Skip to main content

வெட்டி மறையும் மின்னல்

 அன்னி மைக்கல்ஸ் எழுதிய Held என்ற நாவலைப் படிக்க வாய்த்தது.  அன்னி கனடாவைச் சேர்ந்த எழுத்தாளர். இந்தப் புத்தகம் புக்கரின் நீள் வரிசைப் பட்டியலில் உள்ளது. 





இவரது எழுத்து நடை பிரமிக்க வைத்தது. கவிதை நடை. எளிய பிரார்த்தனை போல எத்தனை எத்தனை வரிகள். கரையில் ஒதுங்கிய கிளிஞ்சல்களை அள்ளி அரை நிஜார் பையில் நிரப்பிக் கொள்ளும் சிறுவனைப் போல உணர்ந்தேன்.


ஐந்து தலைமுறைப் பெண்களைப் பற்றிப் பேசுகிறது கதை. வேறு வேறு காலங்கள். வேறு வேறு நிலப் பரப்புகள்.  துண்டு துண்டாக நிகழ்வுகள். ஒரு நேர் கோட்டில் செல்வது இல்லை. ஒரு தேர்ந்த சினிமா எடிட்டரைப் போல அழகாக வெட்டி வெட்டிச் செல்கிறார் அன்னி.


1917. எஸ்காட் நதிக்கரை. யுத்த களம். குண்டடி பட்டு, பனி பெய்த நிலத்தில் தலை கவிழ்ந்து வீழ்ந்திருக்கும் ஜேம்ஸ். காலை அசைக்க முடியவில்லை  இல்லை இல்லை..அவனது கால் காலணியைப் போல கழன்று சற்றே அருகில்.. இவனது பார்வையிலிருந்து கதை துவங்குகிறது.  மிக அருகில் காயமுற்று ஒரு இளைய படை வீரன் வீழ்ந்திருப்பதை அவன் உணருகிறான். இரவு விழுவது போல இருக்குமா அவனது இறுதிக் கணங்கள்? நினைவுகள் கசிகிறது. . தனது அன்புக்குரிய ஹெலனாவை முதன் முதல் சந்தித்ததை நினைத்துக் கொள்கிறான்.

அம்மாவின் ஏப்ரனைப் பிடித்துக் கொண்டு நடந்து சென்றதெல்லாம் நினைவுக்கு வருகிறது. அந்த வடக்குக் கடற்கரைப் பெண்கள் கைகளில் எப்போதும் ஸ்வெட்டர் பின்னும் ஊசியும் கம்பளி நூலும் இருக்கும். ஓய்வு கிடைக்கும் போதெல்லாம் தத்தம் கணவன்மார்களுக்கு ஸ்வெட்டர் பின்னுவார்கள். ஒரு வினோதப் பழக்கம். அப்படிப் பின்னும் போது தோள் பகுதியிலோ அல்லது கைப் பகுதியிலோ வேண்டுமென்றே ஒரு பிழை செய்வார்கள். கடலோடும் கணவன்மார்கள் உயிரற்றுக் கரையொதுங்கும் போது அது அவர்களை அடையாளம் கண்டு கொள்ள உதவுமாம்.  அவன் அம்மா இறந்த போது வெளியே மழை பெய்து கொண்டிருந்தது. 

அவனது அப்பா முன்பே இறந்து போயிருந்தார். தாத்தா அதற்கு  முன். எல்லோரும் இறக்கிறார்கள்.மரணம் விவரங்களை மறைத்து விடுகிறது. உணர்வுகளை விட்டுச் செல்கிறது.


1920.  ஜேம்ஸ் உயிர் பிழைத்து இருக்கிறான். கால்கள் ஊனமுற்று இருக்கின்றன. அவன் ஒரு போட்டோ ஸ்டுடியோ நடத்துகிறான்.  அவன் எடுத்தும் புகைப்படங்களை இருட்டறையில் கழுவுகிறான். போட்டோ எடுக்கப்பட்டவரின் உருவத்துக்கு மேல் இறந்து போனவர்களின் பிம்பம் மெலிதாகத் தோன்றுகிறது. காட்சியில் இல்லாத ஒன்று காட்சியாகிறது. எத்தனை கழுவினாலும் மறைவதில்லை.  ஈரம் சொட்டச் சொட்ட….இறந்தவர்கள்…… மேலும் அவரது நினைவுகள்……..


வருடங்கள் தாவித் தாவிச் செல்கிறது. முன்னும் பின்னுமாய் கதை நகர்கிறது. 

காலமும் வெளியும் சந்திக்கிறது. ஒன்றில் ஒன்று பற்றி எரிகிறது. குண்டடி பட்டு பனித்துகள் பரப்பில் கிடக்கிறான். நினைவுகள் பரந்து விரிகின்றன. கடந்த காலம் என்பது இன்றைய நினைவு. நட்சத்திரங்களில் மிதந்து செல்லும் ஓடம்.


ஹெலனாவின் மகள் அன்னா, அன்னாவின் மகள் மாரா என்று தலைமுறைகள் எல்லாம் தாண்டிச் செல்கிறது கதைக்களம். வெட்டி வெட்டி மறையும் மின்னல் கோலம்.


கடற்கரையில் கிளிஞ்சல்களைப் பொறுக்கி அள்ளி அரை நிஜாரப் பையில் நிறைத்துக் கொண்ட சிறுவனைப் போல உணர்ந்தேன் என்று மேலே குறிப்பிட்டிருந்தேன். அவைகளில் சிலதைப் பார்க்கலாம்.



இயற்கை வரையறுப்பது என்னவெனில் எரியும் தழலும் அதை எரிக்கும் பொருளும் ஒன்றையொன்று தொடுவதில்லை.


தழலுக்கும் திரிக்குமான உறவு உயிருக்கு உடலுடன் ஆன உறவு போன்றது. சுவாசம் என்ற ஒன்றால் அது கட்டிப் போடப்பட்டிருக்கிறது.


ஒரு உயிருக்கும் இன்னொரு உயிருக்கும் ஒரே மொழி தான். மற்றவர்களால் அதை ஒட்டுக் கேட்க முடியும். புரிந்து கொள்ள முடியாது


நமக்கு உயிர் வாழ்வதைப் பற்றியே மிகவும் அக்கறை. அதனாலேயோ என்னவோ வாழ்வது மறந்து போய்விடுகிறது.


கருவிகள் நமது நடத்தையைக் கட்டுப்படுத்துகின்றன. எதையும் கற்றுத் தருவதில்லை.


யாவையும் கேட்கின்றன, நீ பாடும் போது

யாவையும் பாடுகின்றன, நீ கேட்கும் போது


நான் இதை எழுதி முடிக்கும் போது இந்த நாவல் புக்கர் பரிசின் சுருங்கிய பட்டியலுக்குள் வந்து விட்டது. புக்கர் பரிசு வென்றாலும் வியப்பு இல்லை


.










Comments

  1. Beautiful appreciation of an amazing work. All the lines touch the heart and make you think. Thanks for sharing the treasure.

    ReplyDelete
  2. நல்ல இலக்கியப் படைப்பு.
    கடைசி ஆறு bold letter para மிக அருமை. வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம் படித்துவிட்டு எழுதியதற்கு

      Delete
  3. This comment has been removed by the author.

    ReplyDelete
  4. Soulfully written . The last few paras in bold letters are amazing. Thank you for sharing this.

    ReplyDelete
    Replies
    1. Thank you Ram. I know you would like this. Remember "ONE" by Bauch?

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...