அந்தப் பாடலை சிறு வயதிலேயே கேட்டிருக்கிறேன். வானொலிப் பெட்டியிலிருந்து மெல்லக் கசிந்து வரும் அந்தப் பாடல். ஒரு மென்மையான ஆலாபனை சந்தனத்தை இழைத்தது போல. அது என்ன குரல்! என்னமாய் மனதை வருடுகிறது! பின்பு ஜல். ஜல்..ஜல்..ஜல்..ஜல்ஜல்.. என்று சலங்கையின் ஓசை. காலையும் நீயே மாலையும் நீயே என்று ஒரு மென்குரல் மனதை மயக்கும். பின்பு ஒரு தேன் குரல் பதில் போல மிழற்றும். ஒவ்வொரு வயதிலும் ஒவ்வொரு பருவத்திலும் இந்தப் பாடலைக் காது கொடுத்து கேட்பது ஒரு புது அனுபவம் தான். மேலே சொன்ன பாடல் தேன் நிலவு என்ற திரைப்படத்தில் வரும். 1962 ம் வருடம் இந்தத் திரைப்படம் வெளிவந்திருக்கிறது. ஸ்ரீதர் இயக்கம். ஏ எம். ராஜா இசையமைத்து பாடியிருந்தார். உடன் பாடியவர் எஸ்.ஜானகி. பல வருடங்கள் கழித்து மறு முறை வெளியான போது இந்தப் படத்தைப் பார்த்தேன். அப்போது தான் நான் கல்லூரிப் படிப்பை முடித்திருந்தேன். .பாடல் காட்சியில் வைஜயந்தி மாலா ஆடுவார். நாட்டியத்தில் நல்ல தேர்ச்சி பெற்றவர். பாலில் விழுந்த பழங்களைப் போலே என்று ஒரு வரி இந்தப் பாடலில் வரும். பாலைக் கறப்பது போல் அபிநயித்து ஒரு குவளையில் நிரப்புவதைப் போல...