உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள்
உண்டோ சடகோபருக்கு ஒப்பு ஒருவர்—-உண்டோ
திருவாய்மொழிக்கு ஒப்புத் தென் குருகைக்கு உண்டோ
ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்
உபதேசரத்தினமாலை
சடகோபர் அந்தாதியைப் படிக்க வாய்த்தது.
கம்பன் இராம காதை எழுதி திருவரங்கத்தில் அரங்கேற்ற எண்ணுகிறான். ஒரு நாள் இரவு அரங்கன் கம்பனின் கனவில் தோன்றி நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவுகிறார். மெய் விதிர்த்துப் போன கம்பன் சடகோபன் பேரில் ஒரு நூறு பாடல்கள் இயற்றுகிறான். அதுவே சடகோபர் நூற்றந்தாதி.
வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் சொற்களை வியந்து மோற்றுகிறார் கம்பன். சில பாடல்களைப் பார்க்கலாம்.
சொல்லென்கெ னோமுழு வேதச் சுருக்கென்கெ னோவெவர்க்கு
நெல்லென்கெ னோவுண்ணு நீரென்கெ னோமறை நேர்நிறுக்குங்
கல்லென் கெனோமுதிர் ஞானக் கனியென்கெனோபுகல
வல்லென்கெ னோகுரு கூரெம்பிரான் சொன்ன மாலையையே,.
சொல்லென்பதா?
வேதத்தின் சுருக்கம் என்பதா?
உண்ணும் சோறு என்பதா?
பருகும் நீர் என்பதா?
வேதத்தை நிறுக்கும் தராசுக் கல் என்பதா?
நன்கு பழுத்த ஞானக் கனி என்பதா?
குருகூரில் அவதரித்த சடகோபன் தொடுத்த சொல் மாலை பற்றி
எனக்குச் சொல்லும் திறமை இல்லையே..
மெய்யுமெய் யாயது பொய்யும்பொய் பாயது வேறுபடுத்
துய்யுமெய் யாயவு பாயம்வந் துற்ற துறுவினையைக்
கொய்யுமெய் வாள்வல வன்குரு கைக்கர சன்புலமை
செய்யுமை யன்றனச் கேதனித் தாளன்பு செய்தபின்னே.
சடகோபனின் புலமை மெய்யை மெய்யென்று காண்பிக்கின்றது. பொய்யைப் பொய்யென்று பிரித்து உணரச் செய்கிறது. உற்ற வினையைக் கொய்யும் வாள் போலக் காண்கிறது.
இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி பொருளாய்ப் பரந்தது தான்பொது
நிற்றலின் மற்றது போன் மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாறனெங்கோன் அருளாற் சமயமெல் லாம்பர னுண்டென் றறிவுற்றதே
இருள் சூழ்ந்த இந்த உலகத்தின் பொருட்கள் கதிரவன் எழுந்ததும் ஒவ்வொன்றும் துலக்கம் பெறுகிறது. அது போலவே மயக்கம் அற்ற மாறன் அருளிய உரையில் நாராயணனே முழுமுதற் கடவுள் என்ற உண்மை புலப்படுகிறது.
எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப் புழுதியி நாற்றிட்டு வைப்பரிதாற் புகழ் மெய்ப்புலவோர் தொழுதிய நாயகனோ துங்கனற்றுறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் திருவாய்மொழி என் மனத்தவே
முன் செய்த வினையும் இங்கே இத்தனை நாட்களே வாழ்வு என்று எழுதிய விதியும் இணைந்து இப்பிறவி என்னும் புழுதியில் என்னை ஒரு நாற்றைப் போல நட்டு விட்டன.. நல்ல துறைகளும் நீரும் கொண்ட தாமிரபரணி ஓடும் திருவழுதி நாடு. அங்கே உறையும் மெய்யான புலவர்கள் வணங்கித் தொழும் மாறன் சடகோபன் அருளிய திருவாய்மொழி எனது மனதில் உறைகின்றது.
பகையாய் வருகின்ற மூன்றையும் வேரி னொடும்பறித்து
வகையாய் வருவன யாவையு மாற்றியிவ் வையமுய்யத்
தொகையா யிரங்கவி சொன்னான் பெயர்சொல்லச் சூழ்பனியின்
புகையா மிரு ள்பின்னை யெந்நாட் கழியப் புகுகின்றதே
பகையாக நமக்கு வருவது மூன்று. அவையாவன காமம், கோபம், மயக்கம். இந்த மூன்றையும் வேரோடு பறித்து எறிவதற்காக சடகோபன் சொன்ன சொல் ஆயிரம். இதை நன்கு உணர்ந்து ஓதி பனியின் புகை போலச் சூழ்ந்திருக்கும் இருள் நீங்கப் பெறுவது எந்நாளே?
சடகோபர் நூற்றந்தாதி இதுவரை படித்ததில்லை. பாடல்களும் அதன் பொருளும் அநுபவித்தேன். நன்றி. பதிவுகள் தொடரட்டும்
ReplyDeleteநன்றி ராமனாதன். நானும் இப்போது தான் படித்தேன்
DeleteThe devotional tone, metaphorical richness, and layered meaning of the original verse is reflected in your interpretation. One of your best.
ReplyDeleteThank you
Deleteஅருமை !!
ReplyDeleteஅருமை !!!
ReplyDeleteநன்றி
Deleteஅழகு. முழுதும்.படிக்க ஆவலைத் தூண்டும் பதிவு👏👏
ReplyDeleteநன்றி
Delete