அலர் என்று ஒரு தமிழ்ச் சொல் உண்டு. அலர் என்பது மலரைக் குறிக்கும். பூ மலருவதை யார் அறிவார்? காதல் மலரும் கணம் முதலில் சம்பந்தப் பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும். பூ மலர்வதைக் காண முடியாது. ஆனால் வாசம் வந்தவுடன் ஊரார் அறிந்து கொள்வார். அது போலவே காதலும். இருவரின் காதலையும் அறிந்தவுடன் தமக்குள்ளே ரகசியமாகப் பேசிக் கொள்வர். இதனை அம்பல் என்று சொல்வார்கள். இதையே ஊரார் வெளிப்படையாகப் பேசத் துவங்குவதை அலர் தூற்றுதல் என்று குறிப்பிடுவார்கள்.
திருக்குறளில் அலர் அறிவுறுத்தல் என்று ஒரு அதிகாரமே உள்ளது.
அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப்
பலரறியார் பாக்கியத் தால்.
ஊர் பழித்தும் என் உயிர் நீங்கவில்லை. அது நான் செய்த நல்வினைப் பயன் என்று தலைவி கூறுவதாக இருக்கிறது.
நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம்.
கண்டதுவே கொண்டெல்லாரும் கூடிக்
கார்க்கடல் வண்ணனோடென் திறத்துக்
கொண்டு அலர்தூற்றிற்றது முதலாக்
கொண்டவென் காதல் உரைக்கில் தோழீ
மண்தினி ஞாலமும் ஏழ்கடலும்
நீள்விசும்பும் கழியப் பெரிதால்
தெண்திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த
தென்திருப்பேரையில் சேர்வன் சென்றே
கடல் போன்ற நிறம் கொண்ட கண்ணன் மேல் காதல் கொண்டு விட்டேன். இதை அறிந்த எல்லோரும் கூடி அலர் தூற்றுகின்றனர். தூற்றிவிட்டுப் போகட்டும். இந்த உலகம், ஏழ் கடல், மேலே விரிகின்ற ஆகாயம் இவை யாவற்றையும் விடப் பெரியது என் காதல். அலைகள் சூழ அவன் அமர்ந்திருக்கும் தென்திருப்பேரைக்கு நான் போகத்தான் செய்வேன்.
அன்னையர் கடிந்து கொண்டாலும் ஊரார் தூற்றினாலும் அவன் மேல் கொண்ட காதல் மாறாது. இப்படி உறுதிபடத் தலைவி கூறுவதாகப் பாசுரம் அமைந்திருக்கிறது.
பழந்தமிழ் இலக்கியத்திலே ஒரு பாடல் உண்டு. தலைவனுடன் தலைவி தனி வழியே போய் விட்டாள். தந்தையும் தாயாரும் உற்றாரும் நிற்கத் தனி வழி போய்விட்டாள். இந்தப் பழி வந்த பின்னால் என்ன செய்வது? தோழி இதைத் தலைவியின் தாயிடம் சென்று உரைக்கின்றாள். சொல்லும் போதே கண்ணீர் பெருகி வழிகிறது. இதற்கு தாய் பதில் கூறுவது போலப் பாடல் அமைந்திருக்கிறது.
தாயென்செய்தாள் என்று தள்ளி என்பாவை தன்பால் மயங்க
மாயம் செய்தான் ஒரு வள்ளல் பின்னே
அழல் வெஞ்சரத்துப்
போயென் செய்தாளென்று அறிகிலேன்
ஒன்றும் பொறியிலியேன்
நீயென் செய்வாள் மகளே கண்கள்
நீர்மல்க நின்று நின்றே
நான் என்ன தவறு இழைத்தேன்? என் மகள் என்னை விட்டு நீங்கி விட்டாள். அவன் என்ன மாயம் செய்து விட்டானோ? அவனோடு போய்விட்டாள். என்ன ஆனாளோ? எப்படி இருக்கின்றாளோ? நீ என்ன செய்வாய் பெண்ணே? ஏன் கண்ணீர் விடுகிறாய்?
எளிய வரிகள். எத்தனை நுட்பமாக உணர்வுகளைச் சொல்கிறது!
அருமை !
ReplyDelete- அலர்மேல் மங்கை உறைமார்பன் (ஸ்ரீநிவாசன்) :)
😊
Deleteஆஹா!!!
ReplyDeleteநன்றி
Delete