Skip to main content

இருள் இல்லாத இரவு

 பாரதி தெளிவாகத்தான் சொன்னார்.


அன்பு காண் மரியா மக்தலேனா

ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து


மேலும் சொன்னார்.


முன்பு தீய வடிவினைக் கொன்றால்

மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்


பின்பு முடிக்கும் போது சொல்கிறார்


பெண்மை காண் மரியா மக்தலேனா

பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து. 



மரியா மக்தலேனா என்ற பெண் யேசுவைத் தொடர்ந்தபடியே இருந்தாள். அவர் பிரசங்கம் செய்யும் கூட்டங்களில் அவள் இருந்திருக்கிறாள். ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏழு பேய்கள் அவளைப் பிடித்திருந்ததாகப் புதிய ஏற்பாடு சொல்கிறது. யேசு அவளோடு பேசியிருக்கிறார்.  யேசு சிலுவையில் ஏற்றப்பட்டபோது அங்கு இருந்த மூன்று பெண்களில் மரியா மக்தலேனா ஒருத்தி. யேசுவின் ஏனைய சீடர்கள் எல்லாம் சிலுவை ஏற்றத்தின் போது சிதறி விலகி ஓடிவிட்டார்கள்.  மரியா மக்தலேனா இறுதி வரை யேசு உடன் இருந்தாள். யேசு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததைக் கண்டவள் மரியா மக்தலேனா. கண்டதை உலகறியச் சொன்னவளும் அவளே.


கலீல் ஜிப்ரான் எழுதியது. Jesus the Son of Man என்ற  பெயரில் ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பகுதி  மரியா மக்தலேனா யேசுவைப் பற்றி பேசுவதாக அமைந்திருந்தது.  அதாவது தன் கூற்றாக இருந்தது. அது கவிதை கலந்த நடையில் இருந்தது


அது வருமாறு.


அவனுடைய வாய் மாதுளையின் இதயம் போல இருந்தது. அவனது கண்களின் நிழல்கள் ஆழமாக இருந்தது.


அவன் மென்மையானவனாக இருந்தான். தனது வலிமையை உணர்ந்த ஒரு மனிதனாக.


எனது கனவில் மாநிலத்து அரசர்களை எல்லாம் கண்டேன். அவனது அண்மையில் வியந்து நிற்பதை.


அவனது தோற்றத்தைப் பேச வேண்டும். ஆனால் எப்படி?


அது இருள் இல்லாத இரவு போல இருந்தது. ஓசைகள் இல்லாத பகலைப் போல இருந்தது.


அது துயரம் கவிந்த முகமாக இருந்தது. மேலும் ஆனந்தம் ததும்பும் முகமாகவும்.


எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ஒரு முறை அவன் விரல்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினான். பிரிந்திருந்த அவனது விரல்கள் எல்ம் மரத்தின் கிளைகள் போன்று இருந்தது.


மாலையில் அவன் உலவுவதைப் பார்த்தேன். அவன் நடக்கவில்லை. அவனே சாலையின் மீது ஒரு சாலையாக இருந்தான். பூமியில் இறங்கிக் குளிர் தரும் மேகமாக இருந்தான்.


ஆனால் அவன் முன்னால் நின்று பேசும் போது மனிதனாக இருந்தான். அவன் முகம் ஒளி பொருந்தியதாக இருந்தது.


அவன் கேட்டான் “ என்ன, மரியம்” நான் பதில் சொல்லவில்லை. எனது சிறகுகளில் ரகசியங்கள் மடங்கிக் கொண்டது. நான் இதமான சூட்டை உணர்ந்தேன்.


அவனது ஒளியை என்னால் தாங்க முடியவில்லை. எனவே நான் விலகி நடந்தேன்.  எந்த அவமானமும் இன்றி.

நான் தனித்து இருப்பதில் கூச்சம் கொண்டேன். அவனது விரல்கள் எனது இதயத்தின் நரம்புகளின் மீது நகர்ந்தபடி இருந்தன.


From Jesus the son of Man by Khalil Gibran


தமிழில் தி சந்தானம்

Comments

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...