Skip to main content

இரு பறவைகள்

 


யாசுனாரி கவாபத்தா ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்து நடை கவிதை போன்றது. இவர் 1968ம் வருடம் நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானியர் இவர். Canaries என்ற இந்தச் சிறுகதை Palm of the hand stories என்ற தொகுப்பில் உள்ளது     

                                   Canaries

                                            Yasunari Kawabata

                            இரு பறவைகள்

                                          தமிழில் தி சந்தானம்


அம்மையே,

நான் வாக்களித்ததற்கு மாறாகப் பின்னொரு முறை உங்களுக்கு எழுதுமாறு ஆயிற்று.

நீங்கள் போன வருடம் எனக்குத் தந்த பறவைகளை என்னால் இனியும் வைத்துக் காப்பாற்ற முடியாது. எனது மனைவி அவைகள் மீது மிகவும் கருத்தாக இருந்தாள். எனது ஒரே வேலை அவைகளைப் பார்த்துக் கொள்வது தான். மேலும் அவைகளைப் பார்க்கும் பொழுது எல்லாம் உங்களை நினைத்துக் கொள்வதும்.

நீங்கள் தானே சொன்னீர்கள்?

“ உங்களுக்கு மனைவி இருக்கிறாள். எனக்கு என் கணவர். இனிமேல் நாம் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது. என் நினைவாக இந்தப் பறவைகளைத் தருகிறேன். அவற்றைப் பார்த்துக் கொள்ளுங்கள். பாருங்களேன்… இவை ஜோடிப் பறவைகள். கடைக்காரன் குத்து மதிப்பாக ஏதோ ஒரு பேடையையும் ஏதோ ஒரு ஆண் பறவையையும் கூண்டில் அடைத்துத் தந்து விட்டான். அந்தப் பறவைகளுக்கு என்ன தெரியும்? என்றாலும் இந்தப் பறவைகளோடு என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்படி உயிரினங்களைப் பரிசாக அளிப்பது உங்களுக்கு வினோதமாகப் படும். என்றாலும் நமது ஞாபகங்களும் உயிரோடு இருப்பவை தானே? ஒருநாள் இந்தப் பறவைகள் இறந்து போகலாம். ஒரு நேரம் வரும் போது நமது நினைவுகளும் மடிந்து போக வேண்டியவை தானே? அது அப்படியே ஆகட்டும்.” என்று.

பாருங்கள். இந்தப் பறவைகள் இறந்து போகும் தறுவாயில் இருப்பது போலத் தோன்றுகிறது. அவைகளைக் கவனித்துக் கொண்டவள் போய்ச் சேர்ந்து விட்டாள். என்னைப் போன்ற ஒரு ஓவியன், வறுமையும் கவனமின்மையும் கொண்டவன், இந்த மெலிந்த பறவைகளைப் பராமரிக்க முடியாது. நான் தெளிவாகச் சொல்லி விடுகிறேனே? என் மனைவி அவைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். இப்போது அவள் இறந்து போனாள். அவள் இறந்து போனதால் இந்தப் பறவைகளும் இறந்து போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே அம்மையே, எனது மளைவிதான் உங்கள் நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தாள் 

என் மனைவி இறந்து போனதிலிருந்து பறவைகளைக் கூண்டிலிருந்து திறந்து விடலாம் என்று பல முறை எண்ணினேன். ஆனால் திடுமெனப் பறவைகளின் சிறகுகள் மிகவும் பலவீனமாகி விட்டன. மேலும் அவைகளுக்கு வானமே தெரிவதில்லை. நகரத்திலோ அருகாமையில் உள்ள கானகத்திலோ வேறு நண்பர்கள் இல்லை. அவைகளோடு இணைந்து கொள்ள. ஒன்று தனியாகப் பறந்து போனாலும் அவை ஒவ்வொன்றும் தனித்தே இறக்க நேரிடும். ஆனால் நீங்கள் தான் சொன்னீர்களே? ஏதோ ஒரு பேடையையும் ஆண் பறவையையும் அந்தக் கடைக்காரன் கூண்டில் போட்டு அடைத்து விட்டான் என்று.

அதனால் எனக்கு அவைகளை இன்னொரு பறவை விற்பவனிடம் கொடுத்து விட மனமில்லை. ஏனென்றால் அந்தப் பறவைகள் நீங்கள் எனக்குக் கொடுத்தவை. நான் உங்களிடம் திருப்பித் தரவும் முடியாது. ஏனென்றால் அவைகள் என் மனைவியால் பராமரிக்கப் பட்டவை. மேலும் இந்தப் பறவைகள்…. இவற்றை ஏற்கனவே நீங்கள் மறந்திருக்கக் கூடும். உங்களுக்கு மிகவும் தொந்தரவு ஆகிப் போகும்.

நான் மீண்டும் சொல்கிறேன். என் மனைவி ஒருத்தியால் தான் இந்தப் பறவைகள் இத்தனை நாள் உயிரோடு இருந்தன. உங்களை ஞாபகப்படுத்தியபடி. எனவேதான் அம்மையே, இந்தப் பறவைகளும் என் மனைவியைப் போல இறந்து விட வேண்டும். உங்களுடைய நினைவுகளை உயிர்த்து இருக்க வைத்தது மட்டுமல்ல, என் மனைவி செய்தது. என்னால் உங்களைப் போன்ற பெண்ணை எப்படி விரும்பிய வண்ணமே இருந்திருக்க முடியும்? என் மனைவி என்னோடு இருந்ததனால் தானே? எனது மனைவி வாழ்வின் எல்லா வலிகளும் மறக்கக் காரணமாக இருந்தாள். என்னுடைய வாழ்வின் மறு பாதியைக் காணத் தவிர்த்தாள். அப்படி அவள் செய்யாது போயிருந்தால் எனது பார்வை உங்களைத் தவிர்த்திருக்கும்; எனது கண்கள் உங்களைப் போன்ற பெண்ணைக் கண்டு தாழ்ந்திருக்கும்

அம்மையே, சரிதானே? நான் இந்தப் பறவைகளைக் கொன்று விட்டு என் மனைவியின் கல்லறையில் புதைக்கவிருக்கிறது சரிதானே?



















Comments

  1. படிக்கும்போது ரொம்ப உருக்கமாக இருந்தது.
    வித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. அருமை கதையும் மொழிபெயர்ப்பும் !"மரணத்தை விட மோசமானது மறக்கப்படுவது " - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் சுஜாதாவின் வசனம், ஒருவரைப் பற்றிய நினைவு அழிந்து விட்டால் அது அவரின் மரணத்திற்கு சமானம். ஆனால் இங்கே வாழ்வின் முரண்கள் எழுப்பும் துயர  நினைவுகளை அழிக்க மரணம் தேவையாகிறது. 'ஷாஷாங்க் ரெடெம்ப்ஷன்' திரைப்படத்தில் ஆயுள் கைதியாக தன் வாழ்வின் பெரும்பான்மையான வருடங்களை சிறையில் கழித்த ஒருவர், விடுதலையாகி வெளியே வந்ததும் புற வாழ்வின் சிக்கல்களை  சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விடுவார். விவாதிக்கப்பட கூடியதாக இருந்தாலும், கூண்டில் வாழ்ந்த பறவைகள் புற வெளியில் கஷ்டங்களை சந்திக்காமல் இருக்க அவைகளின் கொலையை  ஒரு தீர்வாக சமானப்படுத்திக்கொள்கிறார் கதை நாயகர். முரண்களுக்கு தீர்வு முரண்கள் என்றாகிவிடுகிறது.- சீனு 

    ReplyDelete
    Replies
    1. நன்றி சீனு விரிவான பதிவுக்கு.

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...