எழுபதுகளில் கேட்டது பெருமளவில் ஹிந்திப் பாடல்கள். அதில் ஆஷாவின் பாடல்களும் உண்டு. பெரிதும் ஆடல் நங்கைகளுக்கு அவர் பாடுவார். கதாநாயகிக்கு அவருடைய அக்கா பாடுவார். ஒரு பாடல் பியா தூ அப் தூ ஆஜா என்று. ஆர் டி பர்மனின் இசை.
திகில் இசையுடன் துவங்கும். பன்னிரண்டு மணி அடிக்கும். டிரம்பட் போன்ற வாத்தியங்கள் ஆசையில் முழங்கும். ஆஷாவின் பெருமூச்சுக்கள் இந்தப் பாடல் முழுதும் கலந்திருக்கும். இளைஞர்களின் இதயத் துடிப்பு எகிறி விடும்.
அதே ஆர் டி பர்மனின் இசையில் இவர் பாடிய தம் மாரோ தம் என்ற பாடல் உலகப் பிரசித்தம். Gay abandon. அது தான் இந்தப் பாடல். ஜெயகாந்தன் பற்றி ஒரு டாகுமெண்டரி எடுக்கப் பட்டது. அதில் ஒரு காட்சி. மேல் துண்டை தலையில் முண்டாசாகக் கட்டியிருப்பார். மனிதர் ஆனந்தமாகப் புகையை இழுத்து விடுவார். தம் மாரோ தம் என்று பாடுவார். ஜெயகாந்தன் வரை போய்ச் சேர்ந்திருக்கிறது அந்தப் பாடல்.
ஜவானி திவானி என்று ஒரு படம். கல்லூரி மாணவ மாணவிகளின் ஆதரவோடு பிரமாதமாக ஓடியது மதுரையில். ஆர் டி பர்மன் இசையில் அனைத்துப் பாடல்களும் ஹிட். எல்லாப் பாடல்களிலும் ஆஷாவின் பங்கு உண்டு. ஜானே ஜா.. நஹி நஹி என்ற பாடல்களைத் தமிழ் நெஞ்சங்கள் எல்லாம் கொண்டாடின. வசதி படைத்தவர்கள் இசைத் தட்டை வாங்கி வீடுகளில் சுழல விட்டார்கள்.
அனிதா இளம் மனைவி என்று சுஜாதா ஒரு கதை எழுதினார். எனது நினைவில் கணேஷ் என்று பின்னாளில் புகழ் பெறப் போகும் கதாபாத்திரம் இந்தக் கதையில் தான் அறிமுகம். சம கால விஷயங்களை சுஜாதா இயல்பாகக் கொண்டு வருவார். அது தேர்தல் நேரம். சுஸ்தி பஸ்தி என்று துல்லியமான எதுகையில் இந்திராவிற்கு எதிராகப் பாடிக் கொண்டிருந்தார்கள் என்று எழுதுவார். அதே போல கர் லே பியார் கர் லே என்று டீக்கடை அலறியது என்று எழுதுவார். அது சச்சா ஜூட்டா என்ற திரைப்படத்தில் ஆஷா பாடியது
தனிப்பட எனக்குப் பிடித்த பாடல் ஒன்று. இசையமைத்தது ஆர் டி பர்மன் அல்ல. ரவி.ஆஷாவுடன் இணைந்து மஹேந்திர கபூர் பாடியிருப்பார். அது ஜிந்தகி இத்தேஃபாக் ஹை என்ற பாடல். எளிமையும் அழகும் பொருளும் கூடிய வரிகள். பாடல் புரிவதற்காக தமிழில் தந்திருக்கிறேன்
வாழ்க்கை என்பது தற்செயல்
நேற்றும் அது தற்செயல்
இன்றும் அது தற்செயல்
ஏதாவது பேசிக் கொண்டு
நண்பர்களோடு கூடி இரு
சில சமயம் பிரியமானவர் கூட
யாரோ போல ஆகி விடுவர்
சில சமயம் பிரியமானவர் கூட
யாரோ போல துயரம் செய்வர்
சில சமயம் ஆசையின் மாளிகை
கனவில் மினுங்கும்
சில சமயம் ஆசையின் மாளிகை
இடிந்து நொறுங்கும்
மாறும் பருவங்கள்,
அது தண்டனை ஆகாது
துயரம் கொள்வதில் பயன் இல்லை
எனவே துயரம் கொள்ளாதே
உனது மகிழ்ச்சிக்கு இன்று
எல்லை காணாதே
ஒவ்வொரு மகிழ்ச்சியும் தற்செயல்
நேற்றும் அது தற்செயல்
இன்றும் அது தற்செயல்
வாழ்க்கை என்பது தற்செயல்
எதையோ இழந்தது போல்
ஏன் இருக்கிறாய்?
உன் கண்கள் யாரைத் தேடுகிறது?
முன்பு எனக்குத் தெரியவில்லை
இப்போது எல்லாம் புரிகிறது
அன்பு என்பது பின்பு ஒரு நாள்
துன்பத்திலேயே முடிகிறது
இதயம் தழுவும் வண்ணக் கண்கள்
பின்பு யாரோ போல ஆகிறது
நண்பர்கள் யாரோ ஆகிவிட்டால்
அன்பும் கடியது ஆகிவிட்டால்
பொறுமை கொள்
புகார் செய்யாதே
எனது அன்பே!
புன்னகை செய்தபடி
எல்லாக் கண்களையும் ஏறிட்டுப் பார்
நட்பு என்பதும் தற்செயல்
நேற்றும் அது தற்செயல்
இன்றும் அது தற்செயல்
வாழ்க்கை என்பது தற்செயல்
இப்படி எழுதிய சாஹிர் லுத்யான்வி ஐம்பத்தொன்பது வயதில் மறைந்தார். மாரடைப்பு. அதுவும் ஒரு தற்செயல்.
👌 நல்ல நினைவஞ்சலி.
ReplyDeleteதமிழிலும் குறிப்பிடத்தக்க பாடல்கள் உண்டு.
நேருக்கு நேர் பட எங்கெங்கோ என்ற பாடலும் அதில் ஒன்று என எண்ணுகிறேன்.
ஆமாம் உண்டு. ஹிந்திப் பாடல்களோடு நிறுத்திக் கொண்டேன்.
Delete👏Welcome back to writing.
ReplyDeleteThank you
Deletechutalia he tum ne ho மற்றுமோர் அற்புத பாடல் என் பள்ளி நாட்களில் கேட்டு ரசித்து இருக்கிறேன்
ReplyDeleteஆமாம். துவக்கத்தில் வரும் கிதார் மறக்க முடியாது
Deleteஅருமையான நினைவஞ்சலி
ReplyDeleteமூன்று பாடல்களும் கேட்டேன். தமிழாக்கம் நல்ல கருத்துள்ளதாக இருந்தது.நினைவுகள் நிறைய பின்னோக்கி நகர்ந்தன. நல்ல பதிவு வாழ்த்துக்கள்.
நன்றி ராம். குறிப்பாகத் தமிழாக்கத்தைக் கவனித்துப் படித்துச் சொன்னதற்கு
Deleteஎனக்கு ஹிந்தி பாடல்கள் பரிச்சயம் கம்மி. ஆனால் ஒன்று ஞாபகம் இருக்கிறது. நேருநகர், தேன்மொழி ஆத்ல, அண்ணா முதன் முதலில் டேப் ரெக்கார்டர் வாங்கினான். நான் அப்ப ஏழாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்ப ஹம் கிஸிஸே கம் நஹி பாடல்கள் ஹிட். அந்த பாடல்கள் லூப்ல ஓடிண்டே இருக்கும் . அத ரசிக்கற அண்ணாவல்லாம் ஆச்சரியமா பெருமையா பார்த்துண்டு இருப்பேன். அண்ணாதான் ஹீரோ அப்ப எனக்கு.
ReplyDeleteவசந்த் இல்லாமல் வந்த முதல் மற்றும்.ஒரே நாவல்னு நினைக்கிறேன் அனிதா இளம் மனைவி. ராணி முத்துல வந்தது. இது எப்படி இருக்குன்னு ஜெய் நடிச்சு வந்ததுன்னு நினைக்கறேன்.
எதோ ஓரளவு ஞாபகத்ல எழுதறேன். உன்னய மாதிரி பூர்வ ஜென்மம்லாம் நினைவில் வச்சுக்கறது சாத்தியமே இல்ல.😀
Bentek என்று எழுதியிருக்கும் அந்த டேப் ரிகார்டர் மேலே. வாசனையாக இருக்கும். ஹம் கிஸிஸே கம் நஹி பாடல்கள் கேட்டது நினைவில் இருக்கிறது.
Deleteமொழி பெயர்ப்புக்கு உன்கிட்ட டிப்ஸ் எடுத்துக்கனும். எனக்கும் ஆசையா இருக்கு முயற்சி பண்ண, அவ்வளவு திருப்தியா வரலை
ReplyDeleteமுயற்சியை விட வேண்டாம்
ReplyDelete