Skip to main content

கண்கள் செய்து விட்ட மாயம்

பட்னா நகரில் ஓரு நகலச்சகத்துக்கு நான் போவது உண்டு. அதன் உரிமையாளர் பெயர் ஆன்கிட். இளைஞன். அவன் அமர்ந்திருக்கும் மேசை நாற்காலிக்குப் பின்னால் அளவில் பெரிதான நிழற்படம் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டிருக்கும். அது மதுபாலாவின் படம்.  கனவில் மிதக்கும் கண்கள். கன்னங்களின் மீது விளையாடும் கூந்தல் இழைகள். சற்றே பிரிந்த உதடுகள். சிறிய பற்கள் பாதி தெரிந்தும் தெரியாமலும். அந்த கறுப்பு வெள்ளைப் படம் காண்பவரைக் கவரும் விதமாக இருந்தது. காலங்கள் எல்லாம் கடந்தும் அந்தக் கண்களும் உதடுகளும் உயிர் பெற்று வருவது போல ஒரு மயக்கம் தோன்றியது. நான் ஆன்கிட்டைக் கேட்டேன். உனக்கு மதுபாலாவைப் பிடிக்குமா என்று.  ஜீ(ஆமாங்க) என்று வெட்கத்துடன் சொன்னான். யாருக்குத் தான் அவரைப் பிடிக்காது என்று நினைத்துக் கொண்டேன்.


பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை உண்டு. அது ஒரு சினிமாப் பத்திரிக்கை. அந்தப் பத்திரிக்கையின் பழைய இதழ்களின் தொகுப்பு அழகாக பைண்டு செய்யப் பட்டு கிராமத்து வீட்டில் இருக்கும்.  

எட்டு ஒன்பது வயதில் விடுமுறைக்குச் செல்லும் போது பார்க்கக் கிடைக்கும். காகிதங்கள் வழவழப்பாக இருக்கும். அச்சு நல்ல தரத்தில் இருக்கும். அதில் ஒரு   திரைப்படத்தின் ஸ்டில்லைப் பார்த்து இருக்கிறேன்.  திலீப் குமாரும் மதுபாலாவும் தழுவிக் கொண்டு இருப்பார்கள்.  அது முகல் ஏ ஆஸம் என்ற  ஹிந்தித் திரைப்படத்துக்காக  எடுக்கப்பட்ட ஸ்டில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



முகல் ஏ ஆ‌ஸம் என்ற திரைப்படத்தின் கதை நாம் அனைவரும் அறிந்த சலீம் அனார்கலியின் காதல் கதை என்று பின்னிட்டுத் தெரிந்தது. இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் நெளஷாத் அலி.   மேதை. பெரிதும் மதிக்கப்பட்ட இசையமைப்பாளர். வளர்ந்த பின் இவரது பாடல்களை அதிகமும் ரசித்துக் கேட்க வாய்த்தது. ஓரளவு ஹிந்தி தெரிந்து கொண்டதால் இவருக்குப் பெருமளவில் எழுதிய ஷகில் பாதயானியின் வரிகளையும் ரசிக்க முடிந்தது.  முகல் ஏ ஆஸம் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி. அனார்கலி என்ற ஆடல் நங்கையாக மதுபாலாவை அறிமுகப் படுத்தும் காட்சி. பாடலின் சூழல் இது தான். அக்பரின் அரண்மனையில் கிருஷ்ண ஜயந்தி  கொண்டாடப் படுகிறது. நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளும் அக்பர் பாதுஷா தொட்டிலில் இருக்கும் அழகிய தவழும் கிருஷ்ண விக்கிரகத்தைத் தாலாட்டுகிறார். பின்பு ஒரு நடன நிகழ்ச்சி. அக்பர்  அவரது மனைவி மற்றும்  மகன் சலீம்  சபையில் அமர்ந்து நடனத்தை ரசிப்பது போல வரும் காட்சி. பாடல் துவங்குகிறது.  மதுபாலா முகத்திரை அணிந்திருக்கிறார். அந்த அழகிய முகத்திரையில் சின்னச் சின்னதாய் புள்ளிகள் வைரம் போல மின்னுகின்றன. மதுபாலா  மெல்ல முகத்திரையை நீக்குகிறார். அவரது கண்கள் திலீப்குமாரின் கண்களைச் சந்திக்கின்றன.  மதுபாலா உதட்டை லேசாகச் சுழிக்கிறார்.

காதலின் ஆரம்பக் கணங்கள் அற்புதமானவை. அதற்கு ஒரு சான்று இந்தக் காட்சி. பன்கட் பே நந்தலால்  என்று பாடல் வரிகள். கண்ணன் செய்யும் சீண்டல்களை பெண் ஒருத்தி சொல்வதாக அமைந்த பாடல். பாடலும் நடனமும் வளர வளர மதுபாலாவுக்கும் திலீப்குமாருக்கும் இடையே ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கும். 

பாடலைப் பார்க்கலாம்.




நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான்

கண்ணன் சென்று மறைந்து விட்டான்

என் மெல்லிய கைகளைப் பற்றித் திருகியவன் சென்று மறைந்து விட்டான்

கண்ணன் சென்று மறைந்து விட்டான்

நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்

தண்ணீர்ப் பானையில் ஒரு கல்லை எறிந்து பானையை உடைத்து விட்டான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்

கள்வன் எந்தன் சேலை எல்லாம் நனையச் செய்து விட்டான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்

நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்

கண்களினால் ஒரு மாயம் செய்தான் என் இதயம் திருடி விட்டான் கண்ணன் இதயம் திருடி விட்டான்

முகத்திரை விலக்கி என் கண்களைப் பார்த்தவன் சென்று மறைந்து விட்டான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்

நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்



பாடல் புரிவதற்காக தமிழில் செய்திருக்கிறேன். காட்சி சொல்லாததையா வரிகள் சொல்லி விடும்?





Comments

  1. ஆற்றங்கரையினிலே கண்ண்ன் என்றுமொரு திரை்பபாடல் உள்ளதே. நன்று சந்தானம்

    ReplyDelete
    Replies
    1. நன்றி. அது காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற பாடல். அற்புதமான பாடல்

      Delete
  2. மகாரசிகன் நீ.. உன்னுடைய ரசிப்பை ரசிக்கறேன்.

    ReplyDelete
  3. என்ன ரசனை. மொழி பெயர்ப்பு புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது. காட்சி அறிமுகம் அருமை.

    ReplyDelete
  4. ஆஹா ஆஹா வெகு நுட்ப ரசனை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பாலுமகேந்திராவின் படமொன்றில் மம்முட்டி ஷோபனா சந்திக்கும் இறுதிக் காட்சி காதல் கவிதை

    ReplyDelete
    Replies
    1. நன்றி நீங்கள் யாரென்று குறிப்பிடலாமா? ஆமாம், அது யாத்ரா என்ற மலையாளத் திரைப்படம்

      Delete
  5. Lyrically written. I never thought you knew Hindi this level.

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...