அன்னி மைக்கல்ஸ் எழுதிய Held என்ற நாவலைப் படிக்க வாய்த்தது. அன்னி கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தப் புத்தகம் புக்கரின் நீள் வரிசைப் பட்டியலில் உள்ளது.
இவரது எழுத்து நடை பிரமிக்க வைத்தது. கவிதை நடை. எளிய பிரார்த்தனை போல எத்தனை எத்தனை வரிகள். கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்களை அள்ளி அரை நிஜார் பையில் நிரப்பிக் கொள்ளும் சிறுவனைப் போல உணர்ந்தேன்.
ஐந்து தலைமுறைப் பெண்களைப் பற்றிப் பேசுகிறது கதை. வேறு வேறு காலங்கள். வேறு வேறு நிலப் பரப்புகள். துண்டு துண்டாக நிகழ்வுகள். ஒரு நேர் கோட்டில் செல்வது இல்லை. ஒரு தேர்ந்த சினிமா எடிட்டரைப் போல அழகாக வெட்டி வெட்டிச் செல்கிறார் அன்னி.
1917. எஸ்காட் நதிக்கரை. யுத்த களம். குண்டடி பட்டு, பனி பெய்த நிலத்தில் தலை கவிழ்ந்து வீழ்ந்திருக்கும் ஜேம்ஸ். காலை அசைக்க முடியவில்லை இல்லை இல்லை..அவனது கால் காலணியைப் போல கழன்று சற்றே அருகில்.. இவனது பார்வையிலிருந்து கதை துவங்குகிறது. மிக அருகில் காயமுற்று ஒரு இளைய படை வீரன் வீழ்ந்திருப்பதை அவன் உணருகிறான். இரவு விழுவது போல இருக்குமா அவனது இறுதிக் கணங்கள்? நினைவுகள் கசிகிறது. . தனது அன்புக்குரிய ஹெலனாவை முதன் முதல் சந்தித்ததை நினைத்துக் கொள்கிறான்.
அம்மாவின் ஏப்ரனைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்றதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த வடக்குக் கடற்கரைப் பெண்கள் கைகளில் எப்போதும் ஸ்வெட்டர் பின்னும் ஊசியும் கம்பளி நூலும் இருக்கும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தத்தம் கணவன்மார்களுக்கு ஸ்வெட்டர் பின்னுவார்கள். ஒரு வினோதப் பழக்கம். அப்படிப் பின்னும் போது தோள் பகுதியிலோ அல்லது கைப் பகுதியிலோ வேண்டுமென்றே ஒரு பிழை செய்வார்கள். கடலோடும் கணவன்மார்கள் உயிரற்றுக் கரையொதுங்கும் போது அது அவர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவுமாம். அவன் அம்மா இறந்த போது வெளியே மழை பெய்து கொண்டிருந்தது.
அவனது அப்பா முன்பே இறந்து போயிருந்தார். தாத்தா அதற்கு முன். எல்லோரும் இறக்கிறார்கள்.மரணம் விவரங்களை மறைத்து விடுகிறது. உணர்வுகளை விட்டுச் செல்கிறது.
1920. ஜேம்ஸ் உயிர் பிழைத்து இருக்கிறான். கால்கள் ஊனமுற்று இருக்கின்றன. அவன் ஒரு போட்டோ ஸ்டுடியோ நடத்துகிறான். அவன் எடுத்தும் புகைப்படங்களை இருட்டறையில் கழுவுகிறான். போட்டோ எடுக்கப்பட்டவரின் உருவத்துக்கு மேல் இறந்து போனவர்களின் பிம்பம் மெலிதாகத் தோன்றுகிறது. காட்சியில் இல்லாத ஒன்று காட்சியாகிறது. எத்தனை கழுவினாலும் மறைவதில்லை. ஈரம் சொட்டச் சொட்ட….இறந்தவர்கள்…… மேலும் அவரது நினைவுகள்……..
வருடங்கள் தாவித் தாவிச் செல்கிறது. முன்னும் பின்னுமாய் கதை நகர்கிறது.
காலமும் வெளியும் சந்திக்கிறது. ஒன்றில் ஒன்று பற்றி எரிகிறது. குண்டடி பட்டு பனித்துகள் பரப்பில் கிடக்கிறான். நினைவுகள் பரந்து விரிகின்றன. கடந்த காலம் என்பது இன்றைய நினைவு. நட்சத்திரங்களில் மிதந்து செல்லும் ஓடம்.
ஹெலனாவின் மகள் அன்னா, அன்னாவின் மகள் மாரா என்று தலைமுறைகள் எல்லாம் தாண்டிச் செல்கிறது கதைக்களம். வெட்டி வெட்டி மறையும் மின்னல் கோலம்.
கடற்கரையில் கிளிஞ்சல்களைப் பொறுக்கி அள்ளி அரை நிஜாரப் பையில் நிறைத்துக் கொண்ட சிறுவனைப் போல உணர்ந்தேன் என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். அவைகளில் சிலதைப் பார்க்கலாம்.
இயற்கை வரையறுப்பது என்னவெனில் எரியும் தழலும் அதை எரிக்கும் பொருளும் ஒன்றையொன்று தொடுவதில்லை.
தழலுக்கும் திரிக்குமான உறவு உயிருக்கு உடலுடன் ஆன உறவு போன்றது. சுவாசம் என்ற ஒன்றால் அது கட்டிப் போடப்பட்டிருக்கிறது.
ஒரு உயிருக்கும் இன்னொரு உயிருக்கும் ஒரே மொழி தான். மற்றவர்களால் அதை ஒட்டுக் கேட்க முடியும். புரிந்து கொள்ள முடியாது
நமக்கு உயிர் வாழ்வதைப் பற்றியே மிகவும் அக்கறை. அதனாலேயோ என்னவோ வாழ்வது மறந்து போய்விடுகிறது.
கருவிகள் நமது நடத்தையைக் கட்டுப்படுத்துகின்றன. எதையும் கற்றுத் தருவதில்லை.
யாவையும் கேட்கின்றன, நீ பாடும் போது
யாவையும் பாடுகின்றன, நீ கேட்கும் போது
நான் இதை எழுதி முடிக்கும் போது இந்த நாவல் புக்கர் பரிசின் சுருங்கிய பட்டியலுக்குள் வந்து விட்டது. புக்கர் பரிசு வென்றாலும் வியப்பு இல்லை
.
Beautiful appreciation of an amazing work. All the lines touch the heart and make you think. Thanks for sharing the treasure.
ReplyDeleteThanks Janani. I was totally impressed by her work
Deleteநல்ல இலக்கியப் படைப்பு.
ReplyDeleteகடைசி ஆறு bold letter para மிக அருமை. வாழ்த்துக்கள்
நன்றி ராம் படித்துவிட்டு எழுதியதற்கு
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteSoulfully written . The last few paras in bold letters are amazing. Thank you for sharing this.
ReplyDeleteThank you Ram. I know you would like this. Remember "ONE" by Bauch?
Delete