நடனத்திற்குப் பிறகு (After the Dance) டால்ஸ்டாய் எழுதிய கதை. அதன் துவக்க வரியை மேலே பாருங்கள்.
இந்தக் கதையைச் சொல்பவர் இவான் வாஸிலிவிச். தனது இளமைப் பருவத்தில் நடந்த சம்பவத்தை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். அவர் அப்போது பல்கலைக்கழக மாணவன். ,படிப்பு, பனிச்சறுக்கு விளையாட்டு, குதிரையேற்றம், நண்பர்கள், இளமை,கொண்டாட்டம் இவையே வாழ்க்கை. ஒரு சமயம் நடன விருந்துக்குச் செல்கிறார். பிரபுக்களும் படைத் தளபதிகளும் மாதர்களும் நிறைந்த அறை. காலரியில் இசைக்குழு. தின்பதற்கு ஏராளமாய் பண்டங்கள். நதி போல வழிந்து ஓடும் ஷாம்பெயின். ஆனால் இவான் வாஸிலிவிச்சுக்குக் காதலின் போதை மட்டுமே ஏறியிருந்தது. காரணம் மெல்லிய தேகமும் உயரமும்,, இனிமையும் கனிவும் ததும்பும் கண்களும் உடைய வரின்கா. செலுத்தப் பட்டவர் போல் வலியச் சென்று அவள் கைகளைப் பற்றி நடனம் ஆட அழைக்கிறார். இணக்கத்தோடு அழைப்பை ஏற்ற வரின்கா அவரோடு இணைந்து ஆடுகிறாள். அறை முழுதும் பரவி சுழன்று சுழன்று ஆடுகிறார்கள். வெள்ளை உடை அணிந்த அவளது அண்மை வாஸிலிவிச்சை வேறு ஒர் உலகத்திற்கு இட்டுச் செல்கிறது. இடையினில் கைகளை வளைத்தும் தோள் மீது கை வைத்தும் சிறிதும் பெரிதுமாய் எட்டு வைத்து ஆடும் நடனம். வால்ட்ஸ் ((Waltz) என்று இவ்வகை நடனம் அழைக்கப்படுகிறது. இதற்கு உரிய இசை ஒன்று. இரண்டு..மூன்று…என்ற தாள கதியில் அமைகிறது.
அண்மைக் காலத்தில் சாய்க்கோவெஸ்கியின் (Tchaikovsky) இசைக் கோவைகளைக் கேட்க வாய்த்தது. இவர் உலகமே கொண்டாடிய ரஷ்ய இசை மேதை. இசை நாடகங்கள் (Opera) பாலே நடனம் மற்றும் தனிப்பட இவர் அமைத்த இசைக் கோவைகள் ஏராளம். இவற்றில் ஒன்று மலர்களின் நடனம். (The Waltz of flowers) என்பது. மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டுவது. இதைக் கேட்டுக் கொண்டிருந்த போது தான் மனம் மேலே சொன்ன டால்ஸ்டாயின் கதைக்குத் தாவியது.
தமிழ் திரைப்படங்களில் இது போன்ற வால்ட்ஸ் வகைப் பாடல்கள் அமைக்க முயற்சி செய்திருக்கிறார்கள். பால் ரூம் நடனம் காட்சிப்படுத்தப் பட்டிருக்கிறது.
குறிப்பாகச் சொல்ல வேண்டுமென்றால் கண் போன போக்கிலே. என்ற பாடல் காட்சி. வண்ணக்கிளி சொன்ன மொழி, யாரது யாரது தங்கமா, என்ற பாடல்களையும் இந்த வகையைச் சேர்ந்தது என்று சொல்லலாம்.
துயிலாத பெண்ணொன்று கண்டேன் என்று ஒரு பாடல். இது நடனமாகக் காட்சிப் படுத்தப் படவில்லை. ஆனால் மேலே நாம் விவரித்த நடன வகைக்கு இசைந்தே இந்தப் பாடல் அமைந்திருப்பதாகத் தோன்றுகிறது. சற்றுக் கண்களை மூடி பாடலைக் கேட்டபடி இந்த வகை நடன அசைவைக் கற்பனை செய்து பாருங்கள். புரியும்.
இந்தப் பாடல்களின் பல்லவிகள் எல்லாமே பெரும்பாலும் மூன்று மூன்று சந்தத்தில் வருவது கவனிக்கத் தக்கது. ஒன்று.இரண்டு..மூன்று என்ற தாள கதிக்கு இணங்க.
முன்னும் பின்னுமாக எட்டு வைத்த நடன அசைவை மனதில் உணர முடிகிறதா?

பார்த்த படித்த விஷயங்களை
ReplyDeleteஅழகாக விவரிக்கின்றாய். தான் ரசித்ததை அப்படியே மற்றவர்களுக்கு கடத்துவது சிறந்த கலை. அது வாய்க்கப் பெற்றது உனக்கான வரம்.
நன்றி
Deleteஅருமையான நினைவூட்டல். வேற்று மொழி புதினங்களை தமிழில் படிப்பதில் ஒரு தனி சுகமுண்டு. இதை நான் மறைந்த க்ரியா பதிப்பகத்தின் ராமகிருஷ்ணனிடம் சில வருடங்கள் முன் சொன்னபோது ஆமோதித்து மகிழ்வுடன் அதைப் பற்றி பேசினார். மதுரையில் பூர்ணம் சோமசுந்தரம் மொழியாக்கத்சில் படித்த ருசிய புதினங்கள் நினைவுக்கு வருகிறது. வால்ட்ஸ் இசையில் ஜீ.ராமநாதனின் மற்றுமொரு அரிய பாடல் - அமரகவி திரைப்படத்தில் பாகவதர், லீலா குரலில் அமைந்த 'யானைத் தந்தம் போலே பிறை நிலா' - பாகவதரின் முந்தைய பாடல்கள் போலில்லாமல் நவீனமாக இருக்கும்.
ReplyDelete- சீனு
ஆமாம். அது சுரதா எழுதிய பாடல் தானே?
Deleteஆமாம்
Deleteநல்ல முயற்சி விரைவில் சுஜாதா வரிசையில் வருவாய் எங்களின் கோனார் கையேடே
ReplyDeleteநன்றி
Deleteரஷ்ய மொழி பாடலும் அதன் இசையும் கேட்டேன். பின் கண் போன போக்கிலே மற்றும துயிலாத பெண் ஒன்று பாடல்களை கேட்டேன். இசை ஒற்றுமை புலப்படுகிறது. ரசித்தேன். வாழ்த்துக்கள்.
ReplyDeleteநன்றி ராம்
Deleteபோனஸ் பாட்டுக்களாக வண்ணக்கிளி சொன்ன மொழி மற்றும் யாரது யாரது தங்கமா கேட்டேன். என்ன அருமையான பாடல். எப்படிப் பாடகர்கள் மற்றும் இசை அமைப்பு. எங்கேயோ கொண்டு போய்விட்டது.
ReplyDeleteஎப்படிப்பட்ட என்று இருக்க வேண்டும்
ReplyDeleteA timely post for me,as I am hearing old msv songs often now a days.
ReplyDeleteA wonderful post.
Thank you Ram
Delete