Skip to main content

மரணம் என்பதும் தற்செயல்

 எழுபதுகளில் கேட்டது பெருமளவில் ஹிந்திப் பாடல்கள். அதில் ஆஷாவின் பாடல்களும் உண்டு. பெரிதும் ஆடல் நங்கைகளுக்கு அவர் பாடுவார். கதாநாயகிக்கு அவருடைய அக்கா பாடுவார். ஒரு பாடல் பியா தூ அப் தூ ஆஜா என்று. ஆர் டி பர்மனின் இசை. 

திகில் இசையுடன் துவங்கும். பன்னிரண்டு மணி அடிக்கும். டிரம்பட் போன்ற வாத்தியங்கள் ஆசையில் முழங்கும். ஆஷாவின் பெருமூச்சுக்கள் இந்தப் பாடல் முழுதும் கலந்திருக்கும். இளைஞர்களின் இதயத் துடிப்பு எகிறி விடும்.




அதே ஆர் டி பர்மனின் இசையில் இவர் பாடிய தம் மாரோ தம் என்ற பாடல் உலகப் பிரசித்தம். Gay abandon. அது தான் இந்தப் பாடல். ஜெயகாந்தன் பற்றி ஒரு டாகுமெண்டரி எடுக்கப் பட்டது. அதில் ஒரு காட்சி. மேல் துண்டை தலையில் முண்டாசாகக் கட்டியிருப்பார். மனிதர் ஆனந்தமாகப் புகையை இழுத்து விடுவார். தம் மாரோ தம் என்று பாடுவார். ஜெயகாந்தன் வரை போய்ச் சேர்ந்திருக்கிறது அந்தப் பாடல்.




ஜவானி திவானி என்று ஒரு படம். கல்லூரி மாணவ மாணவிகளின் ஆதரவோடு பிரமாதமாக ஓடியது மதுரையில். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட். எல்லாப் பாடல்களிலும் ஆஷாவின் பங்கு உண்டு. ஜானே ஜா.. நஹி நஹி என்ற பாடல்களைத் தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் கொண்டாடின. வசதி படைத்தவர்கள் இசைத் தட்டை வாங்கி வீடுகளில் சுழல விட்டார்கள்.


அனிதா இளம் மனைவி என்று சுஜாதா ஒரு கதை எழுதினார். எனது நினைவில் கணேஷ் என்று பின்னாளில் புகழ் பெறப் போகும் கதாபாத்திரம் இந்தக் கதையில் தான் அறிமுகம். சம கால விஷயங்களை சுஜாதா இயல்பாகக் கொண்டு வருவார். அது தேர்தல் நேரம். சுஸ்தி பஸ்தி என்று துல்லியமான எதுகையில் இந்திராவிற்கு எதிராகப் பாடிக் கொண்டிருந்தார்கள் என்று எழுதுவார். அதே போல கர் லே பியார் கர் லே என்று டீக்கடை அலறியது என்று எழுதுவார். அது சச்சா ஜூட்டா என்ற திரைப்படத்தில் ஆஷா பாடியது


தனிப்பட எனக்குப் பிடித்த பாடல் ஒன்று. இசையமைத்தது ஆர் டி பர்மன் அல்ல. ரவி.ஆஷாவுடன் இணைந்து மஹேந்திர கபூர் பாடியிருப்பார். அது ஜிந்தகி இத்தேஃபாக் ஹை என்ற பாடல். எளிமையும் அழகும் பொருளும் கூடிய வரிகள். பாடல் புரிவதற்காக தமிழில் தந்திருக்கிறேன்




வாழ்க்கை என்பது தற்செயல்

நேற்றும் அது தற்செயல்

இன்றும் அது தற்செயல்

ஏதாவது பேசிக் கொண்டு

நண்பர்களோடு கூடி இரு


சில சமயம் பிரியமானவர் கூட

யாரோ போல ஆகி விடுவர்

சில சமயம் பிரியமானவர் கூட

யாரோ போல துயரம் செய்வர்

சில சமயம் ஆசையின் மாளிகை

கனவில் மினுங்கும்

சில சமயம் ஆசையின் மாளிகை

இடிந்து நொறுங்கும்


மாறும் பருவங்கள்,

அது தண்டனை ஆகாது

துயரம் கொள்வதில் பயன் இல்லை

எனவே துயரம் கொள்ளாதே 

உனது மகிழ்ச்சிக்கு இன்று

எல்லை காணாதே


ஒவ்வொரு மகிழ்ச்சியும் தற்செயல்

நேற்றும் அது தற்செயல்

இன்றும் அது தற்செயல்

வாழ்க்கை என்பது தற்செயல்


எதையோ இழந்தது போல்

ஏன் இருக்கிறாய்?

உன் கண்கள் யாரைத் தேடுகிறது?

முன்பு எனக்குத் தெரியவில்லை 

இப்போது எல்லாம் புரிகிறது

அன்பு என்பது பின்பு ஒரு நாள்

துன்பத்திலேயே முடிகிறது

இதயம் தழுவும் வண்ணக் கண்கள்

பின்பு யாரோ போல ஆகிறது

நண்பர்கள் யாரோ ஆகிவிட்டால்

அன்பும் கடியது ஆகிவிட்டால்

பொறுமை கொள்

புகார் செய்யாதே

எனது அன்பே!

புன்னகை செய்தபடி

எல்லாக் கண்களையும் ஏறிட்டுப் பார்


நட்பு என்பதும் தற்செயல்

நேற்றும் அது தற்செயல்

இன்றும் அது தற்செயல்

வாழ்க்கை என்பது தற்செயல்


இப்படி எழுதிய சாஹிர் லுத்யான்வி ஐம்பத்தொன்பது வயதில் மறைந்தார். மாரடைப்பு. அதுவும் ஒரு தற்செயல்.



Comments

  1. 👌 நல்ல நினைவஞ்சலி.
    தமிழிலும் குறிப்பிடத்தக்க பாடல்கள் உண்டு.
    நேருக்கு நேர் பட எங்கெங்கோ என்ற பாடலும் அதில் ஒன்று என எண்ணுகிறேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் உண்டு. ஹிந்திப் பாடல்களோடு நிறுத்திக் கொண்டேன்.

      Delete
  2. கண்ணன்April 15, 2026 at 4:06 PM

    chutalia he tum ne ho மற்றுமோர் அற்புத பாடல் என் பள்ளி நாட்களில் கேட்டு ரசித்து இருக்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. ஆமாம். துவக்கத்தில் வரும் கிதார் மறக்க முடியாது

      Delete
  3. அருமையான நினைவஞ்சலி
    மூன்று பாடல்களும் கேட்டேன். தமிழாக்கம் நல்ல கருத்துள்ளதாக இருந்தது.நினைவுகள் நிறைய பின்னோக்கி நகர்ந்தன. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ராம். குறிப்பாகத் தமிழாக்கத்தைக் கவனித்துப் படித்துச் சொன்னதற்கு

      Delete
  4. எனக்கு ஹிந்தி பாடல்கள் பரிச்சயம் கம்மி. ஆனால் ஒன்று ஞாபகம் இருக்கிறது. நேருநகர், தேன்மொழி ஆத்ல, அண்ணா முதன் முதலில் டேப் ரெக்கார்டர் வாங்கினான். நான் அப்ப ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்ப ஹம் கிஸிஸே கம் நஹி பாடல்கள் ஹிட். அந்த பாடல்கள் லூப்ல ஓடிண்டே இருக்கும் . அத ரசிக்கற அண்ணாவல்லாம் ஆச்சரியமா பெருமையா பார்த்துண்டு இருப்பேன். அண்ணாதான் ஹீரோ அப்ப எனக்கு.


    வசந்த் இல்லாமல் வந்த முதல் மற்றும்.ஒரே நாவல்னு நினைக்கிறேன் அனிதா இளம் மனைவி. ராணி முத்துல வந்தது. இது எப்படி இருக்குன்னு ஜெய் நடிச்சு வந்ததுன்னு நினைக்கறேன்.

    எதோ ஓரளவு ஞாபகத்ல எழுதறேன். உன்னய மாதிரி பூர்வ ஜென்மம்லாம் நினைவில் வச்சுக்கறது சாத்தியமே இல்ல.😀

    ReplyDelete
    Replies
    1. Bentek என்று எழுதியிருக்கும் அந்த டேப் ரிகார்டர் மேலே. வாசனையாக இருக்கும். ஹம் கிஸிஸே கம் நஹி பாடல்கள் கேட்டது நினைவில் இருக்கிறது.

      Delete
  5. மொழி பெயர்ப்புக்கு உன்கிட்ட டிப்ஸ் எடுத்துக்கனும். எனக்கும் ஆசையா இருக்கு முயற்சி பண்ண, அவ்வளவு திருப்தியா வரலை

    ReplyDelete
  6. முயற்சியை விட வேண்டாம்

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

தாயே உன்னை வணங்குகிறேன்

 தாயே உன்னை வணங்குகிறேன் நீரின் தூய்மை கனியின் இனிமை குளிர்ந்த காற்று பயிரின் பசுமை எல்லாம் நீயே  தாயே உன்னை வணங்குகிறேன் வெண்ணிற நிலவில் சிலிர்க்கும் இரவு மலரும் பூக்கள் மரங்களின் அழகு மென்னகை புரிவாய் இன்சொல் அருள்வாய் சுகமே தருவாய் வரமே அருள்வாய் தாயே உன்னை வணங்குகிறேன் கோடி கோடி கண்டங்கள் ஒலியின் ஆரவாரம் கோடி கோடியாய் கூர்வாள் ஏந்தும் கைகள் அபலை என்று யார் உன்னைச் சொல்வார் பெருவலி கொண்டு எமைக் காப்பவள் நீ எதிரியின் படைகள் பொடிப் பொடியாக்கும்  தாயே உன்னை வணங்குகிறேன் நீயே வித்தை நீயே தருமம் நீயே இதயம் நீயே ஜீவன் நீயே என் உயிர் மூச்சு என் கரங்களின் சக்தி இதயத்தில் பக்தி கோயில் தோறும்  விளங்கும் சிலை நீ தாயே உன்னை வணங்குகிறேன் பத்துக் கைகள் கொண்ட துர்க்கை தாமரை மலரில் அருளும் இலக்குமி ஞானம் வழங்கும் தெய்வ வாணி நிகரில்லாத் தூய்மை திகழும் செழுமை போற்றினேன் உன்னை தாமரை தன்னை நீரின் தூய்மை கனியின் இனிமை தாயே உன்னை வணங்குகிறேன் வந்தே மாதரம் பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய வங்க மொழிப் பாடல். இதை மகாகவி பாரதி இரண்டு விதமாக மொழியாக்கம் செய்திருக்கிறார். இரண்டையும் பல முறை ...

இருவராய் வந்தார்

  மை வண்ண நறும் குஞ்சி குழல் பின் தாழ மகரம் சேர் குழை இரு பாடு இலங்கி யாட எய் வண்ண வெஞ்சிலையே துணையா இங்கே இருவராய் வந்தார் என் முன்னே நின்றார் கை வண்ணம் தாமரை வாய் கமலம் போலும் கண் இணையும் அரவிந்தம் அடியும் அஃதே அவ்வண்ணத்தவர் நிலைமை கண்டும் தோழி! அவரை நாம் தேவர் என்று அஞ்சினோமே  திருநெடுந்தாண்டகம்  திருமங்கையாழ்வார் குறிப்பு தாண்டகம் என்பது ஒரு பா வகை. குறுந்தாண்டகம் ஆறு சீர்களில் பயின்று வரும். நெடுந்தாண்டகம் எட்டு சீர்களில் பயின்று வரும். மேலே காண்பது நெடுந்தாண்டகம்.  பொருள் கொள்வதற்கு வசதியாக நாம் பிரித்து பிரித்து எழுதியிருக்கிறோம்.  ஆனால் உண்மையில் சீர் வருமாறு பிரிக்கப்பட வேண்டும். மைவண்ண/ நறுங்குஞ்சி/ குழல்பின்/தாழ  4 சீர் மகரஞ்சேர்/ குழையிருபாடு/ இலங்கி /ஆட.  4 சீர் ஆக  மொத்தம் எட்டு சீர் இது போல அடுத்த வரி அடுத்த வரி என்று நான்கு வரிகள் வரும். ஆழ்வார் நாயகி பாவத்தில் தன் தோழியுடன் பேசுவதாக இந்தப் பாசுரம் அமைந்திருக்கிறது. கையில் சிலையேந்தி வரும் இருவர் யாரென்று சொல்லத் தேவையில்லை. She says to her friend Hair fragrant and black ink in col...

உன்னிடத்தில் என்னை

 அது 1978ம் வருடம். நல்ல சினிமா மேல் தாகம் கொண்டு அலைந்தார்கள் சில சினிமாக் கலைஞர்கள். அதில் ஒரு இளைஞர் ருத்ரய்யா. சினிமாவைப் பற்றி தெரிந்தவர். இவருடைய முயற்சிக்கு வளர்ந்து வரும் நடிகர்களான கமல்ஹாஸன் ரஜனிகாந்த் மற்றும் ஸ்ரீப்ரியா கை கொடுத்தார்கள். அவர் எடுத்த திரைப்படம் அவள் அப்படித்தான். அதில் ஒரு வசனம் வரும்.  யாரு, அந்த மச்சானப் பாத்தீங்களா ஜானகியா? என்று ஒரு கதாபாத்திரம் கேட்கும்.இந்தக் கேள்விக்கு மறுமொழியாக இல்ல.. சிங்காரவேலனே தேவா ஜானகி. என்று ஒரு கதாபாத்திரம் சொல்லும். அவரவர் பார்வை. அவரவர் ரசனை.  சிங்கார வேலனே தேவா பாடலை மிகச் சிறிய வயதில் கேட்டிருக்கிறேன். இந்தப் பாடலில் பாடும் குரலோடு நாதசுரமும் சேர்ந்து இசைக்கும். அது எப்படி இருக்கும்? தேனோடு சேர்ந்த தெள்ளமுது. கோல நிலவோடு சேர்ந்த குளிர்த் தென்றல். அப்படி இருக்கும். பாடல் Crescendo என்ற நிலையை அடையும். ஒவ்வொரு பூ. ஒவ்வொரு ஸ்வரம். தொடுத்து உள்ளங்கையில் எடுத்த மல்லிகைச் சரம்.எது பாடகியின் குரல். எது நாதசுரம். பிரித்து அறிய முடியாது. தேனோடு சேர்ந்த தெள்ளமுது. இப்படிச் சொல்லிப் பாருங்கள். இனிக்கும். பாடகி யாரென்று...