Skip to main content

Posts

புல்லை நகையுறுத்தி

  வானில் பறக்கும் புள்ளெலாம் நான் என்று பாரதியின் பாடல் ஒன்று துவங்கும். அதன் நடுவில் கம்பன் இசைத்த கவியெல்லாம் நான் என்று ஒரு வரி வரும். பாரதிக்கு ஷெல்லியைப் பிடிக்கும். அதற்கு சற்றும் குறையாமல் கம்பனைப் பிடிக்கும். அதனால் தான் வானில் பறக்கும் பறவை மண்ணில் திரியும் விலங்கு என்ற வரிசையின் நடுவில் கம்பன் உரைத்த கவியும் தானும் வேறல்ல என்று குறிப்பிடுகிறார்.   யாமறிந்த புலவரிலே கம்பனைப் போல், வள்ளுவர்போல் இளங்கோவைப்போல்,பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை,உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை என்று கம்பனை முதலிடத்தில் வைத்துப் போற்றுகிறார். மேலும் தனது ஸ்வசரிதையைக் கவிதையாக வடிக்கும் போது கம்பன் என்றொரு மானுடன் வாழ்ந்ததைக் கொண்டாடுகிறார்.  கல்வி சிறந்த தமிழ் நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ் நாடு என்று மகிழ்ந்து போகிறார். கம்பனின் வரிகளில் அவர் மனம் தோய்ந்து தோய்ந்து ஆனந்தம் கண்டிருக்க வேண்டும். கம்ப இராமாயணத்தில் ஒரு பாடல். பால காண்டத்தில் வருகிறது. முல்லையைக் குறிஞ்சி ஆக்கி,     மருதத்தை முல்லை ஆக்கிப் புல்லிய நெய்தல் தன்னைப்     பொரு அரு மருதம் ஆக்கி, எல்லை இ...

அலர் தூற்றுவது

 அலர் என்று ஒரு தமிழ்ச் சொல் உண்டு. அலர் என்பது மலரைக் குறிக்கும். பூ மலருவதை யார் அறிவார்? காதல் மலரும் கணம் முதலில் சம்பந்தப் பட்ட இருவருக்கு மட்டுமே தெரியும். பூ மலர்வதைக் காண முடியாது. ஆனால் வாசம் வந்தவுடன் ஊரார் அறிந்து கொள்வார். அது போலவே காதலும். இருவரின் காதலையும் அறிந்தவுடன் தமக்குள்ளே ரகசியமாகப் பேசிக் கொள்வர். இதனை அம்பல் என்று சொல்வார்கள். இதையே ஊரார் வெளிப்படையாகப் பேசத் துவங்குவதை அலர் தூற்றுதல் என்று குறிப்பிடுவார்கள். திருக்குறளில் அலர் அறிவுறுத்தல் என்று ஒரு அதிகாரமே உள்ளது. அலரெழ ஆருயிர் நிற்கும் அதனைப் பலரறியார் பாக்கியத் தால். ஊர் பழித்தும் என் உயிர் நீங்கவில்லை. அது நான் செய்த நல்வினைப் பயன் என்று தலைவி கூறுவதாக இருக்கிறது. நம்மாழ்வார் அருளிய திருவாய்மொழியில் ஒரு பாசுரம். கண்டதுவே கொண்டெல்லாரும் கூடிக் கார்க்கடல் வண்ணனோடென் திறத்துக் கொண்டு அலர்தூற்றிற்றது முதலாக்  கொண்டவென் காதல் உரைக்கில் தோழீ  மண்தினி ஞாலமும் ஏழ்கடலும் நீள்விசும்பும் கழியப் பெரிதால்  தெண்திரை சூழ்ந்தவன் வீற்றிருந்த தென்திருப்பேரையில் சேர்வன் சென்றே  கடல் போன்ற நிறம...

அன்னை இல்லம்

 அன்னை இல்லம். இந்தப் பெயரில் ஒரு திரைப்படம். எங்கள் வீட்டுக்கு அருகாமையில் ஒரு திரையரங்கம் உண்டு. அங்கே சிறு வயதில் பார்த்திருக்கிறேன். கதை அவ்வளவு ஞாபகமில்லை. ஏனோ தெரியவில்லை சிகப்பு விளக்கு எரியுதம்மா ஒரு ஜீவன் போகுது தெரியுதம்மா என்ற பாடல் ஞாபகம் இருக்கிறது. அப்போதெல்லாம் வகுப்பில் இரண்டு கட்சி உண்டு. ஒன்று எம்ஜியார் கட்சி. மற்றொன்று சிவாஜி கட்சி. நான் பின்னதில் இருந்தேன். தர்மம் தலைகாக்கும் பட போஸ்டர் ஒட்டியிருக்கும். ராஜேந்திரன் மெல்லப் போய் கண்கள் இருக்கும் பகுதியில் போஸ்டரைக் கிழிப்பான். இநே காரியத்தை ஜெயச்சந்திரன் இருவர் உள்ளம் போஸ்டரில் செய்வான்.  சிவாஜியின் இல்லத்தின் பெயர் அன்னை இல்லம் என்று அப்போதெல்லாம் தெரியாது. நடையா இது நடையா என்று சிவாஜி நடை போட்டு வந்தால் கைதட்ட வேண்டும் என்று தெரியும்.  மதுரையிலிருந்து மதராஸுக்கு KB டிராவல்ஸ் என்று ஒரு பஸ் போகும். பறவைகள் ஒலிக்கும் புலராத காலையில் சென்னை வரும். மவுண்ட் ரோடில் திடுமென திரும்பும் போது அன்னை இல்லம் காட்சி தரும்.   சமீபத்தில் சிவாஜியின் அன்னை இல்லத்தை ஜப்தி செய்ய வேண்டும் என்று நீதிமன்ற உத்த...

எது உனது ஊர்

 பல காலம் தொடர்பில் இல்லாமல் இருந்த கல்லூரி நண்பர் என்னைத் தொடர்பு கொண்டார். பல விஷயங்களை நினைவு கூர்ந்து பேசிக் கொண்டோம். எத்தனை மாறுதல்கள் கடந்து போன வருடங்களில். தோற்றம், எண்ணம், யாவும். கல்லூரியில் அனைவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட ஃபோட்டோ என்னிடம் இல்லை. அவரிடம் இருந்தது. எனக்கு ஞாபகம் இருந்த பல விஷயங்கள் அவரது நினைவில் இல்லை. ஓரு கேள்வி கேட்டார். உனது சொந்த ஊர் எது என்று கேட்டால் என்ன சொல்வாய்?  சட்டென்று பதில் சொல்ல முடியவில்லை. எனது சொந்த ஊர் என்று சொல்ல நினைத்த ஊரில் சொந்தம் என்று சொல்லக் கூடிய யாரும் இல்லை. எல்லோரும் வேறு இடத்தில். நான் இப்போது இருப்பதோ வேறு மாநிலத்தில். யோசித்துப் பார்த்தால் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை எனது ஊர் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒரே ஊரில் நிலைத்து இருப்பவர்கள் பாக்கியவான்கள் என்று சொல்லலாமா? நான்மணிக்கடிகையின் இந்தப் பாடல் நினைவுக்கு வந்தது நல்லார்க்கும் தம்மூரென் றூரில்லை நன்னெறிச் செல்வார்க்கும் தம்மூரென் றூரில்லை - அல்லாக் கடைகட்கும் தம்மூரென் றூரில்லை தங்கைத் துடையார்க்கும் எவ்வூரு மூர். . . . தன் கையில் பணம் இருந்தால் எல்லா ஊரும் ஊர்தா...

அசைவதும் அடங்குவதும் அது

  அசைவதும் அடங்குவதும் அது மரத்திலிருந்து ஒரு சிறகு உதிர்ந்தது  காற்றில் நழுவியபடி மெல்ல மெல்ல மிதந்து வந்தது அதன் நிறம் பாதி வெண்மை பாதி கருமை எத்தனை மென்மையானது அது இதோ மிதந்து மிதந்து இறங்கி தரையைத் தழுவுகிறது. இப்படியும் அப்படியுமாக லேசாக அசைகிறது அப்படியே அடங்கியது அது தி சந்தானம் 

கதவை மூடு

 ஒரு சமயம் ஏழு நாட்கள் பேசாமல் இருந்தேன். மனம் கொந்தளித்து கொந்தளித்து அடங்கியது. நுரைப் பூக்களைப் போல் வார்த்தைகள் மலர்ந்தன. மறைந்தன. இருந்தாற் போல் சிரிப்பாக வந்தது. காரணம் இல்லாமல் அழுகை வந்தது. சிரிப்பு பாதி அழுகை பாதி என்ற பாட்டு ஞாபகம் வந்தது. வார்த்தைகள் உறைந்து கிட்டித்துப் போனது. மனம் அடங்கியது போல் ஆனது. மெளனம் நல்லது. விசித்திரமானது அது.. லாவோட்சு சீனத்து அறிஞர். 2500 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்திருக்கிறார். ஞானம் உரைப்பது அவர் வார்த்தைகள். அவை எல்லாம் தாவோ தே ஜிங் என்று நூலாகத் தொகுக்கப் பட்டிருக்கிறது. சிலவற்றைப் பார்க்கலாம். கதவை மூடு தெரிந்தவன் பேச மாட்டான்  பேசுபவன் அறிய மாட்டான் திறப்பை எல்லாம் அடைத்து விடு கதவை எல்லாம் மூடி விடு கூர்மை எல்லாம் மழுங்க அடி முடிச்சை எல்லாம் நெகிழ்த்து விடு ஒளியை எல்லாம் குறைத்து விடு பழைய பாதைகளில் செல் இது தான் மர்மமான ஒருமை அதை நீ கொள்ள முடியாது அதிலிருந்து நீ தப்பவும் முடியாது அதற்குப் பயன் தர முடியாது அதனை இடர் செய்யவும் முடியாது அதனை ஏத்தவும் முடியாது தாழ்த்தவும் முடியாது அதன் ஆதிக்க எல்லை முழுதும் அது மதிக்கப்படும் தான் அ...

கண்கள் தேடும் முகம்

 தினம் தினம் நினைவுகள் எதை எதையோ மீட்டிப போகும். சிறு வயதில் ரேடியோப் பெட்டியில் ஒரு பாடலைக் கேட்டிருக்கிறேன். பாடல் வரிகள் எல்லாம் அத்தனை புரியாது. ஆனால் அந்த ராகம் தரும் குழைவு மனதில் வெகு காலம் நின்றது. வெண்ணெய் முழுதுமாக காய்ந்து நெய்யாகும் போது எழுகின்ற மணத்தைப் போல. அந்தப் பாடலின் முதல் வரிகள்.. எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே  கண்ணிரண்டும் ஓர் முகத்தையே தேடுதே இந்த இரண்டு வரிகளைத் தாண்டி பாடல் வரிகளை மனம் அறிந்ததில்லை. சில நாட்கள் முன்பு தான் இந்தப் பாடல் வரிகளை முழுதும் கவனித்துக் கேட்டேன். தேனேந்தும் மலராகி  வானேந்தும் நிலவாகி….. சிந்தை கவர்ந்திடுதே  செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால்… இப்படி எல்லாம் நெடுகிலும் உவமைகள். ஆனால் எனக்கு ஆச்சரியம் இரண்டாவது சரணத்தில் காத்திருந்தது. கனவில் கண்ட காட்சியில் மையல் தீருமா? நுரை தின்று பசி தீருமா? மலரின் நிழல் மணம் வீசுமா? முத்து மாலையின் நிழல் விலை போகுமா? இப்படி எல்லாம் கவிஞர் அடுக்கிக் கொண்டே போகிறார். பின்பு வரும் வரிகளைப் பாருங்கள். நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே நேச முகம் இரண்டும் நெருங்குமா?...

ஒன்றும் புதிதல்ல

  மரணம் தழுவுகின்ற இறுதிக் கணம். நேருவின் படுக்கைக்கு அருகே ஒரு கவிதைப் புத்தகம் இருந்தது. அது ராபர்ட் ஃப்ராஸ்ட் என்ற அமெரிக்கக் கவிஞனின் கவிதைத் தொகுப்பு. Stopping by the woods என்று ஒரு கவிதை. அதன் இறுதி வரிகள் நேருவால் அடிக்கோடு இடப்பட்டு இருந்தது. அந்த வரிகள் The woods are lovely, dark and deep But I have promises to keep  And miles to go before I sleep, And miles to go before I sleep நேருவின் மனம் நுட்பமானது. அவருக்கு வாய்த்தது கவி மனம். இயற்கை சார்ந்த ரசனை, தத்துவ விசாரம், உலகளாவிய பார்வை இவை எல்லாம் அவருக்கு இருந்தது. அவர் நிறையப் படித்தார். படிப்பு அவரது எழுத்தைச் செழுமைப் படுத்தியது. நிறைய எழுதினார். சிறை வாழ்க்கை அதற்கு உதவியது. காச நோயாளியான தனது மனைவிக்கு Pearl S Buck எழுதிய The Good Earth என்ற புத்தகத்தைப் படித்துக் காட்டும் மனிதராக அவர் இருந்தார்.  இன்று ராபர்ட் ஃப்ராஸ்டின் சில கவிதைகள் படிக்கக் கிடைத்தது. ஆங்கில மூலத்தையும் தமிழில் அதைச் செய்ததையும் கீழே தந்திருக்கிறேன். Nothing new One moment when the dust to-day Against my face was turned to spray, I dr...

கரை காணாப் பறவை

  வெங்கண்திண் களிறடர்த்தாய்  வித்துவக்கோட்டு அம்மானே! எங்குப் போய் உய்கேன் உன் இணையடியே அடையல் அல்லால் எங்கும் போய்க் கரை காணாது  எறிகடல் வாய் மீண்டேயும்  வங்கத்தின் கூம்பேறும்  மாப்பறவை போன்றேனே  குலசேகர ஆழ்வார் பெருமாள் திருமொழி பறவை ஒன்று பாய்மரக் கொடியிலிருந்து பறந்து செல்கிறது. கீழே கடல் நீர் அசைந்தபடி இருக்கிறது. எந்தப் பக்கம் பறந்தாலும் பறவையால் கரையைக் காண முடியவில்லை. மீண்டும் அது பாய்மரக் கொடியின் உச்சிக்கே வந்து சேருகிறது. அது போலவே வித்துவக்கோட்டில் உறையும் எனது இறைவனே! வலிமையான யானையைக் கொன்றவனே! உனது திருவடியை அடையாமல் நான் எங்கு சென்று வாழ்வேன்? எங்கு சுற்றி அலைந்தாலும் உன் இணையடியே வந்து சேர்வேன்.  “தருதுயரம் தடாயால் உன்சரண் அல்லால் சரண் இல்லை “என்று துவங்கி வரும் பத்து பாசுரங்களில் மேலே கண்ட பாசுரம் ஒன்று. எல்லாமே அற்புதமான பாசுரங்கள். தாய் சினந்தாலும் அவள் முழங்காலையே வந்து கட்டிக் கொள்ளும் குழந்தை. மருத்துவன் வாளால் அறுத்தாலும் சுட்டாலும் அவனையே நம்பி இருந்து அன்பு பூணும் நோயாளி. கதிரவனின் தழல் எரித்தாலும் அவனையே நோக்கி மலரும் தா...

மோகக் குழப்பம்

                                 I இரவு எங்கும் விரிந்திருந்தது மரத்தின் கிளைகள் உயர்ந்து இருந்தது இலைகள் உதிர்ந்த கிளைகளின் ஊடாக நிலவு தெரிந்தது பேரிருள் சிறு வெளிச்சத்தைத் தழுவிக் கிடந்தது நிலவில் சிறு களங்கம் ஏறி இருந்தது நிலவு சற்றே மங்கியது போல் இருந்தது “நிலவுக்குப் பின்னால் நிழல் இருக்கிறது நிழலுக்குப் பின்னால் என்ன இருக்கிறது?” என்று அவளிடம் கேட்டேன். சுடர் போலப் புன்னகை சிந்தினாள்  பின்னும் முகத்தில் அருள் காட்டினாள்  மோகமது தீர்ந்த பாடில்லை                                   II ஒரு நாள் கனவில் யமுனா வந்தாள் பாதம் வாழை இலைக் குருத்தைப் போலப் பொலிந்தது அவள் கழுத்தைச் சுற்றியிருந்த புடவையில்  சுட்டி சுட்டியாக ஈரம் சோப்பு போட்டு அலம்பிய முகம் துடைத்து விட்ட பளிங்குக் கல் போல இருந்தது நெற்றியில் பொட்டு இல்லை. நான் பாபுவைப் பற்றிக் கேட்டு இருக்கக் கூடாது யமுனாவின் தலை குனிந்தது  அவள் முகம் கட...