பாரதி தெளிவாகத்தான் சொன்னார்.
அன்பு காண் மரியா மக்தலேனா
ஆவி காணுதிர் யேசு கிறிஸ்து
மேலும் சொன்னார்.
முன்பு தீய வடிவினைக் கொன்றால்
மூன்று நாளினில் நல்லுயிர் தோன்றும்
பின்பு முடிக்கும் போது சொல்கிறார்
பெண்மை காண் மரியா மக்தலேனா
பேணும் நல்லறம் யேசு கிறிஸ்து.
மரியா மக்தலேனா என்ற பெண் யேசுவைத் தொடர்ந்தபடியே இருந்தாள். அவர் பிரசங்கம் செய்யும் கூட்டங்களில் அவள் இருந்திருக்கிறாள். ஒன்றல்ல.. இரண்டல்ல.. ஏழு பேய்கள் அவளைப் பிடித்திருந்ததாகப் புதிய ஏற்பாடு சொல்கிறது. யேசு அவளோடு பேசியிருக்கிறார். யேசு சிலுவையில் ஏற்றப்பட்டபோது அங்கு இருந்த மூன்று பெண்களில் மரியா மக்தலேனா ஒருத்தி. யேசுவின் ஏனைய சீடர்கள் எல்லாம் சிலுவை ஏற்றத்தின் போது சிதறி விலகி ஓடிவிட்டார்கள். மரியா மக்தலேனா இறுதி வரை யேசு உடன் இருந்தாள். யேசு மூன்றாம் நாள் உயிர்த்து எழுந்ததைக் கண்டவள் மரியா மக்தலேனா. கண்டதை உலகறியச் சொன்னவளும் அவளே.
கலீல் ஜிப்ரான் எழுதியது. Jesus the Son of Man என்ற பெயரில் ஆங்கிலத்தில் படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அதில் ஒரு பகுதி மரியா மக்தலேனா யேசுவைப் பற்றி பேசுவதாக அமைந்திருந்தது. அதாவது தன் கூற்றாக இருந்தது. அது கவிதை கலந்த நடையில் இருந்தது
அது வருமாறு.
அவனுடைய வாய் மாதுளையின் இதயம் போல இருந்தது. அவனது கண்களின் நிழல்கள் ஆழமாக இருந்தது.
அவன் மென்மையானவனாக இருந்தான். தனது வலிமையை உணர்ந்த ஒரு மனிதனாக.
எனது கனவில் மாநிலத்து அரசர்களை எல்லாம் கண்டேன். அவனது அண்மையில் வியந்து நிற்பதை.
அவனது தோற்றத்தைப் பேச வேண்டும். ஆனால் எப்படி?
அது இருள் இல்லாத இரவு போல இருந்தது. ஓசைகள் இல்லாத பகலைப் போல இருந்தது.
அது துயரம் கவிந்த முகமாக இருந்தது. மேலும் ஆனந்தம் ததும்பும் முகமாகவும்.
எனக்கு நன்கு நினைவிருக்கிறது. ஒரு முறை அவன் விரல்களை ஆகாயத்தை நோக்கி உயர்த்தினான். பிரிந்திருந்த அவனது விரல்கள் எல்ம் மரத்தின் கிளைகள் போன்று இருந்தது.
மாலையில் அவன் உலவுவதைப் பார்த்தேன். அவன் நடக்கவில்லை. அவனே சாலையின் மீது ஒரு சாலையாக இருந்தான். பூமியில் இறங்கிக் குளிர் தரும் மேகமாக இருந்தான்.
ஆனால் அவன் முன்னால் நின்று பேசும் போது மனிதனாக இருந்தான். அவன் முகம் ஒளி பொருந்தியதாக இருந்தது.
அவன் கேட்டான் “ என்ன, மரியம்” நான் பதில் சொல்லவில்லை. எனது சிறகுகளில் ரகசியங்கள் மடங்கிக் கொண்டது. நான் இதமான சூட்டை உணர்ந்தேன்.
அவனது ஒளியை என்னால் தாங்க முடியவில்லை. எனவே நான் விலகி நடந்தேன். எந்த அவமானமும் இன்றி.
நான் தனித்து இருப்பதில் கூச்சம் கொண்டேன். அவனது விரல்கள் எனது இதயத்தின் நரம்புகளின் மீது நகர்ந்தபடி இருந்தன.
From Jesus the son of Man by Khalil Gibran
தமிழில் தி சந்தானம்
👌🏻
ReplyDelete👍
Delete