சின்ன விஷயங்கள்
காலையில் பருவநிலை மாறியது. பனி உருகி அழுக்கான தண்ணீராக உருக்கொண்டிருந்தது. அதன் சில துளிகள் சிறிய தோள் உயரப் பின்கட்டு நோக்கிய சன்னல் வழியே வழிந்தது. கார்கள் தெருவில் பனிச் சகதியில் விரைந்து கொண்டிருந்தன. வெளியே இருள் வரத் துவங்கியது. உள்ளேயும் இருள் ஆரம்பித்திருந்தது.
அவன் படுக்கையறையில் சூட்கேஸில் துணிகளைத் திணித்தபடி இருந்தான். அப்போது அவள் கதவருகே வந்தாள்.
“நீ போவதில் எனக்கு சந்தோஷம்..
நீ போவதில் எனக்கு சந்தோஷம்.. நான் சொல்வது கேட்கிறதா?” என்றாள்.
அவன் சூட்கேஸில் எதையோ திணித்தபடி இருந்தான்.
“….மகனே! நீ போவதில் எனக்கு சந்தோஷம்” அவள் அழ ஆரம்பித்தாள். “என்னை முகத்துக்கு நேராக உன்னால் பார்க்க முடியுமா?” சொல்” என்றாள். பின்பு படுக்கை மீது குழந்தையின் புகைப்படம் இருந்ததைப் பார்த்தாள். அதைக் கையில் எடுத்தாள். அவன் அவளைப் பார்த்தான். அவள் கண்களைத் துடைத்துக் கொண்டு அவனையே வெறித்தாள். பின்பு திரும்பியபடி முன்னறைக்குச் சென்றாள்.
அவன் “அதை இங்கே கொண்டு வா” என்றான். “உன்னுடையதை எல்லாம் எடுத்துக் கொண்டு வெளியேறு” என்றாள் அவள்.
அவன் பதில் சொல்லவில்லை. சூட்கேஸை இழுத்து மூடினான். கோட்டை அணிந்து கொண்டான். படுக்கை அறையைச் சுற்றிலும் பார்த்தான், விளக்கை அணைப்பதற்கு முன். பின்பு அவன் முன்னறைக்குச் சென்றான். அவள் சமையலறை வாசலில் குழந்தையை ஏந்தியபடி இருந்தாள்.
“குழந்தையை என்னிடம் கொடு” என்றான்
“உனக்கென்ன பைத்தியமா?”
“இல்லை, குழந்தையைக் கொடு. நான் யாரையாவது அனுப்பி குழந்தையின் சாமான்களை எடுத்துக் கொள்கிறேன்”
நீ குழந்தையைத் தொட முடியாது” என்றாள்.
குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது. அவள் குழந்தையின் தலையைச் சுற்றியிருந்த மப்ளரை எடுத்து விட்டாள். “ஓ. ஓ..” என்று குழந்தையைச் சமாதானப் படுத்தினாள்.
அவன் அவளை நெருங்கினான். “ கடவுள் மீது ஆணை” அவள் சமையலறைக்குள் பின் வாங்கினாள்.
“எனக்குக் குழந்தை வேண்டும்”
“வெளியே போ”
அவள் திரும்பிக் கொண்டு குழந்தையை அடுப்படி மூலையில் உயர்த்திப் பிடித்துக் கொண்டாள். அவன் அடுப்படிக்குக் குறுக்கே கைகளால் குழந்தையை உறுதியாகப் பற்றினான்.
“குழந்தையை விடு” என்றான்.
“ போ.. போய்விடு” என்று அவள் கத்தினாள். “ குழந்தையை ஒன்றும் செய்யாதே” என்றாள். “ நான் ஒன்றும் செய்ய மாட்டேன்” என்றான்.
சமையலறை சன்னல் ஒரு வெளிச்சமும் தரவில்லை. கிட்டத்தட்ட இருட்டு. அவன் ஒரு கையால் மடக்கிய அவள் கைகளைப் பிரிக்க முயன்றான். மறு கையால் குழந்தையின் அக்குளுக்குக் கீழே இறுகப் பற்றினான். அவள் தன் விரல்கள் வலுக்கட்டாயமாக பிரிக்கப்படுவதை உணர்ந்தாள். குழந்தை அவளிடமிருந்து நழுவிச் செல்வதை உணர்ந்தாள்.
“ஊஹூம்” தனது கைகள் தளர்வதை அறிந்து அவள் அலறினாள். குழந்தையின் மற்றொரு கையைப் பிடித்துக் கொண்டாள். குழந்தையின் மணிக்கட்டைச் சுற்றிப் பிடித்தபடி அவள் பின்னே சாய்ந்தாள். ஆனால் அவன் விடுவதாக இல்லை. கையை விட்டுக் குழந்தை செல்வது போல் உணர்ந்த அவன் வலுவாகத் தன்புறம் இழுத்தான்.
இப்படியாக இந்த விஷயம் நடந்தேறியது.
மூலம் ரேமண்ட் கார்வர்
தமிழில். தி சந்தானம்

எப்பவும் போல நல்லா எழுதியிருக்க. அழகான நெகிழ்வான கதை. இன்னிக்கி எனக்கும் இதை மொழிபெயர்க்க ஆசையிடுத்து. வாட்ஸாப்ல அனுப்பறேன். படிச்சுட்டு எப்டி இருக்கு சொல்லு.
ReplyDeleteஅனுப்பு
Deleteபார்றா.. எங்க அண்ணாத்த யூத்துடோய்...
ReplyDelete😃
Deleteஅருமையான தெளிவான கதை. சந்தானத்தின் new look photo மிக அருமை
ReplyDeleteநன்றி ராம்
DeleteExcellent brief presentation
ReplyDeleteThank you
Delete