நான் ஹிந்தி மொழியைக் கற்றது பெரும்பாலும் ஹிந்தித் திரைப்படங்கள் மற்றும் பாடல்கள் வழியாகத்தான். எங்கே உருது கலந்திருக்கும் என்று நான் அறிந்ததில்லை. ஆறு வருடங்கள் வட இந்தியாவில் இருந்திருக்கிறேன். நான் ஹிந்தி பேசுவது திரைப்படத்தில் பேசுவது போல இருக்கிறது என்று அங்கு உள்ளவர்கள் சொல்வார்கள். எங்கு சென்றாலும் நான் நட்பு பாராட்டுவது கடைநிலை ஊழியர்களோடு. அவர்களுடனான நட்பு எனக்கு மிகவும் உதவிகரமாகவே இருந்திருக்கிறது.
ஒருமுறை கடவுளைக் குறிப்பதற்கு குதா என்ற வார்த்தையைப் பயன்படுத்தினேன். ஜெனரேட்டரை இயக்கும் பையன் என்னைக் கடிந்து கொண்டான். குதா என்று சொல்லாதீர்கள். பகவான் என்று சொல்லுங்கள் என்று சொன்னான். எனக்கு அப்போது புரியவில்லை. இப்போது புரிகிறது. குதா என்பது உருதுச் சொல். கடுமைக்குக் காரணம் அது தான்.
எழுபது காலக் கட்டங்களில் பெரிதும் விரும்பிக் கேட்டது ஹிந்தித் திரைப்படப் பாடல்கள் தான். அதிலும் ஆர் டி பர்மன் இசையில் கிஷோர் குமார் பாடலைக் கேட்டால் மனம் கனவுலகில் சஞ்சரிக்க ஆரம்பித்து விடும். இசையும் குரலும் மனதில் உணர்ச்சிகளை மீட்டி விடும். இளமை தரும் மனவெழுச்சி எல்லாம் வார்த்தைகள் காட்டி விடுமா?
குறிப்பாக ஒரு பாடல். ஓ மேரே தில் கே செய்ன் என்று துவங்கும். பாடல் துவக்கத்தில் ஓரு இதமான ஹம்மிங். நெஞ்சில் பரபரவென்று ஒரு பரவசம் ஓட ஆரம்பிக்கும். மெல்ல மெல்லப் பாடல் நம்மை உள்ளே இழுக்கும்.
கேளுங்களேன்.
பாடல் வரிகள் பொருளறிவதற்காகக் கீழே தமிழில் தந்திருக்கிறேன். உருது கலக்காமல் ஹிந்தி வார்த்தைகள் இல்லை. உருது சேராத காதல் பாட்டில் உயிர் இல்லை. இந்தப் பாடலில் கூட உருது வார்த்தைகள் உண்டு. அர்மான், தரானா இப்படி எல்லாம். பாடலுக்கு அழகு சேர்க்கும் அவை.
எனது நெஞ்சுக்கு நிம்மதியே
நீயே நெஞ்சில் வர வேண்டும்
இப்படி நீயே வேண்டிக் கொள்
உனது நிழலை நீயே கண்டு
ஏனோ நாணுகிறாய்
எனது உயிரே எனது உலகே
முதல் படியிலேயே
ஏன் அஞ்சுகிறாய்
எனது நிலையை யோசித்தாயா?
அப்படி பெருமூச்சு விடாதே
உன்னை உன் பெயரை நான் அடைய வேண்டும்
இதுவே எனது கீதம் ஆகும்
தாழ்ந்த இமைகள் கீழே அல்லால்
ஏது எனக்கு உறைவிடம் ஆகும்
உன்னை அல்லால் வேறொருவர் என் கண்ணில் பொருந்துவதில்லை
இதயம் உன்னையே விரும்பும் போது
நான் என்ன செய்வேன் இப்போது
இடறிக் கீழே விழுந்தாலும்
சமாளித்து நானே எழுந்து விடுவேன்
உன் கைகள் என்னைப் பற்றி விட்டாலோ
இந்த உலகத்தையே மாற்றி விடுவேன்
உலகின் நன்மை வேண்டித்தான்
உந்தன் கைகளைக் கேட்கின்றேன்
முடிவு இப்போது உன் கையில்
எனது நெஞ்சுக்கு நிம்மதியே
What I love most about the song is the gentle guitar strums and the soft background that keep the focus on Kishore’s voice. The shift between longing and reassurance comes through so beautifully. Nostalgic ride!
ReplyDeleteThe fleeting sound of santoor is what intrigues me the most
ReplyDeleteNow I'll have to listen to it again :) You should add the musical experience too in future posts.
DeleteI thought that would interfere with the individual listening experience
ReplyDeleteஅருமையான பாட்டு. குரல் இசை பிரமாதம். பாட்டின் பொருள் பற்றி யோசித்ததில்லை. தற்போதுதான் பொருள் தெரிகிறது. ரசித்தேன்.
ReplyDeleteநன்றி ராமனாதன்
Delete