ஐம்பெருங் காப்பியங்கள் யாவை? இது சாதாரணமாகப் பள்ளிப் பருவத்தில் நாம் எதிர்கொள்ளும் கேள்வி. அதற்குப் படித்துப் பதிலும் எழுதி இருக்கிறோம். பள்ளிப் பாடத்தில் சிலப்பதிகாரக் காப்பியத்தின் வழக்காடு காதை வந்திருக்கிறது. நங்காய், கள்வனைக் கோறல் கடுங்கோலன்று, வெண்வேற்கொற்றம் காண் என்ற வரிகள் நினைவுக்கு வருகிறது. எனது சகோதரி சீவக சிந்தாமணி படித்ததாக நினைவு. பின்னுமொரு சகோதரிக்கு மணிமேகலை பாடமாக வந்திருக்கிறது. காயசண்டிகையின் யானைப்பசி என்னும் நோயை மணிமேகலையின் அமுதசுரபி தீர்த்து வைக்கும். ஆனால் குண்டலகேசி, வளையாபதி போன்ற காப்பியங்களின் பாடல்கள் அறிந்து கொண்டதே இல்லை. அதாவது பாடப்பகுதி மூலம் அறிமுகமாகி மேலும் விரிவாகத் தன் முயற்சியில் அறிந்து கொள்ள வாய்க்கவே இல்லை.
நண்பர் செளந்தர் குண்டலகேசியின் ஒரு பாடலைச் சில வருடங்களுக்கு முன் சொன்னார். அந்தப் பாடல் வருமாறு
பாளையாம் தன்மை செத்தும் பாலனாம் தன்மை செத்தும்
காளையாம் தன்மை செத்தும் காமுறும் இளமை செத்தும்
மீளும் இவ் இயல்பும் இன்னே மேல்வரும் மூப்பும் ஆகி
நாளும் நாள் சாகின்றாமால் நமக்குநாம் அழாதது என்னோ
இந்தப் பாடல் என்னை வியக்க வைத்ததோடு சிந்திக்கவும் வைத்தது. என்னை மேற்கொண்டு குண்டலகேசியின் பாடல்களைத் தேடவும் வைத்தது. சொற்ப பாடல்களே எஞ்சியிருப்பது தெரிந்தது. வருகின்ற பாடல்கள் எனக்குப் பிடித்தமானதாக இருந்தது.
மறிப மறியும் மலிர்ப மலிரும்
பெறுப பெறும் பெற்றுஇழப்ப இழக்கும்
அறிவது அறிவார் அழுங்கார் உவவார்
உறுவதும் உறும் என்று உரைப்பது நன்று
மண்ணுளார் தம்மைப் போல்வார் மாட்டதே அன்று வாய்மை
நண்ணினார் திறத்தும் குற்றம் குற்றமே நல்ல ஆகா
விண்ணுளார் புகழ்தற்கு ஒத்த விழுமியோன் நெற்றி போழ்ந்த
கண்ணுளான் கண்டம் தன்மேல் கறையை யார் கறையன்று என்பார்?
முதல் பாடல் வருவது வந்தே தீரும் என்ற தெளிவைத் தந்தது. இரண்டாவது பாடல் நெற்றிக் கண் திறப்பினும் குற்றம் குற்றமே என்பதை நினைவுபடுத்தியது.
குண்டலகேசி என்ற காப்பியத்தின் கதை சுவாரசியமாக இருந்தது. அமைச்சரின் மகள் ஒரு கள்வன் கொலைக்களத்துக்கு இழுத்துச் செல்வதை மாளிகை உப்பரிகையிலிருந்து பார்க்கிறாள். கண்டவுடன் அவன் மேல் மோகம் கொள்கிறாள். தந்தையிடம் சென்று அவனை எப்படியாவது விடுவிக்க வேண்டும் என்று கோருகிறாள். மேலும் அவனையே மணப்பேன் என்று உறுதிபடக் கூறுகிறாள். தந்தையும் அரசனிடம் பேசி கள்வனை விடுவிக்கிறார். மகளின் விருப்பப்படியே அவனுக்கே மணம் செய்து தருகிறார். சிறிது காலம் அவர்கள் வாழ்க்கை இன்பமாகக் கழிகிறது. ஒருமுறை பேசிக்கொண்டிருக்கும் போது
அவள் விளையாட்டாக அவனே நீ கள்வன் அல்லவா என்று சொல்லி விடுகிறாள். இது அவன் மனதைத் தைக்கிறது. இவளை எப்படியாவது பழி தீர்க்க எண்ணுகிறான். நேர்த்திக் கடன் கழிக்க வேண்டும் என்று தந்திரமாகப் பேசி அவளை மலை உச்சிக்கு இட்டுச் செல்கிறான். முகத்தில் கடுமையேற நகைகளைக் கழட்டிக் கொடு, நான் உன்னை மலையச்சியுச்சியிலிருந்து தள்ளிக் கொல்லுவேன என்கிறான். அவள் அதிர்ச்சியடைகிறாள். சமாளித்துக் கொண்டு சாவதற்கு முன் அவனை மூன்று முறை வலம் வர அனுமதி கோருகிறாள். அவனும் சம்மதிக்கிறான். மூன்றாவது முறை வலம் வரும் போது அவன் எதிர்பாராத வகையில் அவனை மலை உச்சியிலிருந்து தள்ளி விடுகிறாள். தலையைப் பனை மட்டையால் மழித்துக் கொண்டு சமணத் துறவியாகி விடுகிறாள். சிறிது காலம் சென்ற பின் கூந்தல் குண்டலம் போலச் சுருண்டு வளர்கிறது. அதனால் குண்டலகேசி ஆகிறாள். ஒரு முறை வாதத்தில் புத்தத் துறவியிடம் தோற்றுப் போகிறாள். அதன் விளைவாகப் புத்த மதத்தைத் தழுவுகிறாள். இப்படிச் செல்கிறது குண்டலகேசியின் கதை.
சிறு வயதில் மந்திரிகுமாரி என்ற திரைப்படத்தின் கதையைச் சித்தியிடம் கேட்டிருக்கிறேன். குறிப்பாக வாராய் நீ வாராய் என்ற பாடல் காட்சி. அது குண்டலகேசியின் கதையில் வருவது போலவே இருந்தது. சமீபத்தில் இந்தப் படத்தைப் பார்த்தேன். எம்.ஜி.ராம்சந்தர், எஸ்.ஏ.நடராஜன், மாதுரி தேவி, எம்.என்.நம்பியார் முக்கிய வேடமேற்று இருந்தார்கள். எஸ்.ஏ. நடராஜன் களவையும் ஒரு கலையாகக் கண்டவராக நடித்திருந்தார். பகலில் ராஜகுருவின் மகன். இரவில் கள்வன்.இவருடைய நடிப்பு எனக்குப் பிடித்தது. துடிப்பாக இருந்தார். வித்தியாசமான குரல்.நம்பியார் ராஜகுரு. இவர்களுடைய சதி வேலைகளை எதிர்த்துப் போராடும் தளபதி எம். ஜி. ராம்சந்தர். (டைட்டிலில் அப்படித்தான் போட்டிருக்கிறார்கள்).
பாடல் காட்சியைப் பாருங்கள்.
அருமையானா பதிவு.
ReplyDeleteநன்றி மதி
DeleteBeautiful writing as always.
ReplyDeleteThank you
Deleteநா எங்கியோ படிச்சிருக்கேன். குண்டலகேசிலேர்ந்து சுட்டு எடுத்ததுதான் மந்திரிகுமாரின்னு. நா கு கே யும் படிச்சதில்ல, ம கு வும் பார்த்ததில்ல. அம்மா இந்த பாட்ட ரசிச்சு சொல்லுவா. பாட்டோட முடிவு முக்யமா🤣🤣
ReplyDeleteமுழுக்க முழுக்க சுட்டதுன்னு சொல்ல முடியாது. கள்வனுக்கும் அமைச்சர் பெண்ணுக்கும் காதல். அந்த One liner
Deleteசமீபத்தில் தமிழருவி மணியன் பேச்சு கேட்டேன். அதில் உ வே சா தேடிக் கண்டுபிடித்த காப்பியம் குண்டலகேசி என்றும் அதில் 17 பாடல்கள் கிடைத்தன என்றும் சொன்னார்.இந்த பாடல் திருச்சி லோகநாதன் ஜிக்கி பாடியது. காலத்தால். அழியாத பாடல். பதிவுக்கு வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி படித்துவிட்டு எழுதியதற்கு
DeleteThe above comment sent by me
ReplyDelete