எட்டு வயதில் டால்ஸ்டாய் அறிமுகம் ஆனார். அந்த வயதில் நூலகம் தெரியாது. சென்று புத்தகங்களைப் புரட்டி அறிந்து கொள்ள. பெரியவர்கள் யாராவது சொல்லி இருக்கலாம். அப்படியும் இல்லை. வீட்டிற்கு எதிரே நான் படித்த ஆரம்பப் பள்ளி. ஆசிரியைகள் யாரும் டால்ஸ்டாயைப் பற்றிச் சொல்லவில்லை. ராஜேந்திரன் கதை சொல்வான். அது மகாபாரதத்திலிருந்து இருக்கும். பாண்டவர் வனவாசத்தின் போது நிகழ்ந்தவையாக இருக்கும். எல்லாம் சுவாரசியமான கதைகள். எனில் முதல் முதலாக டால்ஸ்டாயை அறிந்தது ஒரு திரைப்படத்தின் முலமாக. எங்கள் வீட்டின் பின்புறம் ஒரு தியேட்டர் இருந்தது. சந்திரா டாக்கீஸ் என்று சொல்லுவோம். அங்கே குழந்தையும் தெய்வமும் என்று ஒரு திரைப்படம் வெளியானது. அதில் குட்டி பத்மினி என்று ஒரு சிறுமி இரட்டை வேடத்தில் நடித்தாள். தாயும் தந்தையும் மன வருத்தத்தில் பிரிகிறார்கள். இத்தனைக்கும் கல்லூரியில் படிக்கும் போதே காதலித்துப் பின்பு மணம் புரிந்தவர்கள். தன்மானம் உள்ள அவனால் பணக்கார வீட்டு மாப்பிள்ளையாகப் பொருந்தி வாழ முடியவில்லை பிறந்த இரட்டைக் குழந்தைகளில் ஒன்றைத் தந்தை எடுத்துச் சென்று விடுகிறான். அவள் பெயர் ...