யாசுனாரி கவாபத்தா ஜப்பானைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது எழுத்து நடை கவிதை போன்றது. இவர் 1968ம் வருடம் நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஜப்பானியர் இவர். Canaries என்ற இந்தச் சிறுகதை Palm of the hand stories என்ற தொகுப்பில் உள்ளது
Canaries
Yasunari Kawabata
இரு பறவைகள்
தமிழில் தி சந்தானம்
அம்மையே,
நான் வாக்களித்ததற்கு மாறாகப் பின்னொரு முறை உங்களுக்கு எழுதுமாறு ஆயிற்று.
நீங்கள் போன வருடம் எனக்குத் தந்த பறவைகளை என்னால் இனியும் வைத்துக் காப்பாற்ற முடியாது. எனது மனைவி அவைகள் மீது மிகவும் கருத்தாக இருந்தாள். எனது ஒரே வேலை அவைகளைப் பார்த்துக் கொள்வது தான். மேலும் அவைகளைப் பார்க்கும் பொழுது எல்லாம் உங்களை நினைத்துக் கொள்வதும்.
நீங்கள் தானே சொன்னீர்கள்?
“ உங்களுக்கு மனைவி இருக்கிறாள். எனக்கு என் கணவர். இனிமேல் நாம் ஒருவரை ஒருவர் பார்க்கக் கூடாது. என் நினைவாக இந்தப் பறவைகளைத் தருகிறேன். அவற்றைப் பார்த்துக் கொள்ளுங்கள். பாருங்களேன்… இவை ஜோடிப் பறவைகள். கடைக்காரன் குத்து மதிப்பாக ஏதோ ஒரு பேடையையும் ஏதோ ஒரு ஆண் பறவையையும் கூண்டில் அடைத்துத் தந்து விட்டான். அந்தப் பறவைகளுக்கு என்ன தெரியும்? என்றாலும் இந்தப் பறவைகளோடு என்னையும் நினைத்துக் கொள்ளுங்கள். இப்படி உயிரினங்களைப் பரிசாக அளிப்பது உங்களுக்கு வினோதமாகப் படும். என்றாலும் நமது ஞாபகங்களும் உயிரோடு இருப்பவை தானே? ஒருநாள் இந்தப் பறவைகள் இறந்து போகலாம். ஒரு நேரம் வரும் போது நமது நினைவுகளும் மடிந்து போக வேண்டியவை தானே? அது அப்படியே ஆகட்டும்.” என்று.
பாருங்கள். இந்தப் பறவைகள் இறந்து போகும் தறுவாயில் இருப்பது போலத் தோன்றுகிறது. அவைகளைக் கவனித்துக் கொண்டவள் போய்ச் சேர்ந்து விட்டாள். என்னைப் போன்ற ஒரு ஓவியன், வறுமையும் கவனமின்மையும் கொண்டவன், இந்த மெலிந்த பறவைகளைப் பராமரிக்க முடியாது. நான் தெளிவாகச் சொல்லி விடுகிறேனே? என் மனைவி அவைகளை நன்றாகப் பார்த்துக் கொண்டாள். இப்போது அவள் இறந்து போனாள். அவள் இறந்து போனதால் இந்தப் பறவைகளும் இறந்து போய்விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். எனவே அம்மையே, எனது மளைவிதான் உங்கள் நினைவுகளைக் கொண்டு வந்து சேர்த்தாள்
என் மனைவி இறந்து போனதிலிருந்து பறவைகளைக் கூண்டிலிருந்து திறந்து விடலாம் என்று பல முறை எண்ணினேன். ஆனால் திடுமெனப் பறவைகளின் சிறகுகள் மிகவும் பலவீனமாகி விட்டன. மேலும் அவைகளுக்கு வானமே தெரிவதில்லை. நகரத்திலோ அருகாமையில் உள்ள கானகத்திலோ வேறு நண்பர்கள் இல்லை. அவைகளோடு இணைந்து கொள்ள. ஒன்று தனியாகப் பறந்து போனாலும் அவை ஒவ்வொன்றும் தனித்தே இறக்க நேரிடும். ஆனால் நீங்கள் தான் சொன்னீர்களே? ஏதோ ஒரு பேடையையும் ஆண் பறவையையும் அந்தக் கடைக்காரன் கூண்டில் போட்டு அடைத்து விட்டான் என்று.
அதனால் எனக்கு அவைகளை இன்னொரு பறவை விற்பவனிடம் கொடுத்து விட மனமில்லை. ஏனென்றால் அந்தப் பறவைகள் நீங்கள் எனக்குக் கொடுத்தவை. நான் உங்களிடம் திருப்பித் தரவும் முடியாது. ஏனென்றால் அவைகள் என் மனைவியால் பராமரிக்கப் பட்டவை. மேலும் இந்தப் பறவைகள்…. இவற்றை ஏற்கனவே நீங்கள் மறந்திருக்கக் கூடும். உங்களுக்கு மிகவும் தொந்தரவு ஆகிப் போகும்.
நான் மீண்டும் சொல்கிறேன். என் மனைவி ஒருத்தியால் தான் இந்தப் பறவைகள் இத்தனை நாள் உயிரோடு இருந்தன. உங்களை ஞாபகப்படுத்தியபடி. எனவேதான் அம்மையே, இந்தப் பறவைகளும் என் மனைவியைப் போல இறந்து விட வேண்டும். உங்களுடைய நினைவுகளை உயிர்த்து இருக்க வைத்தது மட்டுமல்ல, என் மனைவி செய்தது. என்னால் உங்களைப் போன்ற பெண்ணை எப்படி விரும்பிய வண்ணமே இருந்திருக்க முடியும்? என் மனைவி என்னோடு இருந்ததனால் தானே? எனது மனைவி வாழ்வின் எல்லா வலிகளும் மறக்கக் காரணமாக இருந்தாள். என்னுடைய வாழ்வின் மறு பாதியைக் காணத் தவிர்த்தாள். அப்படி அவள் செய்யாது போயிருந்தால் எனது பார்வை உங்களைத் தவிர்த்திருக்கும்; எனது கண்கள் உங்களைப் போன்ற பெண்ணைக் கண்டு தாழ்ந்திருக்கும்
அம்மையே, சரிதானே? நான் இந்தப் பறவைகளைக் கொன்று விட்டு என் மனைவியின் கல்லறையில் புதைக்கவிருக்கிறது சரிதானே?

👌
ReplyDelete🙏
Deleteபடிக்கும்போது ரொம்ப உருக்கமாக இருந்தது.
ReplyDeleteவித்தியாசமான பதிவு. வாழ்த்துக்கள்
நன்றி
Deleteஅருமை கதையும் மொழிபெயர்ப்பும் !"மரணத்தை விட மோசமானது மறக்கப்படுவது " - கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் திரைப்படத்தில் சுஜாதாவின் வசனம், ஒருவரைப் பற்றிய நினைவு அழிந்து விட்டால் அது அவரின் மரணத்திற்கு சமானம். ஆனால் இங்கே வாழ்வின் முரண்கள் எழுப்பும் துயர நினைவுகளை அழிக்க மரணம் தேவையாகிறது. 'ஷாஷாங்க் ரெடெம்ப்ஷன்' திரைப்படத்தில் ஆயுள் கைதியாக தன் வாழ்வின் பெரும்பான்மையான வருடங்களை சிறையில் கழித்த ஒருவர், விடுதலையாகி வெளியே வந்ததும் புற வாழ்வின் சிக்கல்களை சந்திக்க முடியாமல் தற்கொலை செய்து கொண்டு விடுவார். விவாதிக்கப்பட கூடியதாக இருந்தாலும், கூண்டில் வாழ்ந்த பறவைகள் புற வெளியில் கஷ்டங்களை சந்திக்காமல் இருக்க அவைகளின் கொலையை ஒரு தீர்வாக சமானப்படுத்திக்கொள்கிறார் கதை நாயகர். முரண்களுக்கு தீர்வு முரண்கள் என்றாகிவிடுகிறது.- சீனு
ReplyDeleteநன்றி சீனு விரிவான பதிவுக்கு.
Deletegreat
ReplyDeleteThank you
Delete