இளையராஜா, மன்னிக்கவும் இசைஞானி இளையராஜாவுக்கு பாராட்டு விழா நடந்தது. அரசே நடத்திய விழா. சிகரம் தொட்ட தமிழன் என்று அதற்குப் பெயரிட்டிருந்தார்கள். சிம்பனி என்ற மேற்கத்திய இசை வடிவத்தை உருவாக்கியதைக் கொண்டாடுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட விழா. இந்த விழாவில் பேசியவர்கள் பெரிதாக சிம்பனி பற்றிப் பேசவில்லை. உணர்ச்சிப் பெருக்கில் இளையராஜாவால் சரியாகப் பேச முடியவில்லை. இதை அவரே தனது பேச்சில் குறிப்பிட்டிருந்தார். மூகாம்பிகை மேல் கொண்ட பக்தி குடும்பத்திற்காக நேரம் ஒதுக்க முடியாமல் போனது பற்றி எல்லாம் பேசியவர் ரஜினிகாந்தோடு சேர்ந்து குடித்ததைப் பற்றிக் கூற முயன்றார். சரிவர அதைச் செய்ய முடியாமல் போனது. அவருக்கு உதவி செய்ய ரஜினிகாந்த் மன்னிக்கவும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மைக்கைப் பிடித்தார். பெருத்த ஆரவாரம். ரஜினிகாந்த் மகேந்திரன் மற்றும் இளையராஜாவோடு சேர்ந்து குடித்ததை பெருங்கூட்டத்தோடு பகிர்ந்து கொண்டார். எல்லோரும் மகிழ்ச்சி ஆரவாரம் செய்தனர். இசைதான் வாழ்வு என்று ஆனபின் இளையராஜா மிகுந்த ஈடுபாடு மற்றும் முனைப்புடன் தனது வேலையைச் செய்தார். தொடர்ந்து கற்றுக் கொண்டே இருந்தார். தனிப்ப...