வானில் பறக்கும் புள்ளெலாம் நான் என்று பாரதியின் பாடல் ஒன்று துவங்கும். அதன் நடுவில் கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று ஒரு வரி வரும். பாரதிக்கு ஷெல்லியைப் பிடிக்கும். அதற்கு சற்றும் குறையாமல் கம்பனைப் பிடிக்கும். அதனால் தான் வானில் பறக்கும் பறவை மண்ணில் திரியும் விலங்கு என்ற வரிசையின் நடுவில் கம்பன் உரைத்த கவியும் தானும் வேறல்ல என்று குறிப்பிடுகிறார். யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்,பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று கம்பனை முதலிடத்தில் வைத்துப் போற்றுகிறார். மேலும் தனது ஸ்வசரிதையைக் கவிதையாக வடிக்கும் போது கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததைக் கொண்டாடுகிறார். கல்வி சிறந்த தமிழ் நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு என்று மகிழ்ந்து போகிறார். கம்பனின் வரிகளில் அவர் மனம் தோய்ந்து தோய்ந்து ஆனந்தம் கண்டிருக்க வேண்டும். கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். பால காண்டத்தில் வருகிறது. முல்லையைக் குறிஞ்சி ஆக்கி, மருதத்தை முல்லை ஆக்கிப் புல்லிய நெய்தல் தன்னைப் பொரு அரு மருதம் ஆக்கி, எல்லை இ...