பட்னா நகரில் ஓரு நகலச்சகத்துக்கு நான் போவது உண்டு. அதன் உரிமையாளர் பெயர் ஆன்கிட். இளைஞன். அவன் அமர்ந்திருக்கும் மேசை நாற்காலிக்குப் பின்னால் அளவில் பெரிதான நிழற்படம் ஒன்று சுவரில் ஒட்டப்பட்டிருக்கும். அது மதுபாலாவின் படம். கனவில் மிதக்கும் கண்கள். கன்னங்களின் மீது விளையாடும் கூந்தல் இழைகள். சற்றே பிரிந்த உதடுகள். சிறிய பற்கள் பாதி தெரிந்தும் தெரியாமலும். அந்த கறுப்பு வெள்ளைப் படம் காண்பவரைக் கவரும் விதமாக இருந்தது. காலங்கள் எல்லாம் கடந்தும் அந்தக் கண்களும் உதடுகளும் உயிர் பெற்று வருவது போல ஒரு மயக்கம் தோன்றியது. நான் ஆன்கிட்டைக் கேட்டேன். உனக்கு மதுபாலாவைப் பிடிக்குமா என்று. ஜீ(ஆமாங்க) என்று வெட்கத்துடன் சொன்னான். யாருக்குத் தான் அவரைப் பிடிக்காது என்று நினைத்துக் கொண்டேன்.
பேசும் படம் என்று ஒரு பத்திரிக்கை உண்டு. அது ஒரு சினிமாப் பத்திரிக்கை. அந்தப் பத்திரிக்கையின் பழைய இதழ்களின் தொகுப்பு அழகாக பைண்டு செய்யப் பட்டு கிராமத்து வீட்டில் இருக்கும்.
எட்டு ஒன்பது வயதில் விடுமுறைக்குச் செல்லும் போது பார்க்கக் கிடைக்கும். காகிதங்கள் வழவழப்பாக இருக்கும். அச்சு நல்ல தரத்தில் இருக்கும். அதில் ஒரு திரைப்படத்தின் ஸ்டில்லைப் பார்த்து இருக்கிறேன். திலீப் குமாரும் மதுபாலாவும் தழுவிக் கொண்டு இருப்பார்கள். அது முகல் ஏ ஆஸம் என்ற ஹிந்தித் திரைப்படத்துக்காக எடுக்கப்பட்ட ஸ்டில் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
முகல் ஏ ஆஸம் என்ற திரைப்படத்தின் கதை நாம் அனைவரும் அறிந்த சலீம் அனார்கலியின் காதல் கதை என்று பின்னிட்டுத் தெரிந்தது. இந்தத் திரைப்படத்தின் இசையமைப்பாளர் நெளஷாத் அலி. மேதை. பெரிதும் மதிக்கப்பட்ட இசையமைப்பாளர். வளர்ந்த பின் இவரது பாடல்களை அதிகமும் ரசித்துக் கேட்க வாய்த்தது. ஓரளவு ஹிந்தி தெரிந்து கொண்டதால் இவருக்குப் பெருமளவில் எழுதிய ஷகில் பாதயானியின் வரிகளையும் ரசிக்க முடிந்தது. முகல் ஏ ஆஸம் திரைப்படத்தில் ஒரு பாடல் காட்சி. அனார்கலி என்ற ஆடல் நங்கையாக மதுபாலாவை அறிமுகப் படுத்தும் காட்சி. பாடலின் சூழல் இது தான். அக்பரின் அரண்மனையில் கிருஷ்ண ஜயந்தி கொண்டாடப் படுகிறது. நெற்றியில் திலகம் இட்டுக் கொள்ளும் அக்பர் பாதுஷா தொட்டிலில் இருக்கும் அழகிய தவழும் கிருஷ்ண விக்கிரகத்தைத் தாலாட்டுகிறார். பின்பு ஒரு நடன நிகழ்ச்சி. அக்பர் அவரது மனைவி மற்றும் மகன் சலீம் சபையில் அமர்ந்து நடனத்தை ரசிப்பது போல வரும் காட்சி. பாடல் துவங்குகிறது. மதுபாலா முகத்திரை அணிந்திருக்கிறார். அந்த அழகிய முகத்திரையில் சின்னச் சின்னதாய் புள்ளிகள் வைரம் போல மின்னுகின்றன. மதுபாலா மெல்ல முகத்திரையை நீக்குகிறார். அவரது கண்கள் திலீப்குமாரின் கண்களைச் சந்திக்கின்றன. மதுபாலா உதட்டை லேசாகச் சுழிக்கிறார்.
காதலின் ஆரம்பக் கணங்கள் அற்புதமானவை. அதற்கு ஒரு சான்று இந்தக் காட்சி. பன்கட் பே நந்தலால் என்று பாடல் வரிகள். கண்ணன் செய்யும் சீண்டல்களை பெண் ஒருத்தி சொல்வதாக அமைந்த பாடல். பாடலும் நடனமும் வளர வளர மதுபாலாவுக்கும் திலீப்குமாருக்கும் இடையே ஏதோ நிகழ்ந்து கொண்டிருக்கும்.
பாடலைப் பார்க்கலாம்.
நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான்
கண்ணன் சென்று மறைந்து விட்டான்
என் மெல்லிய கைகளைப் பற்றித் திருகியவன் சென்று மறைந்து விட்டான்
கண்ணன் சென்று மறைந்து விட்டான்
நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்
தண்ணீர்ப் பானையில் ஒரு கல்லை எறிந்து பானையை உடைத்து விட்டான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்
கள்வன் எந்தன் சேலை எல்லாம் நனையச் செய்து விட்டான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்
நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்
கண்களினால் ஒரு மாயம் செய்தான் என் இதயம் திருடி விட்டான் கண்ணன் இதயம் திருடி விட்டான்
முகத்திரை விலக்கி என் கண்களைப் பார்த்தவன் சென்று மறைந்து விட்டான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்
நதிக்கரையில் என்னைக் கேலி செய்தான் கண்ணன் சென்று மறைந்து விட்டான்
பாடல் புரிவதற்காக தமிழில் செய்திருக்கிறேன். காட்சி சொல்லாததையா வரிகள் சொல்லி விடும்?
ஆற்றங்கரையினிலே கண்ண்ன் என்றுமொரு திரை்பபாடல் உள்ளதே. நன்று சந்தானம்
ReplyDeleteநன்றி. அது காத்திருப்பான் கமலக் கண்ணன் என்ற பாடல். அற்புதமான பாடல்
Deleteமகாரசிகன் நீ.. உன்னுடைய ரசிப்பை ரசிக்கறேன்.
ReplyDeleteநன்றி ரசனைக்கு
Deleteஎன்ன ரசனை. மொழி பெயர்ப்பு புரிந்து கொள்ளும் விதமாக இருந்தது. காட்சி அறிமுகம் அருமை.
ReplyDeleteநன்றி ராம்
Deleteஆஹா ஆஹா வெகு நுட்ப ரசனை இருந்தால் மட்டுமே இது சாத்தியம். பாலுமகேந்திராவின் படமொன்றில் மம்முட்டி ஷோபனா சந்திக்கும் இறுதிக் காட்சி காதல் கவிதை
ReplyDeleteநன்றி நீங்கள் யாரென்று குறிப்பிடலாமா? ஆமாம், அது யாத்ரா என்ற மலையாளத் திரைப்படம்
DeleteLyrically written. I never thought you knew Hindi this level.
ReplyDeleteThank you Ram
Delete