Skip to main content

Posts

காந்தியோடு

  30.1.1948. மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காந்தி செல்கிறார்.  அவருக்கு இருபுறம் பெண்கள் அபா மனு. மணி 5.20. மூன்று தோட்டாக்கள். நெஞ்சில். வயிற்றில். காந்தி கீழே சரிகிறார். ஹே ராம். அவர் உதடுகளிலிருந்து வார்த்தை பிரிகிறது. காந்தியின் மறைவுச் செய்தியை அப்பா வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறார். அப்போது அவர் சென்னையில் இருந்திருக்கிறார். சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இருந்தது. அங்கே அவர் படித்துக் கொண்டிருந்த காலம் அது. பெரிய கட்டிடம். இப்போது இல்லை. காந்தி பேசும் கூட்டத்திற்கு அப்பா போயிருக்க வேண்டும். காந்தி பேசும் போது கூட்டத்தில் ஒவ்வொருவரோடும் தனியே பேசுவது போல இருக்கும். இப்படி அப்பா சொல்வார். காந்தியின் குரல் எப்படி இருக்கும் என்று நான் யோசிப்பேன். அம்மா கரம் சந்த்ர மோ...ஹனதாஸ் காந்தீ…  என்று துவங்கும் பாடலைப் பாடுவார்கள். அம்மா பாடக் கேட்டு சிறு வயதில் நானும் பாடுவேன். முழுப் பாடல் இப்போது மறந்து விட்டது. கெடுமதியாளர் தம் கொடுமைகள் சகித்தாய்… விடுதலை தந்தாய்… முடிவிலாக் கீர்த்தி கொண்டாய் பா..பூ..ஜீ.. என்றெல்லாம் வரிகள். அம்மா உருகிப் பாடுவார் மெல்ல...

மரணமில்லை பயமில்லை

  அவர் சொன்னார். பிறப்பு இறப்பு எல்லாம் வெறும் கோட்பாடுகளே  மரணமில்லை. பயமில்லை. அவை உண்மையில்லை  அவர் பெயர் திக் நியட் ஹன். வியட்நாமைச் சேர்ந்த புத்தத் துறவி. அமைதிச் செயல்பாட்டாளர். கவி. மார்ட்டின் லூதர் கிங்கால்  நோபல் அமைதிப் பரிசுக்காக பரிந்துரைக்கப்பட்டவர். திக் நியட் ஹன்னின் ஒவ்வொரு நாடியும் ஒவ்வொரு நரம்பும் வியட்நாம் போரை எதிர்த்தன. அவர் எழுதினார். இதைக் கேட்பவர்களே எனக்குச் சாட்சி இந்தப் போரை நான் ஏற்கவில்லை. ஒரு பொழுதும். ஒருபொழுதும் ஏற்க மாட்டேன். ஆயிரம் முறை இதைச் சொல்வேன். நான் கொல்லப்படுவதன் முன்பு. நான் ஒரு பறவை. தனது துணைக்காக உயிர் இழக்கும் பறவை. இந்தப் பறவையின் உடைந்த அலகுகளிலிருந்து  ரத்தம் சொட்டும். அதன் குரல் இப்படி ஒலிக்கும். எச்சரிக்கை. திரும்பிப் பார். உன்னுடைய அசலான எதிரிகள்  வன்முறை வெறுப்பு பேராசை  அவர் வியட்நாமிலிருந்து விரட்டப்படுகிறார். பிரான்ஸுக்கு புலம் பெயர்கிறார். பிளம் வில்லேஜ் என்ற இடத்தில் மடாலயத்தை நிறுவுகிறார். நடையோடு தியானம் என்ற ஒன்றை அறிமுகப்படுத்துகிறார்.  நடையும் மூச்சும் ஒத்திசைவு கொள்ள வேண்டும். ...

ஏழை படும் பாடு

  பள்ளிக்கு ஆய்வாளர் வரவிருந்தார். நான் எட்டாவது வகுப்பில் இருந்தேன். வகுப்பு ஆசிரியைக்கு ஒரு யோசனை. பாடத்திலிருந்து ஒரு பகுதியை ஆய்வாளர் முன்பு நடித்துக் காட்டலாம்  என்று. பாடப்பகுதியை நாடகமாக்கி நடித்துக் காட்டும் பொறுப்பை ஆசிரியை என்னிடம் ஒப்படைத்தார். அது ஒரு கதை. சிறு சிறு வசனங்களாகப் பிரித்து ஐந்து நிமிட நாடகமாக்க முடிந்தது. அந்தக் கதை உங்களுக்குத் தெரிந்திருக்கலாம். சிறை வாசம் முடிந்து அந்த ஊருக்கு வருகிறான் அவன். செய்த குற்றம் ரொட்டித் துண்டை திருடியது. வெகு தூர நடைக்கும் பின் அங்கு வருகிறான். களைத்திருக்கிறான். பசித்திருக்கிறான். கடுங் குளிர். எங்கும் தங்க இடமில்லை. இல்லை.. இடம் தர மனமில்லை. பசிக்கு உணவு தருவாரில்லை. காரணம் அவன் சிறையிலிருந்து மீண்ட குற்றவாளி. நாயைப் போல விரட்டப்படுகிறான். இறுதியில் ஒரு வீட்டை அடைகிறான். தள்ளியவுடன் கதவு திறக்கிறது.  உள்ளே இருப்பது ஒரு பாதிரியார். அவருடைய சகோதரி. உதவிக்கு இருக்கும் ஒரு பெண்மணி. பெண்கள் அவன் தோற்றத்தைக் கண்டு அஞ்சுகிறார்கள். பாதிரியாரோ நெடுநாள் பழகிய நண்பனிடம் பேசுவது போல பேசுகிறார். அவன் இரவு தங்க இடமும் உணவும் க...

என்னோடு இரு என்றும்

  அது நூற்றாண்டுப் பழமையான பாடல். மகாத்மா காந்திக்கு மிகவும் பிடித்த பாடல்.  என்னோடு என்றும் இரு (Abide with me) என்ற பாடல்.குடியரசு தினக் கொண்டாட்டத்தின் இறுதியாக ஒரு சடங்கு நிகழும்.  அது Beating Retreat என்பது. அப்போது Abide with me  என்ற பாடலை  பாண்டு இசைப்பார்கள். அந்தப் பாடல் ஒரு பிரார்த்தனை போல ஒலிக்கும். பாடலை நான் தமிழில் இப்படி மொழிபெயர்த்தேன். என்னோடு இரு என்றும் அந்தி வேகமாகச் சாய்கிறது  இருள் அடர்ந்து கொண்டிருக்கிறது மற்றவர் உதவி தவறும் போது சுகங்கள் விட்டு விலகும் போது உதவியற்றவரின் உதவியே! ஓ! நீ என்னோடு இரு என்றும் முடியும் போது வேகத்தில் வாழ்வின் இந்தச் சிறிய தினம் அலைகள் போல உள்வாங்குகிறது  உலகின் ஆனந்தம் மங்குகிறது  அதன் பெருமைகள் மங்குகின்றன மாற்றமும்  அழிவும் எங்கும் காண்கின்றன  ஓ! நீ மாறாமல் இருக்கிறாய் என்னோடு இரு என்றும் உன்னுடைய இருப்பு கடந்து செல்லும் ஒவ்வொரு நாழிகையிலும் வேண்டும் உனது அருளே சபலத்தின் சக்தியை சாய்க்கும் உன்னைத் தவிர யார் எனக்கு வழிகாட்ட? மேகம் சூழும் போதும் கதிரொளி வீசும் போதும் என்னோடு இரு நான் எ...

ஞானக்கூத்தன்

  ஞானக்கூத்தனின் "என்  உளம் நிற்றி நீ" என்ற தொகுப்பை வாசித்தேன். பல வருடங்கள் கழித்து மதுரைக்கு வந்தேன். புத்தகக் கண்காட்சியில் அந்த கவிதைத் தொகுப்பை வாங்கினேன். ஞானக்கூத்தன் கவிதைகளில் ஓசை நயம் இருக்கும். மரபுக் கவிதைகள் போல. ஒரு சமயம் மதுரையில் இலக்கியசந்திப்பு.ஞானக்கூத்தனோடு. மேலமாசி வீதியில் ஒரு சந்து. அங்கு ஒரு வீட்டு மாடியில் நடந்தது. பதினைந்து இருபது பேர் இருந்தோம். இசகுபிசகான கேள்விகளை லாகவமாக கையாண்டார். ஏற்கனவே ஞானக்கூத்தனின் கவிதைகள் சிலவற்றோடு எனக்குப் பரிச்சயம் இருந்தது. அவையாவன... அம்மாவின் பொய்கள்  பெண்ணுடன் சினேகம் கொண்டால் காதறுந்து போகும் என்றாய் தவறுகள் செய்தால் சாமி கண்களைக் குத்தும் என்றாய் தின்பதற் கேதும் கேட்டால் வயிற்றுக்குக் கெடுதல் என்றாய் ஒருமுறை தவிட்டுக்காக வாங்கினேன் உன்னை என்றாய் எத்தனைப் பொய்கள் முன்பு என்னிடம் சொன்னாய் அம்மா அத்தனைப் பொய்கள் முன்பு சொன்ன நீ எதனாலின்று பொய்களை நிறுத்திக் கொண்டாய் தவறு மேல் தவறு செய்யும் ஆற்றல் போய் விட்டதென்றா? எனக்கினி பொய்கள் தேவை இல்லையென் றெண்ணினாயா? அல்லது வயதானோர்க்குத் தகுந்ததாய்ப் பொய்கள் சொல்லும்...

இரண்டே தீபங்கள்

யூட்யூப் ஒரு மாயம். கணத்தில் கால வெளியைக் கடந்து பின்னோக்கி இட்டுச் செல்லும் மாயம். இளமையில் நம்மோடு உறவாடிய பாடல்களை மீட்டு எடுத்து வரும் மாயம். நினைவிலிருந்து நழுவிச் சென்ற ஒரு பாடலைக் கண்டடைந்தேன். இந்தப் பாடலுக்கு இசை குமார். குமாருடைய  இசையில் ஒரு மென்மை இழையோடும். மரங்கள் அடர்ந்த காட்டின் வழியே செல்லும் ஒற்றைப் பாதை. வண்டுகளின் ரீங்காரம்.  தொலைவில் சலசலக்கும் நீரோடையின் மெல்லிய ஓசை. இப்படித்தான் குமாரின் இசையை உணர முடிகிறது. இந்தப் பாடலைக் கேளுங்கள்  

கடலில் பரந்த நிலவு

  கடல்புரத்தில். வண்ணநிலவன் எழுதிய கதை. எழுபதுகளில் கணையாழியில் தொடராக வந்திருக்கிறது. அப்போது படிக்கவில்லை. பிற்பாடு நர்மதா பதிப்பக வெளியீடாக வந்தது. அப்பொழுது வாங்கி நண்பர்கள் கூட்டமே படித்தோம். என் தங்கையும் படித்தாள். படித்ததை சில தினங்கள் முன்பு நினைவு கூர்ந்தாள். மனதிற்கு மகிழ்ச்சியாக இருந்தது. பழைய நினைவுகளில் மனம் தோய்ந்தது. வண்ணநிலவன் எழுத்து நடை எளிமையாக இருக்கும். புதிய ஏற்பாடு படிப்பது போன்ற அனுபவம் தரும். வண்ணநிலவனை ஒரு முறை தொண்ணூறுகளில் “சுபமங்களா” அலுவலகத்தில் பார்த்தேன். இளைய பாரதி அறிமுகம் செய்து வைத்தார். சிரித்தேன். வண்ணநிலவன் அதிகம் பேசவில்லை.என்னை நோக்கிப் புன்னகை செய்தார். நானும் பேசவில்லை. இளைய பாரதி பேசியபடி இருந்தார்.    மீண்டும் கடல்புரத்தின் சில பகுதிகளை வாசித்தேன். பலதும்  ஞாபகம் வந்தது. பிலோமிக் குட்டிக்காக மனம் உருகியது.  கதையில் ஒரு கட்டம். அறுப்பின் பண்டிகை வரும். கோயிலில் கொடி ஏற்றியிருப்பார்கள். சிகப்புத் துணி காற்றில் சரிகையோடு அசையும்.  பிலோமி தனித்து இருப்பாள். பண்டியலுக்கு அண்ணன் செபாஸ்டி வரவில்லை. சிநேகிதி ரஞ்சி ...

கனவுகளைப் பற்றிக் கொள்

  லாங்ஸ்டன் ஹுயூஸின் தந்தை அவர் அயல்நாடு சென்று பொறியியல் படிப்பு படிக்க வேண்டும் என்று விரும்பினார். ஹுயூஸ் கவிஞர் ஆனார். பெரும்பாலும் அது அப்படித்தான் நிகழ்கிறது.  லாங்ஸ்டன் ஹுயூஸ் ஒரு ஆப்பிரிக்க அமெரிக்கர். சுதந்திர புருஷர்.. விட்டு விடுதலையாகி சிட்டு குருவியைப் போல் நிற்க நினைப்பவர். இவர் கவிதைகளில் அதிகம் பயன்படுத்திய வார்த்தை கனவு.  கனவைப் பயன்படுத்தாத கவிஞரும் உண்டா?   பாரதி கனவு மெய்ப்பட வேண்டும் என்று சொல்லவில்லையா?  மேலும்" உண்டு உறங்கி இடர் செய்து செத்திடும் கலக மானிடப் பூச்சிகள் வாழ்க்கை ஓர் கனவிலும் கனவு" என்றும் பேசவில்லையா பாரதியின் கவிதைகள். லாங்ஸ்டன் ஹுயூஸின் கவிதைகளிலும் கனவு  என்ற வாரத்தை வருகிறது. எவ்வாறு? பார்க்கலாம். இப்போதெல்லாம் கனவு கிடைப்பதில்லை கனாக் காண்பவர்களுக்கு பாடலும் கிடைப்பதில்லை பாடுபவர்களுக்கு சில நிலப் பரப்புகளில் இருண்ட இரவும் குளிர்ந்த எஃகும் இருக்கின்றன ஆனால் கனவு வந்து விடும் மேலும் பாடல் சிறைக் கதவை உடைத்து வெளிவரும் இன்னொரு கவிதை கனவுகளை பற்றிக்கொள் இறுக ஏனென்றால் கனவுகள் இறந்து விட்டால் வாழ்க்கை  ஒரு சிறகொடி...

மணலைப் பறிக்கும் அலைகள்

 அப்போது எனக்கு   எட்டு வயதிருக்கும். சித்தி வீட்டுக்குப் போகும்போது அந்த சினிமா சுவரொட்டியைப் பார்த்தேன். அது ஓரு மலையாளப் படம். அலைகளால் கரை ஒதுக்கப்பட்டு ஒரு ஆணும் பெண்ணும் தலை குப்புறக் கிடந்தார்கள். படத்தின் பெயர் செம்மீன். பெரியவர்கள் பேசிக் கொண்டிருந்ததைப் பார்த்தால் அந்தப் படத்துக்கு அழைத்துச் செல்ல மாட்டார்கள் என்று தெரிந்தது. அந்த திரைப்படத்தைப் பார்க்க வேண்டும் என்ற ஆவல் மிகுந்தது. பெரியவன் ஆன பிறகு பார்க்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். வருடங்கள் ஓடின. பதினோராம் வகுப்பு படிக்கும்போது மறு திரையிடலில் என் நண்பன் சாரதி இந்தப் படத்தைப் பார்த்துவிட்டான். அவன் Sound of Music போன்ற படத்தை எல்லாம் ஏற்கனவே பார்த்திருந்தவன். செம்மீன் கதையை எனக்குச் சொன்னவன் அவனே.  முன்னதாக நான் சுவரொட்டியில் பார்த்தவர்கள் முறையே மது ஷீலா என்று அறிந்தேன். சத்யன் என்ற நடிகரைப் பற்றி நான் அறிந்தது சாரதியிடமிருந்து தான்.  சத்யன் போன்ற சதுர முகம் அவனுக்கு. சத்யன் போல கண்கள்.பதினாறு  வயதில் ரசனையோடு இந்தக் கதையைச் சொன்ன சாரதியின் வாழ்க்கை  அவனுடைய இருபத்து நாலு வயதில்...