30.1.1948. மாலைப் பிரார்த்தனைக் கூட்டத்திற்கு காந்தி செல்கிறார். அவருக்கு இருபுறம் பெண்கள் அபா மனு. மணி 5.20. மூன்று தோட்டாக்கள். நெஞ்சில். வயிற்றில். காந்தி கீழே சரிகிறார். ஹே ராம். அவர் உதடுகளிலிருந்து வார்த்தை பிரிகிறது. காந்தியின் மறைவுச் செய்தியை அப்பா வானொலிப் பெட்டியில் கேட்டிருக்கிறார். அப்போது அவர் சென்னையில் இருந்திருக்கிறார். சைதாப்பேட்டையில் ஆசிரியர் பயிற்சிக் கல்லூரி இருந்தது. அங்கே அவர் படித்துக் கொண்டிருந்த காலம் அது. பெரிய கட்டிடம். இப்போது இல்லை. காந்தி பேசும் கூட்டத்திற்கு அப்பா போயிருக்க வேண்டும். காந்தி பேசும் போது கூட்டத்தில் ஒவ்வொருவரோடும் தனியே பேசுவது போல இருக்கும். இப்படி அப்பா சொல்வார். காந்தியின் குரல் எப்படி இருக்கும் என்று நான் யோசிப்பேன். அம்மா கரம் சந்த்ர மோ...ஹனதாஸ் காந்தீ… என்று துவங்கும் பாடலைப் பாடுவார்கள். அம்மா பாடக் கேட்டு சிறு வயதில் நானும் பாடுவேன். முழுப் பாடல் இப்போது மறந்து விட்டது. கெடுமதியாளர் தம் கொடுமைகள் சகித்தாய்… விடுதலை தந்தாய்… முடிவிலாக் கீர்த்தி கொண்டாய் பா..பூ..ஜீ.. என்றெல்லாம் வரிகள். அம்மா உருகிப் பாடுவார் மெல்ல...