி நிற்கிறாள். சிறு வயதில் அதே இடத்தில் அவளும் தங்கை வினுவும் கயிறு இழுத்து விளையாடுவார்கள். அப்போது வினு கால் தவறி கிணற்றில் விழுந்து இறந்து விடுவாள். பிரதீப் அவளை நினைவுகளிலிருந்து கலைக்கிறான். இன்னொரு பள்ளித் தோழியான ரூபாலி வீட்டுக்குச் செல்கிறார்கள். ரூபாலியின் அம்மா அவர்கள் எல்லோருக்கும் பள்ளியில் ஆங்கில வகுப்பு எடுத்தவர். அவர் ஷைலஜாவின் கணவரிடம் சொல்கிறாள். இவளைச் சாதாரணமாக நினைக்காதீர்கள். பிரதீப்பும் இவளும் வகுப்பில் செய்யாத சேட்டைகளே இல்லை என்று சொல்கிறார்.
அன்று இரவு பிரதீப் கவிதை எழுதுகிறான்.
எத்தனை வருடங்கள் ஆயிற்று அவன் ஒரு கவிதையாவது எழுதி? அவனுடைய மனைவி கேலியாகச் சொல்கிறாள். பால்ய சிநேகிதியைப் பார்த்தவுடன் கவிதை வந்து விட்டது. என்னைப் பற்றி ஒரு வரி கூட எழுதியதில்லையே என்கிறாள். பிரதீப் பதில் சொல்லவில்லை.அவளுடைய விரல்களைப் பிரிக்கிறான். பிரித்த விரல்களை முத்தமிடுகிறான். முத்தமிட்ட விரல்களை கண்களில் ஒற்றிக் கொள்கிறான். அவள் உறங்கிய பின்பு அவளுடைய புதுச் சேலை ஒன்றை எடுத்து அதில் அழகாக நூல் வேலைப்பாடு செய்கிறான்.
தீபாங்கர் ஷைலஜாவிடம் கேட்கிறார். இந்த ஊரில் படித்தது பற்றியோ பிரதீப் பற்றியோ ஏன் இத்தனை வருடம் சொல்லவில்லை என்று.. ஏனோ சொல்லத் தோன்றவில்லை என்கிறாள்.
இந்த ஷைலஜா நானே அறிந்து கொள்ளாத ஒரு பெண். அவள் எனக்குப் பிடி கொடுக்காமல் நழுவுகிறாள். முடிந்தால் அவளை நீங்கள் புரிந்து கொள்ள முயற்சி செய்யுங்கள் என்று சொல்கிறாள்.
மறுநாள். கடலோரம் ஒரு சிறு திருவிழா. தினபண்டம் விற்பவர்கள். சுழலும் ராட்டினங்கள். ஆரவாரம். எங்கும் களிப்பு.
பிரதீப்பின் இளைய மகளோடு ஷைலஜா ராட்டனத்தில் சுற்றி மகிழ்கிறாள். பெரிய ரங்க ராட்டினத்தில் ஏற பிரதீப்பின் மகள் பயப்படுகிறாள். தீபாங்கர் ஷைலஜாவிடம்
நீங்கள் இருவரும் ஏறிச் சுற்றி வாருங்கள் என்று சொல்கிறார். ராட்டினம் உயருகிறது. ஒரு அரைச் சுற்று ஆனபின் உயரத்தில் லேசாக அசைந்தபடி நிற்கிறது. அது ஒரு அற்புதத் தருணம். சிறு வயதில் இது போன்ற திருவிழா நாளில் தான் இவர்கள் கடைசியாகச் சந்தித்தது. பிரதீப் அவளுக்கு மலர்கள் கொண்டு வந்து தந்தான். ஷைலஜா அவனிடம் கோபம் கொள்கிறாள். ஏன் மற்ற சிநேகிதிகளுக்கும் தரவில்லை என்று. பின்பு அவனிடம் சொல்லிக் கொள்ளாமலே ஊரை விட்டுச் சென்று விடுகிறாள். அதற்கு இப்போது அவனிடம் மன்னிப்புக் கேட்கிறாள். நீ கொஞ்ச நாட்களில் என் நினைவிலிருந்து அகன்று விடுவாய் என்று சொல்கிறாள். அதனால் என்ன? நான் உன்னை எப்போதும் நினைத்தபடி இருப்பேன் என்று பிரதீப் சொல்கிறான்.
மேலே சொன்னது Three of Us என்ற திரைப்படத்தின் கதை. கவிதையே போன்ற தருணங்கள் இந்தத் திரைப்படத்தில் அதிகம் காண முடிந்தது. அற்புதமான ஒளிப்பதிவு. வெங்குலாவின் சிறிய வீதிகள். சாய்ந்து இறங்கும் சூரியனின் கிரணங்கள். ஓடு வேய்ந்த வீடுகள். நுரைத்து வரும் கடல் அலைகள். கழிமுகம். கடலில் வந்து கலக்கும் தண்ணீர. இரவு. மரங்களின் ஊடே தொங்கும் நிலவு. இப்படி எல்லாம் அழகான காட்சிப் படிமங்கள்.
ஷைலஜாவாக நடித்தவர் ஷெஃபாலி ஷா.
வட்டமான விழிகள் அவருக்கு. அந்த விழிகள் நீண்டு கடந்த காலத்தைத் தீண்டுகிறது. குழந்தை போன்ற ஆர்வத்துடன் யாவற்றையும் பார்க்கிறது. பரத நாட்டியம் கற்றுக் கொண்ட இடத்தில் இன்றைய மாணவிகளுடன் ஆடும் போது கை அசைவிற்கு ஏற்ப அந்தக் கண்களும் சுழலுகிறது. பாதியில் ஆட்டம் மறந்து தூண் மறைவில் நகர்ந்து பால்ய சிநேகிதனின் கண்களை சங்கடத்துடன் எதிர் கொள்கிறது. நான் மகிழ்ச்சியாக இருப்பதில் உங்களுக்கு என்ன சிரமம் என்று கணவரிடம் ஒரு மெல்லிய சீற்றத்தைக் காண்பிக்கிறது. எல்லாம் மறந்து விடுமே என்று ஏக்கம் ததும்பி நிற்கிறது.
பூஜா இந்தப் படத்தை Netflix ல் பார்க்கச் சொன்னாள். ரசனைகள் ஒருமித்து இருப்பது ஆனந்தம் தருவது தானே?
.jpeg)

நீ phone ல் சொல்லியும் படம் இன்னும் பார்க்கவில்லை.
ReplyDeleteஉனது கருத்துக்கு பின்னர் படம் பார்ப்பது இன்னும் மகிழ்ச்சியாய் இருக்கும்.
பாரேன்
Deleteகதை படித்தேன். படம் பார்க்கவில்லை. You tube இல் இருப்பதை பார்த்தேன். பின் பார்க்கிறேன். பதிவு அருமை
ReplyDeleteநன்றி ராம். பாருங்கள்
Deleteஇப்பதான் பார்த்து முடித்தேன். ஷெஃபாலி ஷா வோட விசிறி நான். அருமையான நடிகை. அந்த தீபக்காக நடித்தவர் கூட நல்ல நடிப்பு. பல பொயட்டிக் சீன்ஸ். டான்ஸ் ஸ்டெப்ஸ் மறந்து வெட்கப் புன்னகையுடன் மறைந்து கொள்வது, ஜெயண்ட் வீல் சீன், ஹெட் மஸாஜ் சீன் இப்டி பல. பரிந்துரைத்தமைக்கு பூஜாவுக்கு நன்றி. சூடாமணி எழுதிய அடையாளம் என்ற சிறுகதை நினைவுக்கு வந்தது டிமென்ஷியான்ன உடன்.
ReplyDeleteபார்த்து விட்டாயா? மகிழ்ச்சி. சூடாமணி கதையைத் தேடுகிறேன்
DeleteIru. Whaatsappla photo eduthu anupparen choodamani story ya
DeletePadichen. A typical R Soodamani story
DeleteI thought it was your story and I was inspired at the wat it is writte. But later to know that it was your brief about the short film, I felt, I was stumped out due to my over-stretch. Nice...
ReplyDeleteThank you Venkat. Yes it was a narration of the film like one writes a short story
Delete