Skip to main content

இல்லாத சொந்தங்கள்

 தீபாவளி என்றால் வழக்கமான கொண்டாட்டம் தவிர பிடித்த நடிகர்களின் திரைப்படங்கள் வெளிவருவது பெரும் கொண்டாட்டம். புது ரிலீஸ் படத்தைத் தீபாவளி அன்றே பார்த்து விடுவார்கள். வீட்டில் இருக்கும் வயதில் மூத்தவர்கள்.இளைஞர்கள். அதாவது வேலை பார்ப்பவர்கள். கல்லூரியில் படிக்கின்றவர்கள். சுருக்கமாகச் சொன்னால் கையில் காசு புரளும் வாய்ப்பு பெற்றவர்கள். எல்லோரும் புத்தாடை அணிந்து கொள்வார்கள். அம்மாக்களுக்கு நிறைய வேலை இருக்கும். வேலை எல்லாம் முடித்து விட்டு மாலை வேளையில் சிறு பொழுது மட்டுமே புத்தாடை அணிவார்கள். சிறுவர்கள் நாள் பூராவும் புத்தாடையுடன் திரிவோம். 

இன்று மூன்று தெய்வங்கள் என்ற நிரைப்படத்தில் வரும் தாயெனும் செல்வங்கள் என்ற பாட்டு ஞாபகம் வந்தது.


தீபாவளி கொண்டாட்டத்தை இசைக்கும் பாடல். சாதாரணமாக வீடும் உறவுகளும் கொண்டாடும் பண்டிகை. புத்தாடை இனிப்பு பட்டாசு என்று. இந்தப் பாடலில் சொந்தமில்லாமல் வந்த யாரோ மூன்று பேர் சொந்தமாக ஆகித் தீபாவளி கொண்டாடும் காட்சி. பாடலின் இறுதியில் வரும் வரிகள் இப்படி அமைந்து இருக்கும்.


எங்கெங்கு பிறந்தாலும் ஒன்றாகலாம்

இல்லாத சொந்தங்கள் உருவாகலாம்

தாயாக மகனாக உறவாடலாம்

தந்தைகள் தங்கைகள் துணையாகலாம்

சந்தோஷம் கொண்டாடும் உள்ளங்களில்

பொன்னான எண்ணங்கள் உருவாகட்டும்

எல்லோரும் வாழும் நிலை வரட்டும்


இதைக் கேட்டதும் கு.அழகிரிசாமியின் ராஜா வந்திருக்கிறார் என்ற சிறுகதை ஞாபகம் வந்தது. அற்புதமான கதை.


ஒரு ஏழ்மையான குடும்பம். தீபாவளிக்கு முந்தைய நாள். அப்பா வெளியூருக்குத் துக்கம் விசாரிக்கப் போயிருக்கிறார். 

அம்மாவையும் குழந்தைகளையும் தீபாவளி கொண்டாடச் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார். அம்மா ஜாதிக்காய் பெட்டியைத் திறந்து காண்பிக்கிறாள். புதிய உடைகள். செல்லையா, தம்பையாவுக்கு கால் சட்டை பனியன்கள். மங்கம்மாவுக்குப் பாவாடை சட்டை. அப்பாவுக்குத் துண்டு மட்டும். அம்மாவுக்கு..? அதுதான் ஏற்கனவே இரண்டு சீலை இருக்கிறதே? போதாதா?

பிள்ளைகள் புதுத் துணியை தொட்டுப் பார்த்து மகிழ்கிறார்கள். இரவு உணவை முடித்துவிட்டு வெளியே பார்க்கும் பொழுது ஒரு சிறுவன் எதிர் வீட்டு வாசலில் எச்சில் இலையை வழித்துத் தின்பதைப் பார்க்கிறார்கள். மழை வேறு பெய்கிறது. செல்லையா தம்பையா சகோதரர்கள். அவனை போ போ என்று விரட்டும் போது அவர்களுடைய அம்மா கடிந்து கொள்கிறாள். யார் பெத்த பிள்ளையோ என்று மனம் கனிகிறாள். ராஜா என்ற பெயர் கொண்ட சிறுவனை உள்ளே அழைக்கிறாள். மூன்று பேரும் தலை துவட்ட துணி தருகிறாள். அம்மா அப்பா இல்லாத பையன் என்று தெரிய வருகிறது. அன்று இரவு அவர்களோடு உறங்குகிறான். மறுநாள் எல்லோரும் எண்ணெய் தேய்த்து முழுகுகிறார்கள். அம்மா அந்தச் சிறுவனுக்கும் எண்ணெய் தேய்த்துக் குளித்து விடுகிறாள். மற்ற எல்லோரும் புதுத் துணி உடுத்துகிறார்கள். ராஜாவுக்கு…. அம்மாவின் மனம் வருந்துகிறது. உடனே மங்கம்மா அப்பாவின் துண்டைத் தரலாமே என்று சொல்கிறாள். அம்மா வெடித்து அழுகிறாள். ராஜாவுக்கு அணிந்து கொள்ளத் துண்டு தருகிறாள்.


அம்மா நினைப்பதை அழகிரிசாமி இப்படி எழுதுகிறார்.


“யாரோ எவரோ? மழைன்னு வந்து வீட்டிலே ஒதுங்கிட்டான். அவனைப் போகச் சொல்ல முடியுமா! அவன் வந்த நேரம், தீபாவளியாப் போச்சு. குழந்தைகளுக்குள்ளே வஞ்சம் செய்யலாமா? பார்க்கிறவுகளுக்கு நான் செய்யறதெல்லாம் கேலியாயிருக்கும். அவுக கேலி செய்தாச் செய்துட்டுப் போகட்டும். எனக்கும் என் குழந்தைகளுக்கும் பகவான் துணை செய்வான்."


மனம் இருந்தால் யாரையும் உறவாக்கிக் கொள்ளலாம். அவரோடு பண்டிகையும் கொண்டாடலாம் இல்லையா?




Comments

  1. Vaadiya payirai kandapodhellaam vaadina Vallalar pola...

    ReplyDelete
  2. படித்திருக்கிறேன் இந்தக் கதை. தீபாவளி அன்று சினிமா எல்லாம் அண்ணாக்களுக்குத்தான்.🙂🙂

    ReplyDelete
  3. கு ப ராஜகோபாலன் சிறுகதைகள் படிச்சிருக்கியா? நல்லாருக்கும்.

    ReplyDelete
  4. சரியான பதிவு. 👌 அருமை.

    ReplyDelete
  5. பாடல் கேட்டேன். கதையும் படித்தேன். என்ன ஒரு comparison நல்ல பதிவு. பழைய காலங்களை நினைவூட்டுகின்றன. வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி படித்துவிட்டு எழுதியதற்கு

      Delete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...