பெர் லாகர்க்விஸ்ட் ஸ்வீடன் தேசத்து எழுத்தாளர். அவர் எழுதிய நாவல் Barabbas. அது நோபல் பரிசு பெற்ற நாவல். சென்ற வருடம் தான் படித்தேன். பாரப்பாஸ் ஒரு கொள்ளையன். சிலுவையில் ஏற்றப்பட்டு தண்டனை பெற வேண்டியவன். பஸ்கா விருந்து நாளில் மக்கள் விரும்பினால் ஒருவரை தண்டனையிலிருந்து விடுவிக்க முடியும். பிலாத்து கேட்கும் போது எல்லோரும் நசரேயன் என்ற ஏசுவைச் சிலுவையில் ஏற்றச் சொல்லிக் கூக்குரல் இடுகிறார்கள். பிலாத்து ஏசுவைச் சுட்டிக் காட்டி இந்த மனிதன் மேல் நான் ஒரு குற்றமும் காணவில்லையே என்று சொல்கிறான். பின்பு தண்ணீர் கொண்டு வரச் சொல்லி ஒரு பாத்திரத்தில் தனது கைகளைக் கழுவிக் கொள்கிறான். நீங்கள் சொல்வதால் ஏசுவைச் சிலுவையில் ஏற்றும் தண்டனையை வழங்குகிறேன். இந்தப் பாவம் என்னைச் சேராது என்கிறான். பாரப்பாஸ் நாவல் தண்டனைக்குத் தப்பிய கொளளையனைப் பற்றியது. இதனுடைய ஆங்கில மொழிபெயர்ப்பை படித்தது பற்றியே மேலே குறிப்பிட்டிருந்தேன். பெர் லாகர்க்விஸ்டின் எழுத்து எளிமையான சொற்களால் ஆனது. ஆனால் அதனுடைய ஆழம் நம்மை எங்கோ கொண்டு அமிழ்த்தி விடும். நம்மைப் பற்றி மிகவும் யோசிக்க வைக்கும்....