Skip to main content

வேதம் தமிழ் செய்த மாறன்

உண்டோ வைகாசி விசாகத்துக்கு ஒப்பு ஒருநாள்

உண்டோ சடகோபருக்கு ஒப்பு ஒருவர்—-உண்டோ

திருவாய்மொழிக்கு ஒப்புத் தென் குருகைக்கு உண்டோ

ஒரு பார் தனில் ஒக்கும் ஊர்


உபதேசரத்தினமாலை 






சடகோபர் அந்தாதியைப் படிக்க வாய்த்தது.

கம்பன் இராம காதை எழுதி திருவரங்கத்தில் அரங்கேற்ற எண்ணுகிறான். ஒரு நாள் இரவு அரங்கன் கம்பனின் கனவில் தோன்றி நம் சடகோபனைப் பாடினையோ என்று வினவுகிறார். மெய் விதிர்த்துப் போன கம்பன் சடகோபன் பேரில் ஒரு நூறு பாடல்கள் இயற்றுகிறான். அதுவே சடகோபர் நூற்றந்தாதி.


வேதம் தமிழ் செய்த மாறன் சடகோபனின் சொற்களை வியந்து மோற்றுகிறார் கம்பன். சில பாடல்களைப் பார்க்கலாம்.



சொல்லென்கெ னோமுழு வேதச்‌ சுருக்கென்கெ னோவெவர்க்கு 

நெல்லென்கெ னோவுண்ணு நீரென்கெ னோமறை நேர்நிறுக்குங்‌ 

கல்லென்‌ கெனோமுதிர்‌ ஞானக்‌ கனியென்கெனோபுகல 

வல்லென்கெ னோகுரு கூரெம்பிரான்‌ சொன்ன மாலையையே,.



சொல்லென்பதா?

வேதத்தின் சுருக்கம் என்பதா?

உண்ணும் சோறு என்பதா?

பருகும் நீர் என்பதா?

வேதத்தை நிறுக்கும் தராசுக் கல் என்பதா?

நன்கு பழுத்த ஞானக் கனி என்பதா?

குருகூரில் அவதரித்த சடகோபன் தொடுத்த சொல் மாலை பற்றி

எனக்குச் சொல்லும் திறமை இல்லையே..


மெய்யுமெய்‌ யாயது பொய்யும்பொய்‌ பாயது வேறுபடுத்‌ 

துய்யுமெய்‌ யாயவு பாயம்வந் துற்ற துறுவினையைக்‌ 

கொய்யுமெய்‌ வாள்வல வன்குரு கைக்கர சன்புலமை 

செய்யுமை யன்றனச்‌ கேதனித் தாளன்பு செய்தபின்னே.



சடகோபனின் புலமை மெய்யை மெய்யென்று காண்பிக்கின்றது. பொய்யைப் பொய்யென்று பிரித்து உணரச் செய்கிறது. உற்ற வினையைக் கொய்யும் வாள் போலக் காண்கிறது.


இருளாய்ப் பரந்த உலகங்களை விளக்கும் இரவி பொருளாய்ப் பரந்தது தான்பொது 

நிற்றலின் மற்றது போன் மருளாய்ப் பரந்த மயக்கத் துயக்கற்ற மாறனெங்கோன் அருளாற் சமயமெல் லாம்பர னுண்டென் றறிவுற்றதே



இருள் சூழ்ந்த இந்த உலகத்தின் பொருட்கள் கதிரவன் எழுந்ததும் ஒவ்வொன்றும் துலக்கம் பெறுகிறது. அது போலவே மயக்கம் அற்ற மாறன் அருளிய உரையில் நாராயணனே முழுமுதற் கடவுள் என்ற உண்மை புலப்படுகிறது.



எழுதிய நாளும் வினையும் தொகுத்தெம்மை இப்பிறவிப் புழுதியி நாற்றிட்டு வைப்பரிதாற் புகழ் மெய்ப்புலவோர் தொழுதிய நாயகனோ துங்கனற்றுறை நீர்ப் பொருநை வழுதி நன்னாடன் திருவாய்மொழி என் மனத்தவே 


முன் செய்த வினையும் இங்கே இத்தனை நாட்களே வாழ்வு என்று எழுதிய விதியும் இணைந்து இப்பிறவி என்னும் புழுதியில் என்னை ஒரு நாற்றைப் போல நட்டு விட்டன.. நல்ல துறைகளும் நீரும் கொண்ட தாமிரபரணி ஓடும் திருவழுதி நாடு. அங்கே உறையும் மெய்யான புலவர்கள் வணங்கித் தொழும் மாறன் சடகோபன் அருளிய திருவாய்மொழி எனது மனதில் உறைகின்றது.


பகையாய்‌ வருகின்ற மூன்‌றையும்‌ வேரி னொடும்‌பறித்து 

வகையாய்‌ வருவன யாவையு மாற்‌றியிவ்‌ வையமுய்யத்‌ 

தொகையா யிரங்கவி சொன்‌னான்‌ பெயர்சொல்லச்‌ சூழ்பனியின்‌ 

புகையா மிரு ள்பின்னை யெந்நாட்‌ கழியப்‌ புகுகின்‌றதே



பகையாக நமக்கு வருவது மூன்று. அவையாவன காமம், கோபம், மயக்கம். இந்த மூன்றையும் வேரோடு பறித்து எறிவதற்காக சடகோபன் சொன்ன சொல் ஆயிரம். இதை நன்கு உணர்ந்து ஓதி பனியின் புகை போலச் சூழ்ந்திருக்கும் இருள் நீங்கப் பெறுவது எந்நாளே?




Comments

  1. சடகோபர் நூற்றந்தாதி இதுவரை படித்ததில்லை. பாடல்களும் அதன் பொருளும் அநுபவித்தேன். நன்றி. பதிவுகள் தொடரட்டும்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராமனாதன். நானும் இப்போது தான் படித்தேன்

      Delete
  2. The devotional tone, metaphorical richness, and layered meaning of the original verse is reflected in your interpretation. One of your best.

    ReplyDelete
  3. அழகு. முழுதும்.படிக்க ஆவலைத் தூண்டும் பதிவு👏👏

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...